சிறப்புக் கட்டுரைகள்

இது அம்மா வழியில் நடக்கும் அரசுதானா?

சரவணன் A

டந்த சட்டமன்றத் தேர்தலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம்” என்று ஜெயலலிதா வாக்குறுதியளித்தார். ஆட்சிக்கு வந்ததும் முதலில் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். கோயில், பள்ளிகளுக்கு அருகில் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்த கடைகள் மூடப்பட்டன. இதேபோல் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு, ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரும் இதேபோல வருவாய் குறைவாக உள்ள 500 கடைகளை மூடினார்.

இந்தச் சூழலில்தான் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, தேசிய-மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி, உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து கடைகளைத் திறந்துகொள்ளலாம் என கட்டுப்பாட்டை தளர்த்தியது உச்ச நீதிமன்றம். ஏற்கெனவே மூடப்பட்ட 1,700 கடைகளை உடனடியாகத் திறந்தது தமிழக அரசு. சாலைகளை வகைமாற்றம் செய்யாமல் திறக்கப்பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த 1,700 கடைகளையும் மூட உத்தரவிட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கூடவே மூடப்பட்ட கடைகள் அமைந்துள்ள சாலைகளின் விவரங்களையும் சமர்ப்பித்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வகைமாற்றம் செய்துள்ள சாலைகளில் உள்ள 815 கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. மற்ற கடைகளையும் சாலைகளை வகைமாற்றம் செய்தபிறகு திறந்துகொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியுள்ளது. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கையில், அரசு மதுக்கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அக்கறையுடன் எடுத்துவருகிறது. இதற்காக சாலைகளை வகைமாற்றம் செய்வதிலும் மும்முரமாக உள்ளது. ஜெயலலிதாவின் வாக்குறுதியை மறந்துவிட்டு மூடப்பட்ட கடைகளையும் திறப்பதில்தான் குறியாக இருக்கிறது. இதற்காக உச்ச நீதிமன்றம்வரை சென்று சட்டப் போராட்டம் நடத்துகிறது. மக்களைச் சீரழிக்கும் மதுக்கடைகளைத் திறப்பதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளிலும் காட்டலாமே!

SCROLL FOR NEXT