நே
பாள பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒளியின் அரசியல் வாழ்க்கையில் முரண்களுக்குப் பஞ்சமேயில்லை. மாவோயிஸ்ட்டுகளிலிருந்து மன்னராட்சி ஆதரவாளர்கள்வரை, நேபாள மலைப் பகுதிகளின் மேட்டுக்குடிகளிலிருந்து மாதேசிக் கட்சிகள்வரை பலரை உள்ளடக்கிய வானவில் கூட்டணியுடனும் அந்தக் கூட்டணியில் பிளவுவாதப் பிரச்சாரத்தின் மூலமும் அவர் பிரதமராகியிருப்பதும் அந்த முரண்களில் ஒன்றுதான்.
2017-ல் நடந்த பிரச்சாரத்தின்போது அவர் அடிக்கடி இந்தியாவைக் குறிவைத்தார். அதன் நீட்சியாக, இந்தியாவின் ஆதரவைப் பெறும் மாதேசிகளையும். மார்ச் 2017-ல் ஒளியின் ஒருங்கிணைந்த-நேபாள் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன் -யுஎம்எல்) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல மாதேசி செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். ராஜ்பிராஜில் நடைபெற்ற கலவரங்களில் மூவராவது உயிரிழந்திருப்பார்கள். ஆனால், தனது கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை வென்றதன் மூலம் பிரதமரான பின், ஒளி, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
தாய்நாட்டில், எஃப்.எஸ்.பி.எம், ஆர்.ஜே.என்.பி போன்ற மாதேசி கட்சிகளின் ஆதரவைப் பெற்று அதிக ஜனநாயகப் பங்கேற்புகொண்ட அரசைக் கட்டமைக்கும் முயற்சியில் இருக்கிறார். பதிலுக்கு இந்த மாதேசிக் கட்சிகளின் மாகாண அரசுகளுக்கு ஆதரவளிப்பார். தி இந்துவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் 88% வாக்குகளை வென்றிருந்தாலும் “இதர உறுப்பினர்கள் பலரும்” கட்சி விதிகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் தனக்கே வாக்களித்திருக்கக்கூடும் என்று கூறினார். தனது கட்சிக்குள்ளேயே கலகக்காரராக பார்க்கப்படும் ஒளி, தற்போது நேபாளத்தின் மிகப் பிரபலமான தலைவர் என்ற பீடத்தை நோக்கி நகர்வது நகைமுரண்தான்.
சிறுபிள்ளையாக இருந்தபோது த்ருபா என்றழைக்கபப்ட்ட ஒளி, கிழக்கு நேபாளத்தின் ஜபா என்ற பகுதியில் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஒளிக்கு நான்கு வயது இருந்தபோது அவரது அம்மாவைப் பெரியம்மை பறித்துக்கொண்டது. 1967-ல் பதின்ம வயதில், நில உரிமையாளர்களுக்கு எதிரான ‘ஜபா புரட்சி’ என்றழைக்கப்பட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார். 18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பின் மிக விரைவில் கைதுசெய்யப்பட்டார்.
தற்போது தீவிர தேசியவாதியாக இருக்கும் அவர், ஒரு காலத்தில் இந்தியாவின் நக்ஸல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தீவிர இடதுசாரி இயக்கங்களின் நேபாள மேட்டுக்குடியினருக்கு எதிரான திட்டங்களில் பங்குவகித்தார். 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தபோதும் விடுவிக்கப்பட்ட பின்பும் தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றி மிக அரிதாகவே பேசியிருக்கிறார். ஆனால், அவர் சிறையில் பெற்ற அனுபவங்களே அவரை செதுக்கின என்று அவரது கூட்டாளிகள் சொல்கிறார்கள்.
“வேறு யாரையும் சார்ந்திருப்பதைவிட தன்னைத் தானே பார்த்துக்கொள்ளக் கற்றுக்கொண்டார். அது அவரைத் தனிமைப்படுத்தினாலும் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை” என்று ஒளியைப் பல பத்தாண்டுகளாக அறிந்தவரான ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார். அவர் சிறையில் கல்வியிலும் ஆர்வம் காட்டினார். பட்டம் பெறவில்லை என்றாலும் தத்துவம், வரலாறு ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றதோடு ஆங்கிலத்தை சரளமாக வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
1987-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒளி, பஞ்சாயத்து ஆட்சியை வீழ்த்திட ஒரு முன்னணியை உருவாக்கினார். பிறகு சிபிஎன் -யுஎம்எல் கட்சியைத் தொடங்கினார். 1990களில் உள்துறை அமைச்சராக நிர்வாக அனுபவத்தை வளர்த்துக்கொண்ட ஒளி, இந்தியாவுடனான மஹாகாளி நீர்-பங்கீட்டு ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றினார். அது ஒரு ‘சமமற்ற ஒப்பந்தம்’ என்ற கருத்தால் சிபிஎன் - யுஎம்எல் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஆனால், ஒளி அதிலிருந்து விலகியிருந்தார். அவர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக நேபாளத்தின் அரசியலமைப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொருளாதார முற்றுகையிலும் அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்குவகித்தார்.
66 வயதாகும் ஒளிக்கு பல உடல்நலக் கோளாறுகள் உள்ளன, 2007-ல் தில்லியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைசெய்துகொண்டார். இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளில் இவரளவு ஆற்றல் மிக்க தலைவரைப் பார்த்ததில்லை என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ஆனால், சுவாரஸ்யமான முரண்பாடு அவரது நம்பிக்கை தொடர்பானது. சித்தாந்தரீதியாக ஒளி, 1970களின் இளம் புரட்சியாளர் இல்லை.
ஏப்ரல் 22 அன்று மாவோயிஸ்ட்டுகளைத் தனது கட்சியுடன் இணைத்து, நேபாளத்தின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் நிகழ்வுக்கு அவர் தலைமைதாங்குவார் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர் தனது கம்யூனிஸ நம்பிக்கைகளுடன் மதத்தையும் சேர்த்துக்கொள்கிறார். மத நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார், சமஸ்கிருத சுலோகங்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். “வருங்காலத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டிருப்பதாக உணர்கிறீர்களா?” என்று ஒளியிடம் கேட்கப்பட்டபோது “பசுபதிநாதரின் அருள் இருக்கும்வரை தனக்கு எந்த பயமும் இல்லை” என்றார்.
தனது கடந்தகால ஆதர்சங்களான மார்க்ஸ், லெனின் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவோ என்னவோ, பிரதமராகப் பதவியேற்கும்போது கடவுளுக்குப் பதிலாக நேபாள மக்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
© ‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்