ஜாக்ஸனின் நிழல் தெரிந்தாலே கடவுளைக் கண்டதுபோல் ரசிகர்கள் பரவசமடைந்ததை மறந்துவிட முடியாது.
20 ஆண்டுகளுக்கு முன், ‘கேசட்டுகளில் பாடல்களைப் பதிவுசெய்து கேட்ட தலைமுறை’ என்று ஓர் இனம் இருந்தது. விருப்பப் பாடல்களைப் பட்டியலிட்டு, ரசனைக்கு ஏற்ற வரிசையில் அவற்றை அடுக்கி ஒரு தாளில் எழுதி, ‘சிக்ஸ்ட்டி’ அல்லது ‘நைன்ட்டி’ கேசட்டுகளில் அவற்றைப் பதிந்து காதாரக் கேட்டுக் குளிர்ந்த காலம் அது. இளையராஜாவின் பாடல்களுடன், பெயர் தெரியாத இந்தி இசையமைப்பாளர்களின் பாடல்களையும் பதிந்து கேட்ட பொற்காலம். அந்தக் காலகட்டத்தில் கேசட் பட்டியல்களில் இடம்பெறும் ஆங்கிலப் பாடல்கள் ஒருவருடையதுதான். பெண்மையின் மென்தன்மையும் புயலின் வேகமும் கலந்து அதிர அதிர ஒலித்த அந்தக் குரல், மைக்கேல் ஜாக்ஸனுடையது.
மொழி அறியாமலே கேட்டுவந்த இந்திப் பாடல்களின் இடத்தை அவரது பாடல்கள் எப்போது ஆக்கிரமித்துக்கொண்டன என்று தெரியவில்லை. எனினும், முதன்முதலாக உடலை ஊடுருவி, நரம்புகளை முறுக்கேற்றும் அனுபவத்தைத் தந்தது அவரது இசைதான். இந்தியாவில் வெளியான ஆங்கிலப் படங்கள் மூலமாகவாவது ஹாலிவுட் நடிகர்கள் பரிச்சயமானவர்களாக இருந்தனர். ஆனால், ஜாக்ஸனின் ஆல்பங்கள் தொலைக்காட்சிகளுக்கு உரியவை. அவர் நடித்த ஒரு சில ஆங்கிலப் படங்களும் இந்தியச் சந்தைக்கானவை அல்ல. இன்று இருப்பதுபோல், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத ஒரு நேரத்தில், பட்டிதொட்டிகளிலெல்லாம் அவர் பெயர் பரவியிருந்தது மிகப் பெரிய ஆச்சரியம். பத்திரிகைகளில் வெளியான செய்திகள் வாயிலாக அவரது பெயர் பரிச்சயமானது என்றால், அவரது குரலையும் நடனத்தையும் பிரபலமாக்கிய பெருமை பாடல் பதிவு செய்யும் கடைகளையும், நடனக் குழுக்களையும்தான் சேரும்.
துள்ளவைக்கும் இசை
ஆங்கிலப் பாடல் வரிகள் அப்போது யாருக்குத் தெரியும். எனவே, கேசட் கடைகளில் மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் என்று எழுதிக்கொடுத்தால் போதுமானது. ‘பேட்’, ‘திரில்லர்’, ‘டேஞ்சரஸ்’ என்று அவரது புகழ்பெற்ற ஆல்பங்களிலிருந்து பாடல்களைப் பதிவுசெய்து தந்துவிடுவார்கள். டூன் இன் ஒன் ஸ்டீரியோ டேப் ரெக்கார்டர்களில் போட்டுக் கேட்டால், நடக்க முடியாதவர்களுக்குக்கூட எழுந்து நடனமாட வேண்டும் என்று வெறி பிறக்கும். எலும்பை உடைத்துக்கொள்ளும் அபாயம் கொண்ட நடன அசைவுகள் மூலமாக உலகின் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஜாக்ஸன் வசீகரித்தார். உடலை ஒட்டிய கருநிற உடை, முக்கால் பேன்ட்டுக்குச் சற்றுக் கீழே கருப்புக் காலணிகள், தலையில் கருப்புத் தொப்பியுடன் சுழன்றாடிய நடனக் கலைஞர்களின் ஆதர்சமாக ஜாக்ஸன் இருந்தார்.
அதேபோல, தையற்கடைகளிலும் முடிதிருத்தும் கடைகளிலும் தொங்கிய புளோ-அப் படங்களில் ஜாக்ஸன் நீக்கமற நிறைந்திருந்தார்.
பெரிய அளவிலான கேசட் உறையில், 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் வெளியான ‘டேஞ்சரஸ்’ ஆல்பம் மறக்க முடியாதது. அதை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால் கல்லூரி நண்பனிடம் அதை இரவல் வாங்கிக் கேட்டது நினைவில் இருக்கிறது. ‘அந்தப் பெண் மிகவும் அபாயகரமானவள்’ என்ற பொருளில் ஒலிக்கும் ‘டேஞ்சரஸ்’ பாடலும் தெறிக்கும் அதன் தாளமும் ஒரு மந்திரம்போல் கட்டிப்போட்டன. அதேபோல், ‘நினைவிருக்கிறதா அந்தக் காலம்?’ என்ற பொருளில் தொடங்கும் ‘ரிமம்பர் த டைம்’ பாடல் என்று அற்புதமான பாடல்களைக் கொண்ட பொக்கிஷம் அந்த ஆல்பம். கல்லூரி, பல்கலைக்கழக விழாக்களில் ‘ஜாம்’ பாடலுக்கு ஆடாத மாணவர்கள் இருக்க மாட்டார்கள்.
பிரமிக்கவைத்த பாடல்கள்
எம்.டி.வி., வி-சேனல் போன்ற சேனல்கள் இந்தியாவில் பிரபலமான சமயத்தில் அவரது பாடல்கள் முழுமையாகக் காணக் கிடைத்தன. ‘திரில்லர்’ ஆல்பத்தில் வரும் ‘ஜஸ்ட் பீட் இட்’ பாடலில் தெருவில் மோதிக்கொள்ளும் இளைஞர் குழுக்களை மிக அழகாகச் சித்தரித்திருப்பார். புகழ்பெற்ற நிலவு நடை (மூன் வாக்) நடனம் முதன்முதலில் அவரது ‘பில்லி ஜீன்’-ல் இடம்பெற்றது. ‘பேட்’ ஆல்பத்தில் வரும் ‘ஸ்மூத் கிரிமினல்’ பாடலில், கவர்ச்சியான போக்கிரியாக மின்னல் வேகத்தில் அவர் ஆடும் நடனம் சிலிர்க்கவைக்கும்.
அவரது பாடல்களில் குழந்தைகளைக் கவரும் அம்சம் நிறைய இருக்கும். டேஞ்சரஸ் ஆல்பத்தின் ‘ப்ளாக் ஆர் ஒயிட்’ பாடலின் தொடக்கத்தில் இசையை அதிக ஒலியுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவனை அவனது தந்தை கண்டிப்பார். பையன் எலெக்ட்ரிக் கிட்டாரில் ஒலிபெருக்கியை இணைத்து, அதிர வைக்கும் ஒலியுடன் அதை இசைப்பான். நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவனது தந்தை, அதிர்ச்சியில் வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு வானில் பறந்துசெல்வார். அதேபோல், ‘கோஸ்ட்ஸ்’ ஆல்பத்தில், மாளிகையில் வசிக்கும் குறும்பான பேயாக வரும் மைக்கேல் ஜாக்ஸன், அங்கே வரும் மக்களைக் கடுமையாகப் பயமுறுத்துவார். எனினும், அவரது குறும்பு அங்கே வந்திருக்கும் சிறுவர்களைக் கவர்ந்துவிடும். அந்தப் பாடலில் மக்கள் கும்பலுக்குத் தலைமையேற்று வரும் நடுத்தர வயதுக் கனவானும் மைக்கேல் ஜாக்ஸன்தான். ஆனால், நம்ப முடியாத அளவுக்கு அவரது ஒப்பனை இருக்கும்.
தாக்கம் தந்த கலைஞர்
சாதாரண ரசிகர்களுக்கே மிகப் பெரும் பாதிப்பைத் தந்த மைக்கேல் ஜாக்ஸன் தமிழ்த் திரைக் கலைஞர்களை வெகுவாகப் பாதித்ததில் ஆச்சரியம் இல்லை. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட தமிழ்த் திரைக் கலைஞர்களின் படைப்புகளில் அவரது இசை, நடனம், காட்சியமைப்பின் கூறுகள் இருப்பதைப் பார்க்கலாம். ‘திரில்லர்’ (1982) வெளியான காலத்திலேயே அவரது ‘பில்லி ஜீன்’ பாடல் தமிழில் பிரதியெடுக்கப்பட்டது பலர் அறியாதது. அண்ணா டவர் கீழே கமல் - மாதவி பாடி ஆடும் ‘சொர்க்கத்தின் வாசல் இங்கே’ பாடல், பில்லி ஜீனின் ‘தமிழ் வடிவம்’தான். மைக்கேல் ஜாக்ஸன் தந்த பாதிப்பில் உருவான பிரபுதேவா, பின்னாளில் அவருடன் இணைந்து நடனமாடும் அளவுக்கு உயர்ந்தது ஒரு சாதனை.
சிறு வயதில் கடினமான விஷயங்களை எதிர்கொண்டவர் ஜாக்ஸன். அதன் வலி அவரது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. அவரது தனிப்பட்ட வாழ்வு மற்றும் அவரது பரிதாபமான முடிவு குறித்து வெளியான தகவல்கள் அவரது ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்தின. அவரது சொத்துகளுக்கு உரிமை கோரி நடக்கும் வழக்குகள்பற்றிய செய்திகளும் கசப்பானவை. ‘நின்றால் செய்தி… நடந்தால் செய்தி…’ என்று செய்தியாளர்கள் அவரை மொய்த்ததையும், அவரது நிழல் தெரிந்தாலே கடவுளைக் கண்டதுபோல் ரசிகர்கள் பரவசமடைந்ததையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. பாப் மற்றும் ராக் இசையின் முடிசூடா மன்னனாக விளங்கிய அவருக்கு, இன்றுவரை மாற்று இல்லை.
இரைச்சலான இசை என்று காதைப் பொத்திக்கொள்ளும் மெல்லிசை ரசிகர்கள், அவரது ‘எர்த்’ பாடலை ஒருமுறை பார்த்தால் மெய்சிலிர்த்துவிடுவார்கள். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சூறையாடுபவர்கள், வேட்டைக்காரர்கள், போர் விரும்பிகளின் செயல்களால் பூமி எத்தனை பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை வலியுடன் உணர்த்தும் பாடல் அது.
சோர்வாக இருக்கும் தருணத்தில் அவரது ‘பீட் இட்’ பாடலைக் கேட்டால் மலையைப் புரட்டிப்போடும் உற்சாகம் பிறக்கும். அதுதான் இந்த உலகுக்கு மைக்கேல் ஜாக்ஸன் பரிசளித்துச் சென்ற ‘உற்சாக பானம்’!
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in