சிறப்புக் கட்டுரைகள்

உரிமை இழந்த பெண்கள்

ஜெஸிக்கா வலேன்டி

கருக்கலைப்பு தொடர்பாக அயர்லாந்தில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த 18 வயதுப் பெண், பாலியல் வல்லுறவுக்கு ஆளானதால் கர்ப்பமடைந்திருக்கிறார். தனது விருப்பத்துக்கு மாறாக, பலவந்தமாக அந்தக் கருவைச் சுமக்க நேர்ந்த அந்தப் பெண்ணால், அந்தக் கருவைக் கலைக்க முடியவில்லை. காரணம், அந்நாட்டின் சட்டம் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

அந்தப் பெண் 18 வயதை எட்டும் முன்னதாக பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டார். கரு உருவாகி எட்டு வாரங்கள் ஆன நிலையில், கருவைக் கலைத்துவிட கோரிக்கை விடுத்தார். அயர்லாந்து நாட்டுச் சட்டப்படி, கருக்கலைப்பு சட்ட விரோதம் என்பதால், அரசு முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவைச் சேர்ந்த சவீதா ஹலப்பனாவர் (31) என்ற இந்தியப் பல் மருத்துவர், உடல்நிலை கருதி தன்னுடைய கருவைக் கலைத்துவிட முயன்றபோது, அயர்லாந்து அரசு மறுத்ததையும் பிறகு, அவர் இறந்ததையும் உலகமே பரபரப்பாக விவாதித்தது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அயர்லாந்து நாட்டுச் சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. கருத்தரித்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற நிலையிலும், தற்கொலை எண்ணம் அவருக்கு ஏற்படும் நிலையிலும் சிசுவைக் கலைத்துவிடலாம் என்று திருத்தம் அனுமதி வழங்கியது.

வெளிநாட்டவரான அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பதை உளவியல் நிபுணர்கள் உறுதி செய்திருக்கின்றனர். பொருளாதார வசதியற்ற அவரால், வேறு நாட்டுக்குச் சென்று கருக் கலைப்பு செய்துகொள்ள முடியவில்லை. பயணம் செய்யும் நிலையில் அவரது உடல்நிலையும் இல்லை. இப்போது அவருடைய வயிற்றில் உள்ள கரு வளர்ந்து 25 வாரங்கள் ஆகிவிட்டன. இனி கருவைக் கலைப்பது பெரிய உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

உணர்ச்சியற்ற சட்டம்

அயர்லாந்து அரசின் சட்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல, டாக்டர்களுக்கும் குழப்பத்தையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம், கருவை விரும்பாத பெண்களுக்குப் பெருத்த அச்சுறுத்தலாக மாறிவிட்டது. கருவுற்ற பெண்கள் கருவைக் கலைக்க விரும்பினால், மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது கட்டாயம் என்று அந்த சட்டம் சொல்கிறது. எனினும், நடைமுறையில் பெண்களின் நலனுக்கு எதிராக மாறிவிடுகிறது.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் தங்களிடம் உள்ள பண வசதியைக் கொண்டு, வேறு நாடுகளுக்குச் சென்று கருவைக் கலைத்துக் கொள்ள முடிகிறது. பண வசதி இல்லாதவர்களுக்கும் உடல் நலமில்லாதவர்களுக்கும் இது பெரிய இன்னலாக மாறிவிடுகிறது.

சிரமங்கள் கொஞ்சமல்ல

25 வாரங்கள் மட்டுமே வளர்ந்த கருவைப் பெற்றெடுப்பதை நினைக்கும்போது மிகவும் அச்சமாக இருக்கிறது. 28-வது வாரத்தில் (ஏழாவது மாதம்) பிறந்த பெண் என்பதால், எனக்கு அதில் உள்ள இன்னல்கள், ஆபத்துகள்குறித்து அதிகமாகவே தெரியும். 26 வாரங்களுக்கு முன்னால் பிறக்கும் சில சிசுக்களின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும்; பார்வைக்குறைவு, காதுகேளாமை, குடலில் உள்ள சவ்வுகள் இறத்தல், (பெருமூளை) பக்கவாதம் போன்றவையும் சிலர் விஷயத்தில் நிகழக்கூடும். இத்துடன் வேறு சில உடல்நலக் குறைவுகளும் மன நலிவுகளும் ஏற்படக்கூடும்.

குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதை அரசோ, அதிகாரிகளோ தீர்மானிக்கக் கூடாது. அதை அந்தந்தக் குடும்பங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அயர்லாந்தில் இந்தப் பெண்ணுக்கு நேர்ந்துள்ள சம்பவம், அந்நாட்டுக்கு மேலும் பலரின் கண்டனங்களைத்தான் பெற்றுத்தரும். பெண்களை அந்த நாடு, குழந்தையைப் பெற்றுத்தரும் கருவியாகத்தான் பார்க்கிறது. இந்தப் பெண்ணின் பெயர் தெரியாது. ஆனால், அவரை ஒரு கருவியாகக் கருதிவிட முடியாது. அவற்றுக்கும் மேலானவர் அவர். அவருக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டபோது அரசு பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

தி கார்டியன், தமிழில்: சாரி.

SCROLL FOR NEXT