எச்
.டி. தேவெ கௌடா பிரதமராக 1997-ல் இருந்தபோது, மக்களவையில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தினத்தை ஒரு நிமிஷம் நினைத்துப்பாருங்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே கோரிக்கை பதாகைகளுடன் செல்கின்றனர். சிலர் தொடர்ந்து முழக்கமிடுகின்றனர். அவை நடவடிக்கையை நடத்தவிடாமல் தடுக்கின்றனர். யார் பேசுவதும் காதில் விழவில்லை. அவையை நடத்த முடியவில்லை என்று மக்களவைத் தலைவர் ஒத்திவைக்கிறார். இப்படியே சில நாள்களுக்கு நடக்கிறது. பிரதமர் கௌடா அப்பதவியில் நீடிக்கிறார். இந்த அரசு சட்டப்பூர்வமான அரசுதான் என்று கருத முடியுமா?
நான் கேட்பது சட்டம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல; மூன்று வாரங்களுக்கு முன்னால் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லை என்று கூறி முன்னறிவிப்பு செய்து அதை விவாதிக்க சில கட்சிகளின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அந்தக் கோரிக்கைக்கு அவையில் 50 உறுப்பினர்கள் ஆதரவாக எழுந்து நிற்கிறார்களா என்று மக்களவைத் தலைவர் உறுதி செய்துகொண்டு பிறகு விவாதத்தை அனுமதிக்க வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்து அது ஏற்கப்பட்டுவிட்டால் பிறகு வேறு எந்த நடவடிக்கையையும் அவையில் நடத்தக் கூடாது. ஆனால் மார்ச் 16 முதல் அவையில் தினந்தோறும் அமளி காரணமாக ஒழுங்கு நிலவவில்லை என்று ஒத்திவைத்துக் கொண்டே வருகிறார் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன். தீர்மானத்துக்கு 50 பேரின் ஆதரவு இருக்கிறதா என்று தன்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை என்கிறார்.
நாட்டை யார் ஆள்கிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதுதான் மக்களவையின் முக்கியப் பணி. மக்களவையின் நம்பிக்கையைப் பெற்றிருந்தால் மட்டுமே பிரதமரும் மத்திய அமைச்சர்களும் பதவியில் இருக்க முடியும். அதிபர் ஆட்சி முறையா, நாடாளுமன்ற ஜனநாயகமா என்ற கேள்வி எழுந்தபோது நாடாளுமன்ற ஜனநாயகமே நமக்கு உகந்தது என்று அம்பேத்கர் முடிவுசெய்தார். நாடளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள், ஒத்திவைப்புத் தீர்மானங்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் போன்றவையே நாடாளுமன்றத்தைப் பொறுப்புள்ளதாக்கும் என்று நம்பினார். நமது நாடாளுமன்றம் இந்த நம்பிக்கையைக் குலைத்துவிட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்று பார்த்து விவாதத்துக்கு நேரத்தை ஒதுக்க வேண்டிய கடமையிலிருந்து மக்களவைத் தலைவர் தவறிவிட்டார்.
அவையை நடத்தவிடாமல் உறுப்பினர்கள் இடையூறு செய்தால் மக்களவைத் தலைவர் என்ன செய்ய வேண்டும்? இடையூறு செய்யும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. அவை விதிகள் அதற்கு இடம் தருகின்றன. முதலில், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் வருகிறவர்களை அவரவர் இருக்கைக்குத் திரும்புமாறு கட்டளையிட வேண்டும். அதை ஏற்க மறுத்தால் அவர்களுடைய பெயர்களைக் கூவி அழைத்து அவையிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதும் மறுத்தால் அவைக் காவலர்களை அழைத்து அவர்களை வெளியேற்றி அவையில் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். அவை உறுப்பினர்கள் இப்படி ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது, இடைநீக்கம் செய்யப்பட்டது என்று பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. இப்போதைய மக்களவையிலேயே 2015 ஆகஸ்டில் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக 25 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவையில் அமளி ஏற்படுவதும் இது முதல்முறையல்ல. 2013 குளிர்காலக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதிக்க பல உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தனர். அது தனித் தெலங்கானா மாநிலத்துக்காகப் போராட்டம் நடந்த காலம். தொடர்ந்து பல நாட்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேயில்லை. இந்த அமளிகளுக்கு நடுவே ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதா அவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்போதைய மக்களவைத் தலைவர் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றக் கூடாது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுவரை நமது நாடாளுமன்றத்தில் 26 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரும்பாலானவை அடையாளத் தீர்மானங்கள்தான். 1963-ல் ஜவாஹர்லால் நேருவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு தீர்மானம்; லால் பகதூர் சாஸ்திரிக்கு எதிராக மூன்று முறை, இந்திரா காந்திக்கு எதிராக அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை. 25 தீர்மானங்கள் வெற்றி பெறவில்லை. ஒரு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னரே பிரதமர் பதவியிலிருந்து மொரார்ஜி தேசாய் விலகிவிட்டார். எல்லா சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான் முன்னுரிமை தந்து விவாதிக்கப்பட்டது. மக்களவையில் இப்போதுள்ள கட்சிகளின் வலுப்படி, ஆளும் கட்சி வசதியான இடத்தில்தான் இருக்கிறது. இருந்தாலும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தால்தான் அது உறுதி செய்யப்படும். அதிகாரத்தை அரசு நியாயமாகச் செலுத்துகிறது என்பதுதான் ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு. ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையை உரசிப் பார்க்க முடியாமல் இருப்பது நமது ஜனநாயக அமைப்புக்கே முரணானது. எனவே முதலில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மக்களவைத் தலைவர் எடுக்க வேண்டும்!
தமிழில்: சாரி