சிறப்புக் கட்டுரைகள்

பிராமணாள் கபே பெயர் எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்!

ராமானுஜம் ஸ்ரீதர்

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சாதி ஒழிப்பு சார்ந்த நம்முடைய பார்வையின் மீது சில கேள்விகளைத் தூக்கி வீசுகிறது. ‘கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே’ என்ற உணவகத்தின் பெயருக்கு எதிர்ப்புத் தெரித்து திருச்சியில் 2012-ல் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒரு ஆர்பாட்டம் நடத்தினர். அந்த உணவகத்தின் பெயரையும் மாற்றச் சொல்லி அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் “சாதிப் பெயர்களில் உணவகங்களை நடத்துவதில் தவறு இல்லை” என்று கூறியதோடு, “கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை, ஐயங்கார் பேக்கரி போன்ற சாதிப் பெயர்களைக் கொண்ட வியாபார நிறுவனங்கள் இருக்கும்போது ஏன் பிராமணாள் கபே என்ற பெயருக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?” என்றும் ஆர்ப்பட்டம் நடத்தியவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு முக்கியமான கேள்வி இங்கே எழுகிறது.

முதலாவது, நீதிமன்றத்தை நோக்கியது. பிராமணாள் என்ற சொல் சாதியைக் குறிக்கிறதா? இன்று சாதி பல தளங்களில் இருக்கிறது. வீட்டுக்குள் அய்யர், ஐயங்கார் என்றால், அரசியலில் பிராமணர். வீட்டுக்குள் பறையர், பள்ளர் என்றால், அரசியல் தளத்தில் தலித். வர்ணங்கள் அடிப்படையில் பிராமணர் என்பது கூடவே வைசியர், சூத்திரர், பஞ்சமர் சொல்லாடல்களையும் கொண்டுவந்துவிடுகிறது. நீதிமன்றம் இவற்றுக்கான வேறுபாடுகளைப் பிரித்துப் பார்க்கத் தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. பிராமணாள் உணவகத்தை நியாயப்படுத்துவது என்றால், அதற்கான உதாரணத்தை சூத்திராள் உணவகம், பஞ்சமர் உணவகம் என்றிருக்கிறதா என்பதிலிருந்து தேட வேண்டும். கோனார் மெஸ், தேவர்’ஸ் பிரியாணிபோலவே அய்யர் கபே, ஐயங்கார் பேக்கரி பெயர்களுக்கும் இங்கே எதிர்ப்பு இல்லை என்பதை நீதிமன்றம் கவனிக்க வேண்டும்.

இரண்டாவது, பெரியார் திராவிடர் கழகத்தினரை நோக்கியது. சாதி ஒழிப்பை அடிப்படை லட்சியமாகக் கொண்ட பெ.தி.க. தொண்டர்கள் சாதிப் பெயர்களை எதிர்க்காமல், ‘பிரமாணாள்’ என்ற பெயரை மட்டும் எதிர்ப்பதற்கான காரணம் என்ன? தனிமனிதர்கள் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த சாதியொட்டை வெற்றிகரமாக அப்புறப்படுத்திய ஒரு பெரும் இயக்கத்தின் பகுதியான பெ.தி.க. ஏன் வியாபார நிறுவனங்களுக்கு பின்னால் உள்ள சாதியொட்டை எதிர்க்கவில்லை? பிராமணாள் என்ற பெயரை ஒழித்துவிட்டால் மட்டுமே சாதி ஒழிந்துவிடுமா?

சாதி ஒழிப்பு என்பதை வர்ணம், வகைப்பாடு, சாதி, தன்னிலை இவற்றில் ஏதேனும் ஒரு வகைமை சார்ந்தே நாம் பேசிவருகிறோம். அவற்றுக்கு அப்பாற்பட்டும் சிந்திக்க வேண்டிய அவசியத்தைதான் இந்தப் போராட்டமும், நீதிமன்றத் தீர்ப்பும் நமக்கு உணர்த்துகின்றன.

- ராமாநுஜம், சமூக அறிவியலாளர்.

தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com

SCROLL FOR NEXT