நூற்றுப்பத்து ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக திவ்யா சூரியதேவரா (39) நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவிக்கு ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறை. சென்னையில் பிறந்த திவ்யா, ஹார்வர்ட் வர்த்தகப் பள்ளியில் உயர் கல்வி பயின்றார். ஜெனரல் மோட்டார்ஸில் 14 ஆண்டுகளுக்கு முன்னால் சேர்ந்தார்.
அமெரிக்காவின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் ஜெனரல் மோட்டார்ஸும் ஒன்று. இதிலும் ஹெர்ஷி என்ற இன்னொரு நிறுவனத்திலும்தான் நிதி நிர்வாகத் தலைமைப் பொறுப்புக்குப் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். “திவ்யாவின் நிர்வாக அனுபவமும், தலைமைப் பண்பும்தான் கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட உதவியாக இருந்தன” என்கிறார் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா.
சென்னையில் பிறந்தது முதல் ஹார்வர்டில் உயர் கல்விக்குச் சேர்ந்தது வரையிலான தனது வாழ்க்கைப் பயணத்தை ‘ரியல் சிம்பிள்’ என்ற பத்திரிகையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் திவ்யா. மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். திவ்யாவையும் சேர்த்து மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவருடைய தாய் ஏற்றார். பெண்கள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததால் மூவரும் நன்றாகப் படித்து முன்னேற வழியேற்பட்டது.
சென்னையில் வணிகவியல் பாடத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயதில் சேர்ந்தார். சொந்த ஊரைவிட்டு வெகு தொலைவில் உள்ள பல்கலையில் சேர்ந்து படிப்பது திவ்யாவுக்கு எளிதாக இல்லை. கலாச்சார ரீதியாக அதிர்ச்சியும் இருந்தது. பட்ட வகுப்பு படித்தபோது பகுதிநேரப் பணியாளராகப் பணியாற்றிய அனுபவத்தின் பேரில், எச்பிஎஸ் நிறுவனம் அவரைத் தேர்வுசெய்தது. ஹார்வர்டில் சேர்ந்தபோது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார். படிப்புச் செலவுக்குக் கடன் வாங்கினார். எச்பிஎஸ் நிறுவனத்தில் ஓராண்டுக்கும் மேல் வேலைசெய்தார். அங்கிருந்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 25-வது வயதில் சென்றார்.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு உதவும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் ஏற்பட்ட மோட்டார் வாகனத் துறை புரட்சியைப் போல அல்லாமல், தொழில்நுட்பரீதியாக பல சவால்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அக்கால கட்டத்தில் சந்திக்க நேர்ந்தது. நிறுவனம் எடுத்த முக்கிய முடிவுகள் வெற்றியைத் தருவதில் திவ்யாவின் பங்கு கணிசமாக இருந்தது. 2015 முதல் நிறுவனத்தின் நிதி நிர்வாகத்தை திவ்யா மிகத் திறமையாகக் கையாண்டார். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான 8,500 கோடி டாலர் ஓய்வூதிய விவகாரத்தைச் சுமுகமாகத் தீர்த்தார்.
12 வயது மகளுக்குத் தாயாக இருக்கும் திவ்யா, வேலை நிமித்தமாக நியூயார்க் - டெட்ராய்ட் நகரங்களுக்கு இடையில் தினமும் சென்றுவருகிறார். அந்தப் பயண நேரத்திலேயே அலுவலக நிர்வாகம் தொடர்பான மின்னஞ்சல்களைப் படித்துப்பார்த்து நடவடிக்கைகளை எடுக்கிறார். வார விடுமுறைகளைக் குடும்பத்தாருடன் செலவழிக்க ஒதுக்குகிறார். அலுவலகம் தொடர்பான கூட்டங்களை வெகு சுருக்கமாக முடித்துவிடுகிறார். வீட்டில் சமைப்பதற்குத்தான் அவருக்கு நேரம் கிடைப்பதில்லை.
வாழ்க்கையில் இதுதான் வேண்டும் என்று எதற்கும் அவர் ஆசைப்பட்டதில்லை. ஆனால், தன்னைத் தேடிவரும் சவால்களையும் சிக்கல்களையும் எதிர்த்து வெற்றி பெறுவதிலும் தீர்ப்பதிலும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அந்தப் பண்புதான் அவருக்கு இப்படிப்பட்ட பெரிய பதவியைத் தேடித் தந்திருக்கிறது.
- தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.