மூ
ன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலம், மானுடச் சிந்தனைகளைத் தொகுத்துக்கொள்ளும் மொழியாக மாறிவிட்டது. நவீன சமூகத்தினை, அதன் பல்வேறு அம்சங்களைக் குறித்து விவாதிக்க, கோட்பாட்டாக்கம்செய்ய பல்வேறு கலைச்சொற்கள் ஆங்கில மொழியில் புழங்குகின்றன. ஊடகங்களிலும், பொதுமன்றத்திலும்கூட அத்தகைய சொற்களும், சொற்சேர்க்கைகளும் கையாளப்படுகின்றன.
தமிழிலும் ஊடகங்களில் சிலர் அந்த ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துகிறார்கள். அந்த நேரத்தின் தேவைக்கு அவ்விதம் செய்வதில் பெரிய குற்றமில்லை என்று கொள்ளலாம். ஆனால், மொழியாக்கம்செய்ய தமிழ் மொழியின் வளங்களைப் பயன்படுத்த முயலும்போது, சிந்தனையும் வளம் பெற வாய்ப்புகள் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. இதனால், நமது சிந்தனை மேலும் துலக்கமுறும். இவ்விதம் மொழியாக்கம்செய்யும்போது, அல்லது தமிழுக்கே உரிய கருத்தாக்கங்களாக உருவாக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் சில உள்ளன.
1) தமிழின் பிற சொற்களுடன், வேர்ச்சொற்களுடன் அது கொள்ளும் உறவு. எந்தச் சொல்லும் மொழியில் தனித்து இயங்குவதில்லை. அதனால், பிற சொற்களுக்கிடையில் அது எப்படி உள்வாங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
2) துல்லியமாக மொழியாக்கம் நிகழ வேண்டும் என்பதைவிட, சிந்தனைப் போக்குக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதனால், தமிழ் மொழியின் வேர்ச்சொற்களுக்கு ஏற்றவாறு சற்றே மாற்றிக்கொள்வதில் தவறில்லை.
3) சில பின்னொட்டுகள் கலைச்சொல்லாக்கத்தில் அதிகம் பயன்படும்; ஆங்கிலத்தில் ‘இஸம்’, ‘லாஜி’ (ism, logy) போன்றவை. தமிழில் ‘இயம்’ என்பதை ‘இஸம்’ என்பதற்கும், ‘இயல்’ என்பதை ‘லாஜி’ என்பதற்கும் பயன்படுத்துகிறோம்; தவிர, ‘வாதம்’ என்பதும் பயன்படுத்தப்படுகிறது. ஆண், பெண் விகுதிகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். சிட்டிஸன் (Citizen) என்பதைக் ‘குடிமகன்’ என்று ஆண் விகுதியுடன் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. ‘குடிநபர்’ என்று பரிசீலிக்கலாம்.
வளர்ந்துவரும் புதிய துறைகளுக்கேற்ற, சிந்தனைகளுக்கேற்ற நிறைய சொற்கள் புதிது புதிதாக ஆங்கிலத்தில் பயன்பாட்டுக்கு வருகின்றன. அன்றாட வாழ்வில் எதிரொலிக்கின்றன. இந்தத் தொடரில் தற்காலச் சமூகத்தைக் குறித்து சிந்திப்பதற்குத் தேவையான கோட்பாடுகள் சார்ந்த கலைச்சொற்களைத் தமிழில் எப்படி மொழியாக்கம்செய்வது என்பதைப் பேசுவோம். வாராவாரம் விவாதிப்போம்.
- ராஜன்குறை, பேராசிரியர்.
தொடர்புக்கு: rajankurai@gmail.com