சை
யத் உசேன் பாஷா, தனது மகளின் பெயரையே புனைப்பெயராகக் கொண்டு எழுதிய மதுரைக்காரர். ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் மூலம் தமிழ் வாசகப் பரப்பில் கவனம் பெற்ற அவர், அந்நாவலுக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கான பரிசையும் அழகிய நாயகியம்மாள் பரிசையும் பெற்றார்.
அவருடைய ‘பொய்கைக்கரைப்பட்டி’ நாவல் மதுரையைக் களமாகக் கொண்டு விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்கப்படும் அவலத்தைப் பதிவுசெய்தது. இஸ்லாமிய மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், அவர்களுக்கேயான தனித்துவமான சொற்புழக்கம் என நாம் அறியாத பக்கங்களை அவரது பல சிறுகதைகள் அவருக்கே உரித்தான தனித்துவமான மொழிப்பாங்கில் காட்டியிருக்கின்றன.
மதுரைக்கே உரிய வட்டார வழக்கையும் அந்த நிலத்துக்குரிய காட்சிப் பின்புலங்களையும் கொண்ட அவரது எழுத்துக்கள், எல்லாக் காலங்களிலும் காதலுக்கு இருக்கும் எதிர்ப்பையும் அதன் பின்னிருக்கும் சமய, சாதி முரண்களையும் எளிய மொழியில் காட்சிப்படுத்தி நமக்கு மிகுந்த அணுக்கத்துக்குரிய அனுபவங்களாக்கியிருக்கின்றன.
புரிதலின்மை எதிர்காலத்தில் வேறொன்றாக மாறக்கூடும். மானுட வாழ்வின் மேன்மைகளைப் புரிதலின்மைதான் வேறொன்றாக நம்முன் வைக்கிறது. அது பிற்பாடு மாறும் எனும் நம்பிக்கையைக் கொண்டவர் அர்ஷியா. அவரது எழுத்துக்களில் அந்த நம்பிக்கையின் சுடரைக் காண முடியும். வண்ணமிகு வாழ்க்கையில் காதலும் அது நிகழ்ந்திடாத போது நேரும் வலியும் அந்த இழப்பின் மீதான பெரும் நேசமும் அவரது கதைகளில் தென்படும்.
ஒரு புனையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவர் தன்னை வரலாற்றின் மீது அக்கறை கொண்டவராகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்புகளான மதுரை நாயக்கர் வரலாறு, திப்பு சுல்தான், பாலைவனப்பூ, கோமகட்டுமாரு ஆகியவை அந்த ஈடுபாட்டைக் காட்டுகின்றன.
ஒரு பத்திரிக்கையாளராகத் தன் பணியைத் தொடங்கிய அர்ஷியாவுக்கு அந்த அனுபவம் மிகச் சரளமான மொழி வேகத்தை அளித்திருக்கக் கூடும். நடப்பு வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அரசியல் சார்ந்த நெருக்கடிகளையும் உடனடியாகத் தன் எழுத்தில் கொண்டுவிந்துவிடும் துடிப்பு இருந்ததை ‘நவம்பர் 8, 2016’ நாவல் காட்டுகிறது.
மிகுந்த அன்பும் நேசமும் கொண்ட அவர் முகநூலைப் போலவே நேரிலும் மிகப் பெரும் நட்புக் கூட்டம் கொண்டவர். குழுமனப்பான்மைகளைக் கடந்த நட்புக்குச் சொந்தக்காரர். யாரிடமும் கசப்புகளற்று பழகும் பண்பாளர். ‘பெரிசா என்ன இருக்கு வாழ்க்கையில... ஏன் இந்தக் கோபமும் ஆற்றாமையும்?’ என்பார்.
இஸ்லாமியர்களின் சொல்வழக்கு குறித்த அடைவு ஒன்றை உருவாக்கும் எண்ணமும் அவரிடம் இருந்தது. மொழி மீதும் அதன் தனித்துவங்களின் மீதும் அக்கறை கொண்டவராக இருந்தார். அவரது எழுத்தினைப் போலவே வாழ்வின் முடிவும் மிகுந்த வேகத்தோடு முடிந்துவிட்டது. இனி அவர் முகநூலில் யாருக்கும் தன் வாழ்த்தைத் தெரிவிக்கப் போவதில்லை.