சிறப்புக் கட்டுரைகள்

கம்யூனிஸ்ட்கள் ஏன் மாற மறுக்கிறார்கள்?

ராமசந்திர குஹா

ராண்டுக்கு முன்னால் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரலாற்று அறிஞருடன் பெங்களூருவில் பேசிக் கொண்டிருந்தேன். பகத் சிங் இந்தியர் மட்டுமல்ல மார்க்சியவாதியும்கூட. இருந்தும் இடதுசாரிகள் அவரை கிட்டத்தட்ட மறந்தேவிட்டார்கள் எனலாம். இந்துத்துவவாதிகள் அவரை உயிர்ப்பித்து, புகழ ஆரம்பித்திருக்கின்றனர். இதை எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று நண்பரைக் கேட்டேன். “நல்ல கேள்வி, என்னுடைய கட்சியின் உயர்நிலையில் இதை எழுப்புவேன்” என்றார். ஆனால், அப்படி எழுப்பியதாகவோ, அது ஏற்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

பகத் சிங்கைவிட லெனின், ஸ்டாலினை மார்க்சிஸ்ட்கள் ஏன் புனிதர்களாகக் கருதுகிறார்கள் என்பதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, காலம்காலமாகக் கடைப்பிடிக்கும் வழக்கத்தை மாற்ற விரும்பாதது; சிறு வயதிலேயே தீவிர வைணவர்களாக வழக்கப்படும் சிறுவர்களால் வேறு தெய்வங்களை வழிபட முடியாது. எனவே, மார்க்சிஸ்ட்களும் பால பருவத்தில் வணங்கிய தலைவர்களையே இளைஞர்களாகவும் பின்னர் வயோதிகர்களாகவும் வணங்குகின்றனர்.

இரண்டாவது காரணம், மார்க்சிஸ்ட்கள் தொடக்கத்தில் பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்தனர். பகத் சிங் அந்தக் கட்சியில் உறுப்பினராக இருந்ததில்லை. அவர், 'இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்' என்ற அமைப்பில் உறுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்றைய பம்பாய், கல்கத்தா நகரங்களில் தொழிலாளர்களிடையே செல்வாக்கு இருந்தது. பகத் சிங் இருந்த அமைப்பு வட இந்தியாவில் தீவிரமாகச் செயல்பட்டது. எனவே, பகத்சிங், மார்க்சிஸ்டாக இருந்தாலும் வேறு கட்சி உறுப்பினராக இருந்ததால் அவருடைய உருவப்படங்களை வைக்க மார்க்சிஸ்ட்களுக்குத் தயக்கம் இருக்கிறது என்று கருதுகிறேன்.

இந்த ட்விட்டர் யுகத்தில் லெனின் வாழ்ந்தால் அவரைப் பின்பற்றுபவர்களும் ஏராளமாக இருந்திருப்பார்கள். அவர் பழிவாங்கும் எண்ணமுள்ளவர், பேச்சிலும் எழுத்திலும் வசைமாரிப் பொழிவார். பூர்ஷுவாக்கள் மீது மட்டும் அவருக்கு வெறுப்பு என்பதில்லை; அவருடைய கருத்தை ஏற்காத சோஷலிஸ்ட்களைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை. அமைதியான முறையில்தான் ஜனநாயகத்துக்கு மாற வேண்டுமே தவிர வன்முறை மூலம் புரட்சியைக் கொண்டுவரக் கூடாது என்று கூறியதற்காக ஜெர்மானிய மார்க்சிய அறிஞர் எட்வர்டோ பெர்ன்ஸ்டெயின் மீது கடுமையாகக் கோபம் கொண்டார்.

இந்திய மார்க்சிஸ்ட்களுக்கு லெனினைவிட பெர்ன்ஸ்டைன் போன்றவர்கள் நல்ல முன்மாதிரியாக இருந்திருக்கக்கூடும். மேற்கு ஐரோப்பிய ஜனநாயக நாடுகளில், சீர்திருத்தவாதிகளான சோஷலிஸ்ட்கள் வலுவான மக்கள் நல அரசுகளை உருவாக்கினர். லெனின் ரஷ்யாவில் கொடுங்கோலர் ஜார் மன்னரின் ஆட்சியை அகற்றி - அதைவிடக் கடுமையான ஒடுக்குமுறைகளைக் கடைப்பிடித்த - போல்ஷ்விக்குகளின் ஆட்சியை நிறுவினார். இந்தியத் தேர்தலில் பல பத்தாண்டுகளாக மார்க்சிஸ்ட்கள் பங்கேற்றாலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு தலைமை வகித்தாலும் லெனினின் கொள்கைப்படியான 'ஒரு கட்சி ஆட்சி முறை' மீதான நம்பிக்கையை இன்னமும் முறைப்படி, வெளிப்படையாக விலக்கிக் கொண்டுவிடவில்லை.

'ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது விருப்பப்படி வழிநடத்த முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அரசுகளில் கம்யூனிஸ்ட்கள் சேர வேண்டும்' என்பதே லெனினின் கருத்து. பொறுப்பையும் அதிகாரத்தையும் மற்றவர்களுடன் சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற கருத்து லெனினின் சித்தாந்தத்துக்கு எதிரானது, அவருடைய சுபாவத்துக்கும் ஒவ்வாதது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் லெனினின் விசுவாசிகள் இருந்ததால்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்க பிரதமர் தேவைப்பட்டபோது, ஜோதி பாசு பிரதமராகக் கூடாது என்று 1996-ல் அவர்கள் தடை விதித்தனர்.

2004-ல் அதைவிடப் பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்தனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2004-ல் சேரும் வாய்ப்பு வந்தபோது லெனினின் கொள்கைகள் காரணாக, மார்க்சிஸ்ட்கள் சேராமல் தவிர்த்தனர். 1996-ல் ஜோதி பாசு பிரதமராகி இருந்தால் மக்களவையில் பெரும்பான்மை வலு இல்லாத கூட்டணி அரசுக்குத்தான் தலைமை தாங்கியிருப்பார்; ஓராண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுக்குள்ளோ அந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சேர்ந்திருந்தால் அந்த அரசு வலுவானதாக, நிலையானதாக இருந்திருக்கும். அவர்களுடைய நேர்மையும் அனுபவமும் மத்திய அரசை வழிநடத்தப் பயன்பட்டிருக்கும்.

லெனினின் வழிநடப்பவர்கள் பிற கட்சிகளுடன் இணைந்து அரசில் பங்கேற்கக் கூடாது என்று நம்பியதால் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் சேர மார்க்சிஸ்ட்கள் மறுத்தனர். இந்தத் தவறுக்கான விலையை அவர்கள் கொடுத்துவிட்டனர். அவர்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் அதற்கான விலையைக் கொடுத்துள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட்களின் சித்தாந்தங்கள் காலத்துக்கேற்ப மாறாமல் இருந்தாலும் அவர்கள் அறிவாளிகள், ஊழலுக்கு இடம் தராதவர்கள், பரம்பரை ஆட்சியை ஊக்குவிக்காதவர்கள், எந்தவித மதவாதத்தையும் ஆதரிக்காதவர்கள். மன்மோகன் சிங்கின் முதலாவது அரசில் மார்க்சிஸ்ட்கள் பங்கேற்று வேளாண்மை, ஊரக வளர்ச்சி, பழங்குடிகள் நல்வாழ்வு, மகளிர்-குழந்தைகள் வளர்ச்சி ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகித்திருந்தால் ஏழைகள், மகளிரின் நலன்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்திருப்பார்கள். நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு நாடு முழுக்க மக்களின் பாராட்டுக்கு ஆளாகியிருப்பார்கள்; மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் தவிர இந்தி பேசும் மாநிலங்களிலும் எளிதாக செல்வாக்கு பெற்றிருப்பார்கள்!

தமிழில்: சாரி

SCROLL FOR NEXT