ஒ
ருசமயம் நானும் அனந்தமூர்த்தியும் கலந்துரையாடுவதற்கு ‘கேரவான்’ பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த ஹோட்டலில் எங்களிருவர் இருக்கையைத் தவிர, ஏனைய இருக்கைகள் சம உயரத்தில் இருந்தன. எனவே, தாமதமாக வந்தவர்களையும் கடைசி இருக்கையில் அமர்ந்தவர்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை.
உரையாடலின் ஒரு பகுதியாக கேள்வி நேரம் வந்தபோது, கடைசி வரிசையிலிருந்து ஒரு கை உயர்ந்தது. அது கர்னாடுடையது என்று தெரிந்துவிட்டதால், பதிலளிக்கத் தயாரானேன். என்னைவிட மூத்தவராகவும் உயரம் குறைவாகவும் இருந்த அனந்தமூர்த்தியால் முதலில் அவரைப் பார்க்க முடியவில்லை. பிறகு, மலர்ந்த முகத்துடன் என்னைப் பார்த்து, ‘ஓ - கிரீஷ் பந்திதாரே’ (கிரீஷ் வந்துவிட்டார்) என்று திருப்தியடைந்தவராகக் கூவினார். கிரீஷின் பரிவுக்கும் அங்கீகாரத்துக்கும் அனந்தமூர்த்தி ஏங்கினார் என்பது என்னுடைய கணிப்பு.
அனந்தமூர்த்தியைப் போல கிரீஷ் கர்னாடால் ஊர்வலம் செல்ல முடியாது, முழக்கங்களை எழுப்ப முடியாது, அரசியல்வாதியைப் பொது இடத்தில் பாராட்டியோ, கண்டித்தோ பேச முடியாது, கோரிக்கை மனுக்களில் கையெழுத்திட முடியாது. அதேவேளையில் பன்முகத் தன்மையுள்ள, சகிப்புத்தன்மைமிக்க, நவ இந்தியா உருவாக வேண்டும் என்பதில் அனந்தமூர்த்தியைப் போலவே அக்கறை உள்ளவர் அவர்.
மதக் குறுவாதங்களை வெறுப்பவர். வட இந்திய மாநிலங்களில் அப்பாவி முஸ்லிம்களைப் பசு குண்டர்கள் தாக்கிய சம்பவங்கள் நடந்தபோது, ‘என் பெயரால் கூடாது’ என்ற கிளர்ச்சியை நாடு முழுவதும் நடத்தினர். பெங்களூருவில் இந்திய அறிவியல் கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். டவுன் ஹால் படியில் எதிர்ப்பாளர்கள் கைகளில் பதாகைகள், அட்டைகளுடன் நின்றிருந்தோம்.
அது வார நாள் என்பதால் போக்குவரத்து மிகுந்திருந்தது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அந்த எதிர்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் தொலைதூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்துதான் வர வேண்டும். பொதுவாழ்வில் கண்ணியம், நேர்மை, அன்பு நிலவ வேண்டும் என்பதற்காக அங்கே இருப்பவர்களுடன் சேர்ந்துகொள்ளச் சென்றிருந்தேன். எனக்கு இது வழக்க மானது. இதையெல்லாம் பத்திரிகைகளிலும் கட்டுரையாக எழுதிவருகிறேன்.
கிரீஷின் இல்லம் அந்த இடத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் காரில் வந்தால்தான் எட்டும் தொலைவில் இருக் கிறது. 79 வயது. மூச்சுத்திணறல் பிரச்சினை உண்டு. அதற்காகக் கையில் எப்போதும் சிறிய சிலிண்டரையும் ரப்பர் குழாய்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை.
அந்த இடத்துக்கு கிரீஷ் வருவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பதாகைகளுடன் நிற்கத் தொடங்கியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆஜானுபாகுவான அந்த உருவம் எனக்கு இடதுபக்கத் தில் வந்து நின்றது. ஆம் - அவர் கிரீஷ் கர்னாட்தான். மழையில் தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கும் மேல் நனைந்துகொண்டே நடந்துவந்திருக்கிறார். கையில் சிலிண்டர், மூக்கில் ரப்பர் குழாய். ஒரு மாணவன் ஓடிவந்து அவரிடம் குடையை நீட்டினான். அதை விரித்த அவர் எனக்கும் சேர்த்து அதைப் பிடித்துக்கொண்டார். முன் வரிசையில் இருந்த முஸ்லிம்களில் சிலர் அவரைப் பார்த்துவிட்டனர். அவர்களில் ஒருவர், ‘கிரீஷ் கர்னாட் சார் வந்திருக்கிறார்’ என்று நண்பரிடம் ஆங்கிலத்தில் கூறினார். முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஏராளமான இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வந்திருந்தனர். கிரீஷ் வந்ததை அவர்கள் நன்றிப் பெருக்கோடு பார்த்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரீஷின் சொந்த ஊரான தார்வாடுக்குச் சென்றேன். அவருடைய நூல்களைப் பிரசுரிக்கும் ‘மனோஹர கிரந்த மாலா’ நிறுவனத்தினர் ஆண்டு இலக்கிய விழாவை நடத்தினர். என்னைத் தவிர, அனைவரும் கன்னடத்திலேயே பேசினர். விழா தொடங்குவதற்கு முதல் நாள் கிரீஷ் என்னை அந்த நிறுவன அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். சுபாஷ் சாலையில் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அந்த அலுவலகம் இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஷ் இங்குதான் தன்னுடைய முதல் நாடகமான ‘யயாதி’ கையெழுத்துப் பிரதிகளை எடுத்துவந்து கொடுத்திருக் கிறார். அன்று முதல் அவருடைய நாடகங்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு உட்பட அனைத்தையும் அந்தப் பதிப்பாளர்தான் வெளியிட்டுவருகிறார்.
கிரீஷ் முதல் முறையாகச் சென்றபோது எப்படி இருந்ததோ அப்படியேதான் அந்த அலுவலகம் இருக்கிறது. ஒரு அலமாரியில் அந்நிறுவனம் பதிப்பித்த புத்தகங்கள் அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு புறத்தில் பதிப்புக்குத் தயாரான கையெழுத்துப் பிரதிகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு இடத்தில் கவிஞர்கள், நாவலாசிரியர்கள், விமர்சகர்கள் அமர்ந்து பேசவும் விவாதிக்கவும் 12 இருக்கைகள் போடப்பட்ட இடமும் இருக்கிறது.
கிரீஷ் தன்னுடைய அரசியலையோ தேசப்பற்றையோ கடைவிரித்துக் காட்டியதில்லை. தன்னுடைய ஊர், தன்னுடைய மாநிலம், தன்னுடைய நாடு மற்றும் உலகம் ஆகியவற்றின் மீதான நேசத்தை எப்போதும் விட்டுக்கொடுத்ததும் இல்லை. இந்தியாவின் கலாச்சார வரலாற்றை அற்புதமாக எழுதும் அளவுக்கு இந்தியக் கலைகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் புரிதலும் அவருக்கு உண்டு. இந்தியக் கலைகள் என்றால் அது இசை, இலக்கியம், நாட்டியம் என்று அனைத்தும் சேர்ந்தது.
அதிலும் வட இந்தியா, தென்னிந்தியா என்ற பேதம் கிடையாது. மக்களுடைய தொன்மக் கலைகளும் அவருக்குத் தெரியும். அவரால் ஆறு இந்திய மொழிகளில் சரளமாகப் பேச முடியும். அவர் இந்தியக் கலைகள் பற்றிய புத்தகம் எழுதாமல் இருப்பதற்கு ஒரே காரணம், எந்த ஆக்கபூர்வமான படைப்பும் அசலாக இருக்க வேண்டும், ஒன்று அல்லது பலவற்றின் கலவையாக அமைந்துவிடக் கூடாது என்பதே.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை கன்னடத்தில் எழுதிப் பிரசுரித்த அவர், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மறுத்துவிட்டார். என்னைப் போன்றவர்கள் படிக்க வேண்டாம் என்று நினைக்கிறாரோ அல்லது மேலும் சில அத்தியாயங்களைச் சேர்க்க விரும்புகிறாரோ தெரியவில்லை. மே 19-ல் அவருக்கு 80-வது பிறந்த நாள். நாம் எல்லாம் ரசித்து அனுபவிக்கும் வகையில் விரும்புகிற படைப்புகளை மேலும் அளிக்க கிரீஷ் கர்னாடுக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் வாய்க்க வாழ்த்துகிறேன்!
தமிழில்: சாரி.
மே 19: கிரீஷ் கர்னாட் 80-வது பிறந்த நாள்