உ
லகம் முழுவதிலும் மக்கள் பெரிதும் பயப்படும் நோய்கள் வரிசையில் எய்ட்ஸுக்கு அடுத்தபடியாக ரேபீஸ் இருக்கிறது. எய்ட்ஸுக்குக்கூட மருந்து இருக்கிறது. ரேபீஸ் நோய்க்கு எந்த மருந்தும் இல்லை. மரணம் நிச்சயம். ரேபீஸ் வந்து இறப்போரின் எண்ணிக்கை டெங்கு காய்ச்சலைவிட அதிகம். ரேபீஸ் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே இருக்கிறதா?
'ரேபீஸ்' (Rabies) எனும் வைரஸ் கிருமிகள் வெறிநாயின் எச்சிலிலிருந்து வெளியேறும். அந்த நாய் மனிதரைக் கடிக்கும்போது, கிருமிகள் உடலுக்குள் புகுந்து, மூளைத் திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். வெறிநாய் சிறிய அளவில் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் நாவினால் தீண்டினாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு ஆறு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி வரும். உணவு சாப்பிட முடியாது. இவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில்தான் இந்த எண்ணிக்கை அதிகம்; 35 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். இவர்களில் 35 % பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர். ஆண்டுதோறும் நம் நாட்டில் மட்டும் சுமார் 60 லட்சம் பேர் நாய்க்கடிக்காகத் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
மனித உயிர்கள் மலிவானவை அல்ல; ரேபீஸ் நோயுள்ள நாய்களைக் கொல்லத் தயக்கம் தேவையில்லை. ஆனால், எது வெறிநாய், எது சாதாரண நாய் என்பதைத் தெரிந்துகொள்வது எல்லோராலும் முடியாது. தெருநாய்களைக் கொல்வதற்கு விலங்கு நலம் காப்போர் அமைப்பு எதிர்த்துவருவதால், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் அவற்றைப் பிடித்து முறைப்படி கருத்தடைசெய்ய வேண்டும் என்று அரசின் சட்டம் சொல்கிறது. ஒரு நாயைப் பிடிப்பதற்கும், அதற்குக் கருத்தடைசெய்வதற்கும் ரூ.500 முதல் ரூ.1,500 வரை செலவாகிறது. போதிய நிதியில்லை எனக் காரணம் காட்டி, பெயரளவுக்கு மட்டுமே கருத்தடை செய்கின்றனர்.
இத்தனைக்கும் இந்த இறப்புகளைத் தடுக்கத் தடுப்பூசி இருக்கிறது. நாய் கடித்தவருக்கு, கடித்த நாள், 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என 5 தவணைகள் தடுப்பூசி போடப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவே போடப்படுகிறது. உரிய நேரத்தில் முறைப்படி போட்டுக்கொண்டால், ரேபீஸ் நோய் வருவதில்லை. உயிரிழப்பு ஏற்படுவதில்லை. ஆனால், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் பல தடைகள் இருப்பதுதான் கொடுமை.
அதிகரித்துவரும் வெறிநாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தடுப்பூசி மருந்தின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. குதிரையின் ரத்தத்திலிருந்து இது தயாரிக்கப்படுவதால், செலவு அதிகம். எனவே, அரசு இதற்கான தயாரிப்பில் சுணக்கம் காட்டுகிறது. ஊட்டி குன்னூரில் முன்பு இந்தத் தடுப்பூசி உற்பத்திசெய்யப்பட்டது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதை இங்கு நினைவுகூரலாம். ஆக, தடுப்பூசியின் உற்பத்தி குறைவது முதல் தடங்கல்.
இது தனியார் மருத்துவமனைகளில் தாராளமாகக் கிடைக்கிறது. ஒரு ஊசியின் விலை மருத்துவர் கட்டணம் உட்பட ரூ. 500. ஐந்து ஊசிகளுக்கு மொத்தம் ரூ. 2,500 வரை செலவாகும். ஆனால், இதற்குச் செலவிட எல்லோராலும் முடியாது. அதனால், சாமானியர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர். ஆனால், அங்கு ஏற்படும் நிதி நெருக்கடியில் அடிக்கடி இந்த மருந்து ‘காணாமல்’ போய்விடுகிறது. நாய்களுக்கான தடுப்பூசியின் நிலைமையும் இதுதான். இது மிகப் பெரிய தடங்கல்!
தெருநாய்கள் கடிப்பதால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள், அன்றாடக் கூலிகள், படிக்காதவர்கள். ரேபீஸ் நோயைத் தடுக்க முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது இலவசமாகவே போடப்பட்டாலும் சாமானியர்களுக்கு ஐந்து நாட்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு வருவது இயலாத காரியம். இதனால், தொடர் சிகிச்சை செய்துகொள்ள அவர்களுடைய வறுமை அனுமதிப்பதில்லை.
2030-க்குள் உலகிலிருந்து ரேபீஸ் நோயை விரட்டிவிட வேண்டும் என்ற குறிக்கோளை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. முக்கியமாக, இந்த நோய் மிக அதிகமுள்ள இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தெருநாய்களுக்கு மொத்தமாகத் தடுப்பூசி போடுவது, நாய் கடிக்க வாய்ப்புள்ளவர்களுக்கு (குழந்தைகள், தபால்காரர்கள், வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவோர்) முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிசெய்வது, நாய் கடித்தவர்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் கிடைக்க வசதிசெய்வது, தெருநாய்களுக்குக் கருத்தடைசெய்வது போன்றவற்றின் மூலம் இந்தக் குறிக்கோளை எட்ட முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் உறுதியாக உள்ளது. ஏற்கனவே, இலங்கை, தாய்லாந்து, பூடான் ஆகிய நாடுகள் மேற்படி ஆலோசனைகளைப் பின்பற்றி அந்த நாடுகளில் ரேபீஸ் நோய் இல்லை எனும் நிலைமைக்கு முன்னேறியுள்ளன.
இந்தியாவிலும் இந்த முன்னேற்றம் காணப்பட வேண்டுமானால், நாய்களுக்கான தடுப்பூசி உற்பத்தியையும் மக்களுக்கான தடுப்பூசி உற்பத்தியையும் அதிகப்படுத்தப் போதிய நிதியை ஒதுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் எப்போதும் இந்தத் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நாய் வளர்ப்பதற்கும் அதற்குக் கருத்தடைசெய்வது. உரிமம் தருவது போன்றவற்றுக்கும் இன்னும் தகுதியான சட்டங்கள் இயற்றி வெறிநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். தெருநாய்க் கடியால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், ரேபீஸ் குறித்த விழிப்புணர்வை பெற்றோரிடம் ஏற்படுத்துவதிலும், அதைத் தடுப்பதிலும் அரசு இன்னும் அதிக கவனம் செலுத்தி, அவற்றுக்குத் தேவையான அரசு கட்டமைப்புகளைப் புதிதாக உருவாக்க வேண்டும்.
கு. கணேசன்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com