கலவரங்களைத் தடுக்க இன்றைய தலைவர்களுக்குத் தேவை காந்தியின் துணிச்சல்.
ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினம். ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினம். இவ்விரண்டு சுதந்திர தினங்களும் 1947-ல்தான் முதல்முறையாகக் கொண்டாடப்பட்டன. இவ்விரண்டு நாடுகளுக்கும் மூலமாக அமைந்த மற்றொரு நாளும் அதே ஆகஸ்ட் மாதத்தில்தான் அமைந்தது, ஆனால் ஓராண்டுக்கு முன்னால்; 1946 ஆகஸ்ட் 16-ஐ ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்று முஸ்லிம் லீக் அறிவித்தது. “நம்முடைய நடவடிக்கைகளால், பிரிக்கப்பட்ட இந்தியாவை அடைவோம், அல்லது அழிக்கப்பட்ட இந்தியாவை அடைவோம்” என்றே ஆவேசமாக அறிவித்தார் ஜின்னா. அன்று தொடங்கிய வன்செயல்கள் அலையலையாகப் பரவி, இந்தியாவைப் பிரிப்பது இனி தவிர்க்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. கலவரங்கள் கல்கத்தாவில் ஆரம்பித்தன, விரைவிலேயே வங்காளம் முழுக்கப் பரவின. பிறகு பிஹாரும் ஐக்கிய மாகாணமும் கொந்தளித்து இறுதியாக பஞ்சாபை அடைந்தன. மற்ற எல்லா இடங்களையும்விட பஞ்சாபில் அது கொடூரமாகிவிட்டது.
‘நேரடி நடவடிக்கை நாள்’ அறிவிப்புக்கான காரணங் களையும் அது ஏற்படுத்திய விளைவுகளையும் நான் உட்பட பல வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறோம். சமீபத்தில் பழைய ஆவணங்களை ஆய்வுசெய்தபோது, கொல்கத் தாவில் அன்றைய தினம் என்ன நடந்தது என்று நேரில் பார்த்தவர்கள் பதிவுசெய்திருந்த கடிதங்களை வாசிக்க நேர்ந்தது. மானிடவியல் அறிஞர் நிர்மல்குமார் போஸ், டெல்லியில் வசித்த தனது நண்பரான எழுத்தாளர் கிருஷ்ணா கிருபளானிக்கு எழுதிய கடிதம் அது. 1946 செப்டம்பர் 2-ம் தேதி அது எழுதப்பட்டிருந்தது.
யாருக்கும் தெரியாது
“எல்லோரும் எதிர்பார்த்த ஆகஸ்ட் 16 விடிந்தது. என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. ‘அகிம்சையைக் காப்போம் என்று முஸ்லிம்கள் சத்தியப் பிரமாணம் செய்துவிடவில்லை’ என்று முஸ்லிம் லீக் தலைவர் காஜா நஜிமுதீன் அறிக்கை விடுத்திருந்தபோதிலும், பெருமளவில் சூறையாடல்கள் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. நகரின் எந்தப் பகுதியிலும் எந்தப் போலீஸ்காரரையும் பார்க்க முடியவில்லை. நடுப்பகல் வாக்கில் ஷாம் பஜாரிலும், அதற்கும் முன்னால் பிற பகுதிகளிலும் வன்செயல்கள் தொடங்கிவிட்டன. ‘காஸிப்பூர் மைதானத்தில் முஸ்லிம்கள் கூடுகிறார்கள் பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது’ என்று அறிவிக்கப்பட்டது. பகல் 12 மணி முதலே முஸ்லிம்கள் அந்த மைதானம் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
போகும் வழியில் இருந்த கடைகளை மூடுமாறு எச்சரித்தார்கள். கவிராஜ் என்பவருடைய கடையை உடைத்தனர். ஒரு டாக்டரின் வீடும் தாக்கப்பட்டது. பற்றி எரியும் கந்தல் துணிகளை உடைந்த கதவுகள் வழியாக கட்டிடங்களுக்குள் வீசினர். அந்த இடத்தைச் சுற்றியிருந்த வீடுகளைச் சேர்ந்த 10 முதல் 15 வரையிலான இளைஞர்கள் திடீரென அங்கு ஓடிவந்து வன்செயலில் இறங்கிய கும்பலை விரட்டி அடித்தனர்.
வடக்கு கொல்கத்தாவின் பல பகுதிகளில் கத்திக் குத்துகளும் கொலைகளும் நடந்தன. பெண்கள் அடித்து முடமாக்கப்பட்டதாகவும், வீடுகள் கொளுத்தப்பட்டதாகவும், கடைகள் சூறையாடப்பட்டதாகவும் நகரின் வெவ்வேறு பகுதியிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியவர்கள் கூறினர். அவற்றில் பல உண்மையில் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. மக்கள் அச்சத்திலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்தி ருந்தனர். யார், எதைச் சொன்னாலும் நம்பும் மனநிலையில் இருந்தனர்.
19-ம் தேதி நகருக்குள் ராணுவம் அழைக்கப்பட்டது. நகரம் மெதுவாக அமைதியுற்றது. எல்லாப் பக்கங்களிலும் நிவாரண, உதவிப் பணிகள் தொடங்கின. பணம், துணிமணிகள், காய்கறிகள் குவிந்தன. உதவிக்கு இளைஞர்களும் யுவதி களும் முன்வந்தனர். ஆனால் எந்த முகாமிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து இருக்கவில்லை. தனித்தனியான முகாம்கள்தான் இருந்தன. அதேசமயம், முஸ்லிம்களை அவர்களுடைய பக்கத்து வீட்டு இந்துக்களும், இந்துக்களை அண்டை வீட்டு முஸ்லிம்களும் பாதுகாத்த தகவல்கள் நிறைய வந்தன.
ஆகஸ்ட் 16, 17, 18 ஆகிய நாட்கள் என்ன நடக்குமோ என்ற திகிலிலேயே கடந்தன. வெறிகொண்ட மக்களை என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. என்னுடைய நண்பர் களுக்கும் அதே அனுபவம்தான். அடிதடி மோதல்கள் நடந்த இடங்களிலேயே சிலர் சமாதான முயற்சியில் துணிந்து இறங்கினர். கும்பல்கள் வன்முறையில் இறங்கும் போது அவர்களைத் தடுக்க முடிவதில்லை. இந்துக்கள் வன்செயல்களில் இறங்குவதைத் தடுக்க முடிந்திருந்தாலும் என்னுடைய அகிம்சை பலனுள்ளதாக இருந்திருக்கும். இரவு நேரங்களில் வன்முறை கும்பல்களுக்கு இடையே சென்றிருந்தால் ஒருவேளை நான் விரும்பியபடி தடுத்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று என்னை அவ் வாறு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. என்னுடைய நண்பரும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முயன்றார். அவரால் எல்லோருடைய கைகளையும் தடுக்க முடியவில்லை. நம்மை நாமே பலிதானமாகக் கொடுத்திருந்தால் தடுத்திருக்க முடியுமோ என்று என்னைப் போலவே அவரும் தன்னையே கேட்டுக்கொண்டிருக்கிறார்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நிர்மல் போஸ்.
கொல்கத்தாவில் வன்செயல்களை லீக் தொடங்கியிருந் தாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் அவர்களை மற்றவர்கள் மிஞ்சிவிட்டனர். முஸ்லிம்களின் வீடுகள்தான் அதிக எண்ணிக்கையில் எரிந்தன. இதற்கு பதிலடியை கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் முஸ்லிம்கள் தந்தனர். நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்.
காந்தியும் போஸும்
நவகாளியில் கலவரங்கள் ஓயவும் வகுப்பு ஒற்றுமை ஏற்படவும் மகாத்மா காந்தி 1946 நவம்பரில் அங்கு சென்றார். அவருடன் நிர்மல்குமார் போஸும் சென்றார். போஸுக்கு காந்திஜியிடம் ஆழ்ந்த ஈடுபாடு. 1920-களில் காந்திஜியின் அறைகூவலுக்கு செவிமடுத்து படிப்பை உதறிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர் அவர். ‘செலக் ஷன்ஸ் ஃப்ரம் காந்தி’, ‘ஸ்டடீஸ் இன் காந்தியிசம்’ என்ற 2 முக்கியமான புத்தகங்களை வெளியிட்டவர்.
நிர்மல் போஸையும் தன்னுடன் நவகாளிக்கு காந்திஜி அழைத்துச் சென்றதற்கு 2 காரணங்கள் உண்டு. காந்திஜியின் சிந்தனைகளும் செயல்களும் அவருக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் வங்க மாநிலத்தவர் என்பதால் காந்திஜியின் பேச்சை உள்ளூர் மக்களுக்குப் புரியும் விதத்தில் மொழி பெயர்க்க வல்லவர். நவகாளியிலும் பிஹார் மாநிலத்திலும் காந்திஜியுடன் நிர்மல் போஸ் பல மாதங்கள் சுற்றுப்பயணம் செய்தார். தனது அனுபவங்களை ‘மை டேஸ் வித் காந்தி’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 1953-ல் அப்புத்தகம் வெளியானது. அது முழுக்க முழுக்க காந்திக்கு துதிபாடும் புத்தகம் அல்ல. காந்திஜியின் பிரம்மச்சரிய சோதனைகளை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவருடன் இருந்த இளம் பெண்களுக்கு அது அநீதி இழைப்பது போன்றது என்ற எண்ணமே போஸுக்கு இருந்தது.
போஸின் அந்தப் புத்தகம் இப்போதும் அச்சில் இருக்கிறது. ஆனால் நான் சுட்டிக் காட்டிய கடிதம் மக்களிடம் அதிகம் பரவவில்லை. ‘நேரடி நடவடிக்கை நாள்’ விளைவித்த செயல்களை நேரில் பார்த்த சாட்சியின் கடிதம் என்பதற்காக மட்டும் அதை நான் குறிப்பிடவில்லை. 1946 ஆகஸ்டில் என்ன நிலை நிலவியதோ அதுவே 2014 ஆகஸ்டிலும் நிலவுகிறது. இன்றும் முழுமையான வகுப்பு ஒற்றுமை ஏற்பட்டுவிடவில்லை. உத்தரப் பிரதேசத்தில் இப்போதும் வகுப்புக் கலவரங்கள் நிகழ்கின்றன. அச்சமும் பரஸ்பர அவநம்பிக்கையும்தான் இந்த மோதல்களுக்குக் காரணம். தற்காப்புக்காக இரு சமூகத்தவரும் மோதல்களில் ஈடுபடுகின்றனர்.
“தனியாக நடக்க அச்சமாக இருக்கிறது, நாம் சேர்ந்து நடக்கலாம்” என்று தன் நண்பரிடத்தில் சொல்லியிருக்கிறார் நிர்மல் போஸ். ஆனால் காந்திஜியோ தனியாகவே நடந்தார். அடுத்து அவர் கொல்கத்தா வந்தார். அவர் எப்போதுமே தனியாக நடப்பதை விரும்பினார். போஸ் அவருடன் சேர்ந்துகொண்டார். நவகாளி பிஹாரில், பிறகு கொல்கத்தா, டெல்லியில் தன்னுடைய சீடர்களுடன் காந்திஜி நடந்தார். அவரைப் போல தனித்து நடக்கும் மனோதைரியம் இப்போதைய அரசியல் தலைவர்களுக்குக் கிடையாது. கூட்டமாகவாவது நடந்துசெல்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் சரியல்ல. பிரதமர் தலைமையில் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு உத்தரப் பிரதேசத்துக்கு சென்றால் அங்கு சமூக அமைதியை அவர்களால் மீட்க முடியும்.
- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வராலற்று நூல்களின் ஆசிரியர், தமிழில்: சாரி