வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 96.9 கோடி வாக்காளர்கள் இயந்திரம் மூலம் வாக்களிக்க உள்ளனர். ராணுவம், காவல் துறை உள்பட அரசுப் பணியிலும் நடப்புத் தேர்தல் பணியிலும் உள்ளதால் அஞ்சல்வழி வாக்களிக்க உள்ளோர் 19.1 லட்சம் பேர்.
குறிப்பிட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் மக்களவைத் தேர்தல் இது. 85 வயதுக்கு மேற்பட்டோரும் (82 லட்சம் பேர்) 40%-க்கும் மேல் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களாகச் சான்றிதழ் அளிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் (88.4 லட்சம் பேர்) இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். 2020இல் கரோனா தொற்றின்போது பிஹாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை அறிமுகமானது.
# 2019இல் நடந்த மக்களவைத் தேர்தலைவிட, இத்தேர்தலில் கூடுதலாக 7.3 கோடிப் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை, அமெரிக்க நாட்டின் மக்கள்தொகையின் மும்மடங்கு எண்ணிக்கைக்குச் சமம்.
# 1951இல் முதல் பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடி; அது கடந்த 70 ஆண்டுகளில் 5.5 மடங்கு அதிகரித்துள்ளது.
# முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த மக்களவைத் தேர்தலைவிட, இம்முறை அதிகம். 2019இல் 1.5 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 1.8 கோடியாக அதிகரித்துள்ளது. இது நெதர்லாந்து நாட்டின் மக்கள்தொகையைவிட அதிகம்.
# 2019 மக்களவைத் தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 46.5 கோடி. இது இம்முறை 6.9% அதிகரித்து, 49.7 கோடியாக உள்ளது. 2019இல் பெண் வாக்காளர்கள் 43.2 கோடி. வரவிருக்கும் தேர்தலில் இது 9% அதிகரித்து 47.1 கோடியாக உள்ளது.
# 2019 தேர்தலில் 10.4 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இம்முறை கூடுதலாக 10,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.