சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவின் சமூக மாசின் வெளிப்பாடுதான் சுற்றுச்சூழல் மாசு!: தெருக்களை மட்டுமல்ல, மனங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்

சுந்தர் சருக்கை

மு

ன்பெல்லாம் பெங்களூரு மாநகரில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று மரங்களும் புல்வெளிகளும் தோட்டங்களுமாகக் காட்சி தரும். நகரில் பேசும் கன்னட மொழிகூட, ஒரு பதம் இன்னொரு பதத்தோடு போய் மோதாமல் இனிமையாகவும் சாவகாசமாகவும் இழையும். வீதிகளில் உள்ள குழாய்களிலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிப்போம், வீடுகளில் மின் விசிறிகளுக்கே தேவை இருக்காது. இப்போது பெங்களூரு மாநகரம் வளர்ச்சியடைந்துவிட்டது. உலகிலேயே பற்றி எரியும் முதல் ஏரி பெங்களூருவில்தான் இருக்கிறது என்று பெருமைப்படுகிறோம்!

காற்றில் மாசு அதிகரித்துவிட்டதால் ஏராளமான பேர் நோயாளிகளாகிவருகின்றனர். பொது சுகாதாரம் வீழ்ச்சியடைந்துகொண்டேவருகிறது. இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை. இந்தப் பிரச்சினைகள் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் பொதுவானவை.

ஒரு குறுகிய காலகட்டத்துக்குள் ஆரோக்கியமான பெங்களூருவிலிருந்து அசுத்தமான பெங்களூருவுக்கு எப்படி வந்தோம் என்பது தெரியவில்லை. பெரும்பாலான வளர்ச்சிகளைப் போலவே நகரின் மாற்றங்களும் ஓசையில்லாமலும், நம்முடைய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டும் நிகழ்கின்றன. சுற்றுச்சூழல் பராமரிப்பு தொடர்பான 180 நாடுகளின் பட்டியலில், இந்தியாவுக்கு 177-வது இடம். நிலம், நீர், காற்று ஆகிய மூன்றிலும் எவ்வளவு மாசும் நஞ்சும் கலந்திருக்கிறது என்பதை மட்டும் இது காட்டவில்லை, நாம் எப்படி இதில் அலட்சியம் காட்டி வருகிறோம் என்பதையும் காட்டுகிறது.

உயிரித் தொழில்நுட்பங்களால் புதிதாக உருவாகும் அசுரன்களை ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் காட்டி பயமுறுத்த வேண்டிய அவசியமே இல்லை, நேரிலேயே வந்துவிட்டார்கள். ரசாயனக் கூடங்களில் தயாரிக்கப்பட்டதைப்போன்று வினோதச் சுவையோடு இருக்கிறது நகரின் குடிநீர். எப்படி இப்படி மாறினோம்? சுற்றுச்சூழல் மட்டும் மாசுபடவில்லை, நம்முடைய சமூகமும்தான். தினந்தோறும் போக்குவரத்து சிக்னல்கள் எதிரில் மைல் கணக்கில் ஒன்றன்பின் ஒன்றாகக் கார்கள் புகையைக் கக்கிக்கொண்டு நிற்கின்றன. வளர்ச்சி என்றாலே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் எது ஆசையோ அதை நிறைவேற்றிக்கொள்வதுதான் என்று எப்படி தீர்மானித்தோம்?

ஆதிக்கசக்திகளின் அதிகாரம் இயற்கைச் சூழலையும் சமுதாயச் சூழலையும் நம்முடைய ஒப்புதல் இல்லாமலேயே மாற்றுகிறது. இதையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிடுகிறோம்.

இந்த மாற்றம், இயல்புபோல திணிக்கப்பட்டுவிட்டது. இது ஏன் என்று கேட்டால் ‘தேச விரோதி’ என்றோ ‘தொழில்நுட்ப விரோதி’ என்றோ முத்திரை குத்திவிடுகிறார்கள். இப்போது தேசமே ஒரு இயந்திரமாகத்தான் உருவகிக்கப்படுகிறது. சில பழக்கவழக்கங்களை மாற்றவே முடியாத இந்தச் சமூகத்தில், வளர்ச்சி என்றால் இதுதான் என்ற கொள்கை, எல்லா நகரங்களிலும் மாநகரங்களிலும் அங்கு வாழும் மக்களை நேரடியாகவே பாதித்தாலும், பரவிவிட்டது.

இயற்கை உலகையும், சமூக உலகையும் பாழ்படுத்தும் சூழல்களை எளிதாக இனம் கண்டுவிடலாம் என்று எவராவது நினைத்தால் அது மாபெரும் தவறு. இயற்கை உலகை மாசுபடுத்துவதற்குச் சமமானது சமூக உலகை மாசுபடுத்துவது. இது அமைதியாகவும் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாலும் நிகழ்கிறது. சமூகச் சூழலில் ஏற்படும் மாசுகள்தான் இயற்கை உலகிலும் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்று கூறிவிடலாம்.

இதில் வியப்படைய ஏதுமில்லை. இயற்கையே சமூகம்தான் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தூய்மையான இயற்கை இன்று நமக்குக் கிடைக்கவில்லை, இயற்கை தொடர்பான நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை. நாற்றமடிக்கும் குப்பைகள் வீதியில் இருப்பதைப் போல - செத்து அழுகிய பிராணிகளின் துர்நாற்றம் காற்றில் கலந்திருப்பதைப் போல, நம்முடைய சமூகத்தின் சிந்தனைகளிலும் செயல்களிலும்கூட அசுத்தங்கள் நிரம்பி வழிகின்றன. இவை எப்படி தொடங்கின, எப்படி பரவின என்றெல்லாம் நமக்குத் தெரியாது. சமூகத்தின் கண்ணியம் தகர்ந்துபோயிருப்பதும், வெறுப்பு விசிறிவிடப்படுவதும் சமூகப் பிறழ்வுகள் அல்ல, நம்மால் உணரப்படாமல் சுற்றுச்சூழலில் மாசு சேர்ந்ததைப் போலத்தான் இதுவும். துர்நாற்றம் காற்றில் எளிதாக, விரைவாக எல்லா இடங்களுக்கும் பரவுவதைப் போல சிறு அளவிலான வெறுப்புணர்வுகூட வேகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடுகிறது.

காற்று மாசு, தண்ணீர் மாசு ஆகியவற்றை அளப்பதைப் போல கண்ணியமான சமூகத்தை அளப்பதற்கும் குறியீடுகள் அவசியம். சமூக மாசை அளக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி, ‘சமூக அலட்சியக் குறியீடு’ என்பதை உருவாக்கினால் நாம் உலக அளவில் அதிலும் கடைசி இடத்தில்தான் இருப்போம். நம் நாட்டில் இருக்கும் நிலைமைக்கு ‘வெறுப்புக் குறியீடு’, ‘ஏற்றத்தாழ்வு குறியீடு’ போன்றவைகள்கூட அவசியப்படுகின்றன. இயற்கை உலகின் மாசை வெற்றிகரமாக நீக்க வேண்டும் என்றால், இது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு இணையானது என்பதை அங்கீகரிக்க வேண்டும். குப்பை மலைகள் நமக்குக் கவலையை அளிக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதைப்பற்றிய அக்கறை இல்லாத நம்முடைய சமூகப் பழக்கங்கள்தான்.

நம்முடைய சுற்றுச்சூழல் இந்த அளவுக்கு மாசு அடைந்ததற்குக் காரணம் முறையான சிந்தனை இல்லாமல் நாம் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள்தான். ஒவ்வொருவரும் சொந்தமாக கார் அல்லது பைக் வைத்திருப்பதுதான் முன்னேற்றம் என்று ஏன் நினைக்கிறோம்? நம்முடைய அன்றாட வாழ்வில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை ஏன் ‘முன்னேற்றத்துக்குத் தரும் விலை’ என்று ஏற்றுக்கொள்கிறோம்? சிந்தனையற்ற வளர்ச்சியும் சமூகச் சூழல் கேட்டுக்கு முக்கிய காரணம். விஷத்தைப் பரப்பும் செயல்களை – பேச்சுகளை எதிர்க்காமல் மவுனமாக ஏற்பதும், நமக்குத் தீங்கு செய்யும் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி முறைகளையும் ஏற்றுக்கொள்வதைப் போலத்தான்.

இயற்கைக்கும் சமூகத்துக்கும் இடையில் நாம் ஏற்படுத்தும் பெரிய இடைவெளிதான், இரண்டிலும் மாசு அதிகமாவதற்குக் காரணம் என்பதை மறந்துவிடுகிறோம். காற்றிலும் தண்ணீரிலும் கலந்த அழுக்குகளை, நச்சுகளை இயற்கையுடன் சேர்ந்து ஒரு சமூகமாகச் செயல்பட்டால் தூய்மைப்படுத்திவிட முடியும். சுற்றுச்சூழலில் ஏற்படும் தூய்மையும் தேசத்தின் சமூகத்தில் ஏற்படும் தூய்மையும் வேறல்ல!

நமக்கு ‘தூய்மை இந்தியா’ வேண்டும் என்றால், நதிகளையும் பொது இடங்களையும் தூய்மையாக்க வேண்டும் என்பதாக நம் எண்ணம் முடிந்துவிடக் கூடாது. அழுக்கான எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் கைவிட்டு நம்முடைய தெருக்களையும் கழிப்பறைகளையும் தூய்மைப்படுத்த நினைப்பதைப் போல, மனங்களையும் தூய்மைப்படுத்திக்கொண்டால்தான் அது சாத்தியம்!

- சுந்தர் சருக்கை , பெங்களூருவில் உள்ள தேசிய கல்விக் கழகத்தில் தத்துவயியல்

துறைப் பேராசிரியர்.

தமிழில்: சாரி, இந்து ஆங்கிலம்.

SCROLL FOR NEXT