உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவிலான இணைய பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர். சுமார் 80 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்கள்தான் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை வாழவைக்கின்றனர் என்றாலும் அது மிகையாகாது. அதனால் தானோ என்னவோ ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பதுபோல் அரசியல் கட்சிகளும் இன்ஸ்டா, யூடியூப் இன்ஃப்ளூயன்சர்களை தாஜா செய்து தத்தம் கட்சிப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் போக்கினை அதிகரித்துள்ளன. அது பற்றிய அலசல் கட்டுரைதான் இது.
இந்திய சமூக வலைதள பிரபல இன்ஃப்ளூயன்சரான சாந்தினி பகத் இதுநாள் வரை அவருடைய பக்திப் பாடல்களுக்காகத்தான் அறியப்பட்டுவந்தார். ஆனால், இப்போது அவர் தனது ‘டெய்லி டோஸ்’ பக்தியுடன் ஒரு டோஸ் அரசியலையும் கலந்து கொடுத்து வருகிறார். சாந்தினி தற்போது பாஜகவுக்காக சமூக வலைதளங்களின் வாயிலாக இன்ஃப்ளூயன்ஸ் செய்து கொண்டிருக்கிறார். சாந்தினி பகத்துக்கு ஏராளமான இளைஞர் கூட்டம் ஃபாலோயர்ஸாக உள்ளனர். அவர்கள்தான் பாஜகவின் டார்கெட். அவர்களை நேரடியாக எதிர்கொள்வதற்குப் பதில், அவர்கள் பாணியில், அவர்கள் மொழியில் பேசும் சாந்தினி போன்றோரை பயன்படுத்துகிறது பாஜக.
கடந்த ஆண்டு பாஜக இந்தூரில் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கன்டென்ட் க்ரியேட்டர்ஸ் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அப்போது 18 வயதே நிரம்பியிருந்த சாந்தினி பகத்துக்கு 2 லட்சம் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் இருந்தனர். பாஜகவின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சாந்தினியின் இன்ஸ்டாகிராமில் அன்றாடம் குறைந்தது 5 பதிவுகளாவது பாஜகவை முன்னிலைப்படுத்தி வருகிறது.
பாஜகவின் சுகாதாரத் திட்டங்கள் பற்றி பதிவிடும் சாந்தினி, இடைச்செருகலாக பாஜக முன்னாள் அமைச்சருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்கிறார். அவ்வப்போது சிவன், பார்வதி என கடவுளர் படமும் வரும். இவற்றைப் பற்றி சாந்தினி பகத்திடம் கேட்டால், “என்னைப் பின்தொடர்பவர்களுக்கு எது ஆதாயமாக இருக்குமோ அதை நான் பகிர்கிறேன்” எனக் கூறுகிறார்.
எல்லோருக்கும் வாய்ப்பு: பாஜக நாடு முழுவதும் உள்ள யூடியூப் பிரபலங்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயசர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை கடந்த ஆண்டு (2023) ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்ஃப்ளூயன்சர்களுக்கான ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கிறதா லட்சங்களில் இருக்கிறதா என்ற பாரபட்சம் இல்லை அவர்களுக்கு சில நேரங்களில் அமைச்சர்கள் கூட பேட்டி கொடுத்துவிடுகின்றனர். பிரதான ஊடகங்கள் பலவும் பேட்டிக்கு தவமாய் தவம் கிடக்கும் நபர்கள் கூட இன்ஃப்ளூயன்சர்களுக்கு சர்வசாதாரணமாக பேட்டி கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். இன்ஃப்ளூயன்சர்களின் அத்தகைய எக்ஸ்குளூசிவ் பேட்டிகளும், கட்சிப் பிரபலங்களுடனான போட்டோ ஷூட்களும், பிரதமர் மோடி பற்றி உருவாக்கப்பட்ட கன்டென்ட்களும் களத்தில் நன்றாகவே வேலை செய்வதாக கட்சிக்கு பின்னூட்டமும் செல்கின்றதாம்.
சமூக வலைதளத்தில் உணவு சார்ந்து, பயணம் சார்ந்து, தொழில்நுட்பம் சார்ந்து என பல்துறை இன்ஃப்ளூயன்சர்கள் இருக்கும்பட்சத்தில், இதில் பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் பிரச்சாகராக வாய்ப்பு வழங்கப்படுகிறதாம்.
இன்ஃப்ளூயன்சர்கள் பயன்பாடு குறித்து பாஜக தேர்தல் குழுவைச் சேர்ந்த தேவாங் டவே ‘ராய்டர்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “கடந்த ஆண்டு நாங்கள் பல்துறை சார்ந்த இன்ஃப்ளூயன்சர்களை சந்தித்தோம். அவர்களுக்கு கட்சியின் கொள்கைகளை விளக்கினோம். கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு செய்த சாதனைகளை எடுத்துக் கூறினோம். அதை சுவாரஸ்யமாக கருத்துகளாக உருவாக்கி அதில் தங்களின் சொந்த அனுபங்களைச் சேர்த்துப் பகிரச் சொன்னோம்.
உதாரணத்துக்கு, இன்ஃப்ளூயன்சர்கள் வசிக்கும் பகுதி அருகே ஏதேனும் சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தார். அதைப் பற்றி பேசி அது எப்படி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது என்று கூறச் சொல்வோம். இது கட்சியைப் பற்றி நாங்கள் எழுதிக் கொடுத்துப் பேசச் சொல்வதில்லை. இது மக்களே மக்கள் நலத்திட்டங்கள் பேசுவது போன்றது. மோடி ஆட்சி மீண்டும் ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வளர்ச்சித் திட்டங்களைப் பிரபலமானவர்கள் எடுத்துரைப்பது எனக் கொள்ளலாம்.
நம் கட்சியைப் பற்றியும், நம் ஆட்சியைப் பற்றியும் நாமே பறைசாற்றுவதோடு மூன்றாவது நபர் ஒருவர் நமக்காக முழங்கினால் அதன் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதைத்தான் இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் செய்கிறோம்” என்றார்.
பாஜக மட்டும்தானா?! - சரி பிரச்சாரத்துக்கு, விளம்பரத்துக்கு, சுய தம்பட்டத்துக்கு பாஜக மட்டும்தான் இன்ஃப்ளுயன்சர்களைப் பயன்படுத்துகிறதா என்றால், இல்லை... எல்லா கட்சிகளுமே பயன்படுத்துகின்றன என்பதுதான் கள ஆய்வின் முடிவாக இருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளர்களில் ஒருவரான வைபவ் வாலியா கூறுகையில் “எங்கள் கட்சியும் விளம்பரத்துக்காக இன்ஃப்ளூயன்சர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரே எண்ணம் கொண்ட இன்ஃப்ளூயன்சர்களை அடையாளம் கண்டு அவர்களை எங்களுக்காகப் பதிவிடச் செய்கிறோம். அவர்கள் பதிவிடும் கருத்துகள் நேரடியாக காங்கிரஸை ஆதரிக்காவிட்டாலும் கூட அது எங்களின் கொள்கைகளுடன், நோக்கங்களுடன் ஒத்துபோனால் போதும் என்றே அவர்களைப் பழக்கப்படுத்துகிறோம்” என்றார்.
கடந்த ஆண்டு ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் தங்களைப் பிரபலப்படுத்த இன்ஃப்ளூயசர்களைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. தெலங்கானாவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி 250-க்கும் மேற்பட்ட இன்ஃப்ளுயன்சர்களை பணியமர்த்தி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாகக் கருத்திடச் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த புது உத்தி சில கேள்விகளை எழுப்பாமலும் இல்லை. இந்தியாவில் இணையம் வழியாக தவறான தகவல்கள் பரவுவது அதிகரித்து வரும் காலகட்டத்தில், பொய்ச் செய்திகளின் அபாயம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய சவாலாக உருவாகும் என்ற கவலையை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிப்படைத்தன்மையின்மை - ஒரு முக்கியப் பிரச்சினை: இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் அமைப்பின் செயல்பிரிவு இயக்குநர் ப்ரதீக் வாக்ரே, தேர்தல் பிரச்சாரங்களில் இன்ஃப்ளூயன்சர்கள் பயன்பாடு குறித்து கூறுகையில், “தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் இதுபோன்ற இன்ஃப்ளூயன்சர்கள் நிதி ஆதாயமோ, இல்லை... வேறுவிதமான ஆதாயங்களோ பெறுகிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அப்படியிருந்தால் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அது ஒரு தெளிவின்மையை உருவாக்குகிறது” என்றார்.
இன்ஃப்ளுயன்சர்கள் உருவானதன் பின்புலம்: இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் உண்டானதை மூன்றிலிருந்து நான்காண்டுகளுக்கு முன்னதாக எனக் கணக்கிடலாம். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது ஆன்லைன் பதிவுகள் பல அங்கு நடந்த போராட்டங்களுக்கு வலுசேர்த்தன என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பொலிட்டிக் அட்வைசர்ஸ் (Politique Advisors) என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் அங்கித் லால் இது குறித்து கூறுகையில், “இன்ஃப்ளூயன்சர்களும், உள்ளூர் யூடியூப் சேனல்காரர்களும் விவசாயப் போராட்டத்தின் கருத்தை பரவலாக்கி பிரபலப்படுத்துவதில் பெரும் பங்காற்றினர். இதுதான் பாஜகவின் கவனத்தை ஈர்த்தது. பாஜக புதிய, இளைய தலைமுறையினரை வசீகரிக்க ஏற்கெனவே நாலுபேர் நன்கறிந்த இன்ஃப்ளுயன்சர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்ததற்கும் இதுவே பின்புலமாக இருக்கும்” என்றார்.
இந்தியாவில் 2 கோடிக்குக்கும் அதிகமான வாக்காளர்கள் 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பலரும் ஆன்லைனில் இன்ஃப்ளூயன்சர்கள் அரசியல் கட்சி பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பவர்களாக இருக்கின்றனர். இன்ஃப்ளூயன்சர்களின் அரசியல் பதிவுகள் பற்றி அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோயோஜீத் பால் கூறுகையில், ”இன்ஃப்ளூயன்சர்களின் அரசியல் பதிவுகள் அரசியல்வாதிகளை மனிதாபிமானிகளாகக் காட்டப் பயன்படுகிறது. இது ஒருவகையில் நேரடிப் பிரச்சாரமாகக் கூட இருக்கலாம்” எனக் கூறுகிறார்.
தரை லோக்கல் தாக்கத்துக்காக..! - சமயக் ஜெயின் என்ற இன்ஃப்ளூயன்சர் பயணம் சார்ந்த பதிவுகளைப் பகிர்ந்து அதன் மூலம் 1,10,000 ஃபாலோயர்ஸைக் கொண்டுள்ளார். அவர் இதுவரை பாஜக ஒருங்கிணைத்த 4 இன்ஃப்ளூயன்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த ஆலோசனைக் கூட்டங்கள் பற்றி சமயக் ஜெயின், “அவை பொதுவான கூட்டங்கள்தான். அங்கே எங்களுக்கான அறிவுரைகள் வழங்கப்படும். கட்சியின் செயல்பாடுகளைக் சொல்வார்கள். கட்சியின் திட்டங்கள் என்ன என்பதையும் சொல்வார்கள். கட்சியின் பயணத்தை விளக்குவார்கள்” என்றார். 22 வயதான சமயக் ஜெயின், கடைநிலை வரை தங்கள் கருத்துகளைக் கொண்டு செல்ல பாஜக பயன்படுத்திய நூற்றுக்கணக்கான இன்ஃப்ளூயன்சர்களில் ஒருவர்.
சமூக ஊடக நிபுணர்களும், உள்ளூர் இன்ஃப்ளூயன்சர்கள் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். அதாவது ‘ஒன் ஆன் ஒன்’ என்றளவில் நேருக்கு நேர் நம்பிக்கையை விதைப்பவர்கள் என்று கூறுகிறார்கள்.
சாவின் கம்யூனிகேஷன்ஸ் என்ற மக்கள் தொடர்பு நிறுவனத்தின் தலைவர் குமார் சவுரவ், “இந்தியாவில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது பெரும்பலும் கடைமடை மக்கள்தான். அவர்களுக்கு அவர்கள் பகுதி சார்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் நன்கு பரிச்சியமானவர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்களின் பேச்சு, பதிவு தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறுகிறார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக எதிர்ப்பு பதிவுகளைப் பதிவுகளைப் பகிர்ந்தால் பணம் தருவதாக எதிர்க்கட்சிகள் கூறியதாகக் கூறுகிறார்.
இன்னொரு பெயர் வெளியிட விரும்பாத இன்ஃப்ளூயன்சர், “நிறைய அரசியல் பிரமுகர்களுக்கு சமூக ஊடகக் கணக்குகள் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்பவர்கள் அதிகமாக இல்லை. அதனால் அவர்கள் எங்களிடம் அவர்களை, கட்சியைப் பிரபலப்படுத்தும் பொறுப்பைத் தருகின்றனர். இதற்கெல்லாம் பணம் தரப்படுகிறதா, வேறு ஆதாயம் பெறுகிறோமா என்பதெல்லாம் வெளிப்படையாக பகிரப்படக் கூடாது என்பது எங்களுக்கு வழங்கப்படும் அறிவுரை, நான் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஐந்து பதிவுகள் போட்டேன். எனக்கு ஒவ்வொரு பதிவுக்கும் 180 அமெரிக்க டாலர் வீதம் பணம் கிடைத்தது” எனக் கூறுகிறார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளும் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் வேட்டைக்கு தயாராகிவிட்டது. பாஜக தேர்தல் குழுவைச் சேர்ந்த தேவாங் டவே இறுதிக் கருத்தாக, “வேட்பாளர்கள் அறிவிப்பு நிறைவு பெற்றதும் நாங்கள் இன்ஃப்ளூயன்சர்களை நாடுவோம். எல்லா தொகுதிகளிலும் மைக்ரோ லெவலில் குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்து கருத்துகளைப் பகிர அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். நாடு முழுவதும், மாநிலங்கள் முழுவதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மோடி எப்படி சாத்தியமாக்கினார் என்பதை எடுத்துரைக்க அவர்களைப் பயன்படுத்துவோம்” என்றார்.
இணையத்தின் தாக்கம் பரந்து விரிந்து கிடக்கும் இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர்களின் தாக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது இனி வருங்காலங்களில் இன்ஃப்ளூயன்சர்கள் அணி என்று கட்சியில் ஒன்று உருவானாலும் கூட சந்தேகப்படுவதற்கில்லை எனலாம்.
23 பேருக்கு விருது: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக 37 கோடி வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து இருக்கிறார். இதன்மூலம் பாஜக தனித்து 370 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது. இதற்காகப் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றுதான் ‘இன்ஃப்ளூயன்சர்’களை வளைத்தல்.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் கடந்த மாதம் 8-ம் தேதி நாடு முழுவதும் 23 பேருக்கு ‘தேசிய படைப்பாளி விருதுகள்’ வழங்கப்பட்டன. விருது பெற்ற ஒவ்வொரு இன்ஃப்ளூயன்ஸர்களின் சமூக வலைதள கணக்குகளையும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஆக, இந்த அணுகுமுறையில் முந்துவது பாஜகவா அல்லது வலைதளங்களைக் காட்டிலும் களம்தான் வெற்றிகளை நிர்ணயிக்குமா என்பதும் தேர்தல் முடிவுகள் மூலம் வெகுவாக தெரியவரலாம்.
உறுதுணை: - ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான ‘ராய்ட்டர்ஸ்’ கட்டுரை.