தமிழ்நாட்டில் எத்தனை முனைப் போட்டிகள் வந்தாலும், பொதுத் தேர்தல்களில் முதன்மைப் போட்டி என்பது திமுக - அதிமுக அணிகளுக்கு இடையேதான். என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் திமுக, அதிமுக அணிகளுக்கு அப்பால் களத்தில் நின்று குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்ற அணிகளும் கட்சிகளும் தமிழ்நாட்டில் உண்டு.
அந்த வகையில், 1996 மக்களவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவியது. அதில் திமுக அணி 54.96% வாக்குகளும், அதிமுக அணி 26.10% வாக்குகளும், மதிமுக தலைமையிலான அணி 8.36% வாக்குகளும் பெற்றன. 1999 மக்களவைத் தேர்தலில் திமுக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 47.13% வாக்குகளும், அதிமுக அணி 41.69% வாக்குகளும், தமாகா-விசிக கூட்டணி 7.15% வாக்குகளும் பெற்றன.
2009இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 42.53% வாக்குகளும், தேசிய அளவில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்த அதிமுக தலைமையிலான அணி 37.30% வாக்குகளும். திமுக - அதிமுக அணிகளுக்கு மாற்றாகக் களமிறங்கிய தேமுதிக 10.29% வாக்குகளும் பெற்றன.
2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 44.92% வாக்குகளைப் பெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 27.18% வாக்குகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.80% வாக்குகளும் பெற்றன.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 53.8% வாக்குகளும், அதிமுக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 30.7% வாக்குகளும் பெற்றன. அந்தத் தேர்தலில் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. திமுக - அதிமுக அணிகளுக்கு எதிராக இக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக 12.84% வாக்குகளைப் பெற்றன.