பெரியார், கணிதமேதை ராமனுஜன் ஆகியோர் பிறந்த ஈரோடு மண்ணுக்கு ஆண்டுதோறும் மரியாதை சேர்க்கும் நிகழ்ச்சியாக, ஈரோடு புத்தகத் திருவிழா மாறியுள்ளது.
‘மக்கள் சிந்தனைப் பேரவை’யால் நடத்தப்படும் புத்தகத் திருவிழா, தற்போது 10-வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி இளையராஜாவால் தொடக்கி வைக்கப்பட்ட ஈரோடு புத்தகத் திருவிழாவை ஆகஸ்ட் 12-ம் தேதியன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நிறைவுசெய்வார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிப்பகங்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த சர்வதேசத் தரத்திலான பதிப்பகங்கள், புதுடெல்லியில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகங்கள் என மொத்தம் 230 அரங்குகளில் புத்தக வாசம் வீசுகிறது. லட்சக் கணக்கான வாசகர்கள் கூடும் இந்தத் திரு விழாவில், அவர்களுடன் கைகுலுக்க, ‘தி இந்து’வும் அரங்கு (எண் - 77) அமைத்துள்ளது.
ஆன்மிகம், இலக்கியம், கவிதை, இசை, தன்னம்பிக்கை எனப் பல தளங்களில் புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களின் கருத்துரை நிகழ்ச்சி நாள்தோறும் மாலையில் நடக்கிறது. சுகிசிவம், அப்துல் ரகுமான், புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி, சாலமன் பாப்பையா, நெல்லை கண்ணன், கு. ஞானசம்பந்தன், இளம்பிறை மணிமாறன், நடிகர் சிவகுமார், இலங்கை ஜெயராஜ் ஆகியோர் சொற்பொழிவாற்றவிருக்கிறார்கள்.
தமிழகத்தில், சென்னை புத்தகத் திருவிழாவுக்காக மட்டும்தான் புதிய புத்தகங்களை பதிப்பகங்கள் அச்சிடுவது வழக்கம். ஆனால், இப்போது ஈரோடு புத்தகத் திருவிழாவுக்காகவும் புதிய புத்தகங்கள் அச்சிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அறிஞர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் தங்கள் வருகையை முகநூல், மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே உறுதிப்படுத்தியுள்ளது புத்தகத் திருவிழாவின் வீச்சை வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் படைப்பாளர்களின் படைப்புகளை, ஈரோடு புத்தகத் திருவிழா ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், உலகத் தமிழர் படைப்பரங்கம் அமைக்கப்படவுள்ளது. தமிழ் மொழிகுறித்த ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், கட்டுரைத் தொகுப்பு நூல்கள், அறிவியல் நூல்கள், நாவல், சிறுகதை, கவிதை நூல்கள், பயண அனுபவ நூல்கள் என்று பலவகை தமிழ் நூல்களும் இந்த அரங்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
“நம்மோட இதயம் கோயில் மாதிரி. நாமதான் அதை சாக்கடையா மாத்தி வெச்சிருக்கோம். நல்ல புத்தகங்களைப் படிச்சா, இந்த சாக்கடை சுத்தமாகும்” என்றார், திருவிழா தொடக்க நிகழ்வில் இளையராஜா. பாலினம், வயது, மொழி, மத வேறுபாடின்றி புத்தகக் கண்காட்சியில் கூடும் கூட்டத்தினரிடையே, இதயத்தை மீண்டும் கோயிலாக்கும் தேடல் தெரிகிறது.
- எஸ். கோவிந்தராஜ், தொடர்புக்கு: govindaraj.s@thehindutamil.co.in