சிறப்புக் கட்டுரைகள்

சினிமா வெறும் பொழுதுபோக்கா?

அருண் பகத்

சினிமா ஒரு பொழுதுபோக்கு அல்லது வெறும் பொழுதுபோக்கு என்பதில் எனக்கு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. மதுக்கூடத்தில் நண்பனோடு அரட்டை அடித்தாலும் 3 மணி நேரம் பொழுது போகத்தான் போகிறது. சினிமா அந்த வெட்டிப் பொழுதை போக்கும் வேலையை செய்யவில்லை. மாறாக சினிமா என்ன செய்கிறது..?

அனிச்சை வாழ்க்கை அலுப்புகள் நிறைந்தது. மனிதர்கள் நிறைந்த வாழ்க்கை நதி தன்னளவிலேயே ஆதிக்கம், பாரபட்சம், அநீதிகள் நிறைந்தது. சரி தவறுகளைத் தாண்டி தகவமைப்பின் வழியாக அதுவாகவே மனித சமூகம் பரிணமித்திருக்கிறது.

சினிமாக் கலையின் பங்களிப்பு: இதில் முடிந்த வரை ஒரு சமநிலையை அடைவதற்கு அக நிலைகளில் ஆன்மிகமும், புற நிலைகளில் அரசியல் சித்தாந்தங்களும் முயல்கின்றன. சமூகத்தின் இந்த ஓட்டத்தில் கலையின் குறிப்பாக சினிமாக் கலையின் பங்களிப்பு என்ன?

கருத்துகளாக கூறி பிரச்சாரம் செய்வது என்றால் சினிமா எப்போதோ செத்து அங்கு புல் முளைத்திருக்கும். சினிமாவின் வேலை அதுவல்ல. மாறாக, சினிமா தம் அனுபவ உருவாக்கத்தின் மூலமாக நம் சாதாரண பொழுதுகளை அசாதாரண பொழுதுகளாக மாற்றுகிறது. வாழ்க்கையை ‘போலச் செய்து’... நாம் பழகிய மனிதர்களை, பழகிய மனதை, பழகிய உணர்ச்சிகளை திரையில் மீட்டுகிறது. ஆனால், புனைவு செய்த கதையாடல் மூலமாக ‘போலச் செய்கிறது’. 60 வருட வாழ்க்கையில் பெரும்பாலானவர்களுக்கு சில அற்புதமான தருணங்களே நிகழ்ந்திருக்கும். ஆனால் 2.30 மணி நேரம் ஓடும் ஒரே ஒரு சினிமா அதை விட அதிகமாக அற்புதமான தருணங்களைத் திரையில் நிகழத்துகிறது.

நண்பனுக்காக உறுதியாக நின்ற அனுபவங்கள் நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் மீண்டு வர முடியாத குழியில் விழுந்த நண்பனை உறுதியாக நின்று மீட்டு, அந்த நட்பின் உணர்ச்சிகளை பல மடங்கு அதிகமாக மலரச் செய்து கொண்டாட வைத்தது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்ற சினிமா.

தாய் தன் பிள்ளையிடம் குழந்தையாக மாறி விடும் அனுபவம் சில மனிதர்களுக்கு வாய்த்திருக்கலாம். ஆனால், மனநிலை சற்று பிறழ்ந்த மகன், கடுங்கோபத்துடன் தன் தாயை தேடி வந்து, அங்கு அவள் தன்னை விடவும் மனம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, குழந்தை போல அவளை ஏந்திச் செல்லும் அற்புதமான புனைவுத் தருணத்தின் வ‌ழியாக தாய்ப்பாச உணர்ச்சியை அதன் வேர் வரை தொட்டு நம்மை நெகிழச் செய்தது ‘நந்தலாலா’ என்ற சினிமா.

தனது உயிரான தத்துப் பிள்ளையை, மனநிலை பாதிக்கப்பட்ட அவளது சொந்தத் தாயிடம் விட்டு, வலியோடு திரும்பி ‘தாய், பிள்ளை இருவருக்கும் தாயான’ ஒரு பெண்ணின் மனம் வழியே அற்புதமான மானுட தரிசனத்தை வழங்கியது ‘என் பொம்மு குட்டி அம்மாவுக்கு’ என்ற சினிமா.

மகனை கரித்துக் கொட்டியே பழக்கப்பட்ட தந்தை. ஒரு சந்தர்ப்பத்தில் கோழிப் பண்ணையில் உயரதிகாரியாக கம்பீரமாக நிற்கும் மகனை பார்க்க நேர்கிறது. ‘புள்ள வாழ்க்கைல ஜெயிச்சுட்டான்’ என்பதில், தன்னையறியாமல் நெகிழ்ந்து நடந்து செல்லும் தருணம் வழியே, ஒரு முரட்டுத் தந்தையின் அகத்தை குறுக்கு வெட்டு தரிசனமாக நம்முன் வைத்தது ‘எம் மகன்’ என்ற சினிமா.

காதலின் தவிப்புகளை சந்திக்காத மனிதனே பூமியில் கிடையாது. தாக்குதலால் மூளை பாதித்து மனநல காப்பகத்தில் இருக்கும் காதலனை காண வருகிறாள் காதலி. சங்கிலியால் பிணைக்கப்பட்டு கண்மூடிப் படுத்திருக்கும் அவன் குணமடைந்தது தெரியாமல் பார்த்து விட்டு திரும்பிச் செல்கிறாள். சில வினாடிகள் கழித்து அவள் வந்ததை உணரும் காதலன், பரிதவிப்போடு அவளை சத்தமாக அழைக்கிறான், அவளுக்கு கேட்கவில்லை. பைத்தியக்காரனின் அலறலாக சுற்றியிருப்போர் பார்த்துக் கடக்கிறார்கள். கண்ணீரோடு மீண்டும் படுத்துக் கொள்கிறான்.

காதலின் தவிப்புணர்ச்சி எல்லோரும் அனுபவித்தது. ஆனால், அசாதாரணமான ஒரு புனைவுத் தருணம் வழியாக காதல் தவிப்பை அதன் முழு வெப்பத்துடன் கடத்தியது ‘சேது’ படத்தின் இக்காட்சி.

காதலின் மன நடுக்கத்தை, காதலி பந்தை பிடிக்க ஓடும் சாதாரண தருணத்தை நிலைநிறுத்தி, ‘இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்’ என இசையின் துணையோடு கடத்தியது ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் ஒரு காட்சி.

தந்தையின் இயலாமையை அனுபவித்திருப்போம். ஆனா‌ல் தந்தை சிறைக் கம்பிகளுக்கு அந்தப் பக்கம் நிற்கையில், மகள் பூப்பெய்தியவளாக தீடீரென அவர் முன் தோன்றி, ஆசீர்வாதம் வாங்க சுவற்றின் முன்பு மரியாதை செலுத்தும் தருணத்தின் வழியே, வாழ்வின் பகடைக்காய்கள் ஒரு சாமான்ய மனிதனை வேதனையின் எந்த எல்லையில் நிற்க வைக்கிறது என்ற அவல தரிசனத்தை கலை அழகியலோடு வழங்கியது ‘மகாநதி’ படத்தின் இக்காட்சி.

அக உலகை அழகாக்கும் சினிமா: இப்படி அசாதாரண புனைவு மற்றும் அபுனைவின் விதவிதமான கதையாடல்கள் வழியே நெகிழ வைக்கும், மகிழ வைக்கும், பரபரக்க வைக்கும், மயிர்ககூச்செரிய வைக்கும் ‘போலச் செய்தல்களின்’ மூலம் நம் ஆதார உணர்ச்சிகளை முழுவதும் மீட்டி.. சலிப்பான, வறட்சியான இத்தினசரி வாழ்க்கையை புத்துயிர் பெற வைக்கிறது சினிமா. மனதின் தினசரி மற்றும் நீண்டகால கசடுகளையெல்லாம் புனைவு கதையாடல் வழியே வடிந்தோடச் செய்கிறது. நம்மையறியாமல் ஆழ் மனதோடு உரையாடி நம்மைப் பண்படுத்துகிறது. நம் ரசனைகள் வழியே நம் அக உலகை அழகாக்குகிறது. நுண்ணுணர்வுகளைத் தூண்டி உள்ளுணர்வை கூர்மையாக்குகிறது.

‘ஏய் அந்த படத்துல இப்படி’, ‘இந்த படத்துல அப்படி’, ‘ஓ அந்த படம் மாதிரியா’, ‘அந்த சீன் மறக்கவே முடியல’, ‘அந்த சீன் பாத்தாலே எங்க அப்பா ஞாபகம் வருது’, ‘என் கதைய எடுத்த மாதிரியே இருந்தது’, ‘அந்தப் படத்துல நடந்த மாதிரி நமக்கு நடந்தா சூப்பரா இருக்கும்ல!’... இப்படியெல்லாம் பேசாத மனிதர்கள் மிக மிகக் குறைவு.

எத்தனையோ கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய விஞ்ஞானிகளை, தொழில்நுட்ப நிபுணர்களை விட மக்கள் கலைஞர்களை கொண்டாடித் தீர்ப்பதற்கு காரணம், கலைஞர்கள் தங்கள் உணர்ச்சிகளை மீட்டுகிறார்கள் என்பதால், தங்கள் வாழக்கை அனுபவத்தை அதிகமாக்குகிறார்கள் என்பதால், மனதுக்கு ஆகாரம் அளிக்கிறார்கள் என்பதால், ஏனெனில் மனிதர்கள் உணர்ச்சிகரமானவர்கள்.

வாழ்க்கையின் முழுமை அதன் அனுபவங்களில் இருக்கிறதென்றால், சினிமா நம் ஆயுளை நான்கு மடங்கு ஆக்குகிறது. கலையைக் கொண்டாடாத சமூகம் பண்பாட்டில் பின்தங்கிப் போகும். தனது சமநிலையில் பிறழ்ந்து போகும். அதன் தனி மனிதர்கள் பலர் தங்கள் அக அழகைத் தொலைத்து நிற்பார்கள்.
கலை, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்!

SCROLL FOR NEXT