சிறப்புக் கட்டுரைகள்

எத்திசையும்: கோடீஸ்வரப் பிச்சைக்காரர்

செய்திப்பிரிவு

அணுகுண்டர் மறைந்தார்!

ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய எனோலா கே விமானத்தில் இருந்த குழுவைச் சேர்ந்த தியோடர் வான் கிர்க், ஜூலை 28-ம் தேதி, தனது 93-வது வயதில் காலமானார். 1,40,000 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்ட அந்தச் சம்பவத்தின்போது, வான் கிர்க்கு வயது 24தான்.

தனது கொடுஞ்செயல் பற்றி அவர் பெரிதாக வருந்தவில்லை. “போர் நடக்கும்போது இழப்புகளைப் பற்றி வருந்திக்கொண்டிருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் பெரியவர். என்றாலும், பிரச்சினைகளுக்கு அணுகுண்டு மூலம் தீர்வுகாண முடியாது என்றும் கூறியிருக்கிறார். அவர் மறைவுக்கு எத்தனை பேர் இரக்கம் தெரிவிப்பார்கள் என்று தெரியவில்லை.

சிக்னல் கிடைக்கவில்லை சுவாமி!

இந்தியாவின் சந்துபொந்துகளிலெல்லாம் கைபேசிகள் சிணுங்குகின்றன. வீட்டிலிருந்தபடியே பீட்ஸாவை வரவழைப்பதிலும் இணையத்தில் ஷாப்பிங் செய்வதிலும் நம்மூர் மக்கள் தேர்ந்துவிட்டனர். ஆனால், நம்மூர் விவசாயிகள் போலவே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் விவசாயிகளுக்கு நிலைமை அத்தனை சிலாக்கியமாக இல்லை.

அங்கு செல்போன் சிக்னல் கிடைக்க வேண்டுமென்றால், மரத்தின் மீதோ வீட்டின் கூரை மீதோ ஏறி நிற்க வேண்டும். இல்லையென்றால், காரில் பல கி.மீ. தொலைவுக்கு அப்பால் சென்றால்தான் ‘தொடர்பு எல்லைக்கு உள்ளே' வர முடியும். “ஒரு ஆபத்துன்னா என்னங்க செய்வது?” என்கிறார்கள் ஆஸ்திரேலிய விவசாயிகள். ஒரே கஷ்டமப்பா!

அச்சச்சோ அச்சுப்பதிப்பே!

ஈக்வடார் நாட்டின் முக்கியமான நாளிதழான டயரியோ ஹோய், ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. ‘இனி நாளிதழாக ஹோய் வராது. இணையத்தில் மட்டுமே வெளிவரும்'. 32 ஆண்டுகளாக இயங்கிவந்த நாளிதழ் இப்படி முடிவெடுக்க இரண்டு காரணங்கள். ஒன்று ஈக்வடார் அரசின் கெடுபிடியான அணுகுமுறை. சமீபத்தில் அமலாக்கப்பட்ட தகவல்தொடர்புச் சட்டம் ஊடகச் சுதந்திரத்தின் மீதான போர் என்றே வர்ணிக்கப்படுகிறது. மற்றொன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்துவரும் இணைய வாசகர்கள். இணையத்துக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

கோடீஸ்வரப் பிச்சைக்காரர்!

பிச்சைக்காரர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதுபோல் சித்தரித்து எழுதப்படும் நகைச்சுவைத் துணுக்குகள் நமக்குப் பழக்கமானவை. சவுதி அரேபியாவில் இதே போன்ற சம்பவங்கள் நிஜத்தில் நடந்திருக்கின்றன. பிச்சை எடுப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ள அந்நாட்டில், ‘சந்தேகத்துக்குரிய வகையில்' நடமாடிப் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த ஒருவர் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார்.

சோதனையில் அவரிடம், ரூ. 1.9 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சொகுசு வீடு ஒன்றில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் தங்கி, காரில் சென்று பிச்சை எடுத்திருக்கிறார் அந்த மனிதர். நம்மூர் பிச்சைக்காரர்கள், தொழில்நேர்த்தி விஷயத்தில் இவரிடம் பிச்சை எடுக்க வேண்டும்போல!

SCROLL FOR NEXT