சிறப்புக் கட்டுரைகள்

பொருளாதார அறிஞர் ஜீன் டிரீஸுடன் ஒரு நாள்

ராமசந்திர குஹா

ராஞ்சி நகரில் குடியிருப்பவர்களில் ஒருவர் உலகமே அறிந்த கிரிக்கெட் வீரர். உத்தராகண்டில் பிறந்த அவர் ராஞ்சியில் வசிக்கிறார். ஜார்கண்டின் தலைநகரமான ராஞ்சிக்கு வந்த இன்னொரு பிரமுகரும் அவரைப் போலவே சுதந்திரமாகச் செயல்படுகிறவர்தான். அவருடைய தொழிலுக்காக நன்கு அறியப்பட்டவர்தான். கிரிக்கெட் வீரர் தன்னுடைய விளையாட்டுத் திறமையால் கோடிக் கணக்கான இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறார். இன்னொருவரோ இடைவிடாத தன்னுடைய நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோரைப் பசியின் கோரப்பிடியிலிருந்தும் வறுமையிலிருந்தும் காப்பாற்றுகிறார். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உருவாவதில் இவருடைய பங்கு அதிகம். அச்சட்டத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், அது அமலாவதையும் தொடர்ந்து கண் காணித்துவருகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றிலும் அவருடைய பங்களிப்பு அதிகம்.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ராஞ்சியில் இருந்தேன். மனநல மருத்துவர்கள் மாநாட்டில் பேசினேன். கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனி ஊரில் இல்லை என்பது தெரியும். அப்படியே அவர் இருந்திருந்தாலும் அவரிடம் பேச என்னிடம் அதிகமில்லை. இன்னொரு ராஞ்சிவாசியைப் பார்த்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காக அவரிடம் முன்கூட்டியே பேசி அனுமதியும் பெற்றேன். அவர் ஏராளமாகச் சுற்றுப்பயணம் செல்கிறார். தோனியைப் போல வசதியாக விமானங்களில் பறக்காமல் ரயில்களிலும் பஸ்களிலும்தான் செல்கிறார். இரவானால் கிராமங்களில்தான் தங்கு கிறார். அவர்தான் பொருளாதார அறிஞர் ஜீன் டிரீஸ்.

ஜீன் டிரீஸை இதற்கு முன்பும் பலமுறை பார்த் திருக்கிறேன். 1990-களின் முற்பகுதியில் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (உயர் கல்விக்கூடம்) ஆசிரியராக இருந்தபோது, தொழிலாளர்களுக்கான எளிய குடியிருப்பில் அவரைச் சந்தித்தேன். இரண்டாவது முறை 1990-களின் பிற்பகுதியில் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அவர் தங்கியிருந்த திமர்பூர் குடிசைப் பகுதியில் சந்தித்தேன். மூன்றாவது முறை, 2000-களின் முற்பகுதியில் பெங்களூரு வந்த அவரை ரயில் நிலையத்துக்குக் கொண்டுபோய் விட்டு வந்தேன். மதிய உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் எப்படி அமலாகிறது என்று பார்க்க நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று பார்க்க, முன்பதிவு செய்யாத சாதாரண வகுப்புப் பெட்டியில் அவர் சென்றார்.

ஒடிஷா மாநிலத்தில் பழங்குடிகளுக்கு உதவும் தன்னார்வத் தொண்டு ஊழியர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போதுதான் டிரீஸ் அங்கிருந்து சென்றதாகக் கூறினர். காசிப்பூரிலிருந்து ராயகட்டாவுக்குச் சென்றார். வழியில் எல்லா குடிசைகளுக்குள்ளும் நுழைந்துவிடுவார். திறந்தவெளியில்தான் படுத்து உறங்குவார். டெல்லியில் ஒரு முறை சந்திக்கவிருந்தபோது அவசரமாக பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்ல வேண்டிவந்ததால் சந்திப்பை ரத்துசெய்தார். பெல்ஜியத்தில் பிறந்த டிரீஸ் இந்தியக் குடியுரிமை யைப் பெறும் நிலையில் இருந்தார். பெல்ஜியத்தவருக்கு அவரை வேற்று நாட்டுக் குடிமகனாக அனுப்ப விருப்பமில்லை. எனினும், அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்துவிட்டது.

இதற்கிடையில், நானும் அவரும் கடிதம் எழுதிக்கொள்வோம். இருவருடைய வேலைகளையும் பாராட்டுவோம், சில சமயம் கடுமையாக விமர்சிப்போம். சந்தையை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலை. பல சமயங்களில் அவர் அரசுக்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார். என்னைவிட ஓராண்டு இளையவர். இருவரும் இந்தியாவில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றோம், இந்தியாவைப் பற்றியே அதிகம் எழுதினோம். அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அறியத்தான் ராஞ்சியில் சந்திக்க விரும்பினேன். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை அறையில் சந்தித்தோம். ராஞ்சியை ஹஸாரிபாக்குடன் இணைக்கும் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிச் சென்றார். மரத்தடியில் பைக்கை நிறுத்திவிட்டு, சிறிய குன்றுக்கு அருகில் சென்று அமர்ந்தோம். எங்கள் கண் எதிரில் பள்ளத்தாக்கு, அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஓடை, முண்டா பழங்குடிகளின் வீடு ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவர் பேசத் தொடங்கினார்.

ஜீன் டிரீஸ் 1959-ல் லெவன் என்ற பழமையான நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஜேக்கஸ் டிரீஸ் உலகறிந்த பொருளாதார ஆசிரியர். ஜேக்கஸ் டிரீஸும் அவருடைய மனைவியும் மக்களுக்குச் சேவைசெய்யும் மனப்பான்மை உள்ளவர்கள். கல்வியறிவும் சேவை மனப்பான்மையும் மிக்கவர்கள் நடுவில் டிரீஸ் வளர்ந்தார். அவருடைய சகோதரர்களில் ஒருவர் இடதுசாரி அரசியல் தலைவர். இன்னொருவர் வணிகவியல் பேராசிரியர். இன்னொருவர் மொழிபெயர்ப்பாளர்.

ஜீன் டிரீஸ் எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பு பயின்றார். வளர்ச்சிப் பொருளாதாரத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தால் டெல்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் கழகத்துக்கு (ஐஎஸ்ஐ) வந்தார். அங்கு பயின்றபோது அமர்த்திய சென்னைச் சந்தித்தார். அவருடன் இணைந்து நான்கு புத்தகங்களை எழுதினார். இரண்டு புத்தகங்களை ‘எடிட்’ செய்தார். ‘‘புத்தகம் எழுதுவதில் 90% வேலையை டிரீஸ் செய்கிறார், பாராட்டில் 90%-ஐ நான் பெறுகிறேன்’’ என்று அமர்த்திய சென் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். இதன் பலனாக வாசகர்களுக்கு அருமையான நூல்கள் கிடைத்துள்ளன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் அமர்த்திய சென். டிரீஸ் முதலில் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பயிற்றுவித்தார். பிறகு, அலாகாபாத் பல்கலைக்கழகத்துக்கும் பிறகு ராஞ்சிக்கும் இடம்பெயர்ந்தார். ஏழைக் குழந்தை களுக்குக் கற்றுத்தருவதையும் ஏழைகளுடைய வாழ்க்கையில் ஒளியேற்றுவதையும் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட சாமியார் போலவே வாழ்கிறார். ஊதியத்தை அவர் ஏற்பது கிடையாது. தன்னுடைய குறைந்தபட்சத் தேவைகளைத் தன்னுடைய புத்தகங்களுக்குக் கிடைக்கும் ராயல்டி மூலம் பூர்த்திசெய்துகொள்கிறார். செய்தித்தாள்களில் கட்டுரைகளுக்குத் தரும் தொகையையும் பயன்படுத்துகிறார். கிராமங்களில் தங்கி அதிகம் பணியாற்றுவதால் இந்தியில் சரளமாகப் பேசுகிறார்.

சில மணி நேரங்கள் பேசிய பிறகு, குன்றிலிருந்து இறங்கி பைக்குக்குச் சென்றோம். வழியில் மான சரோவர் என்று பெயரிடப்பட்டிருந்த தாபாவில் சாப்பிட்டோம். பிறகு, அவருடைய வசிப்பிடத்துக்குச் சென்றேன். பழங்குடி கிராமத்தில் அவர்களுடைய குடிசைகளையொட்டிய ஒரு அறை மட்டுமே உள்ள குடிசை. அது ராஞ்சி நகருக்கு வெளியே இருக்கிறது. விரைவிலேயே நகரம் வளர்ந்து இந்தப் பகுதியை யும் விழுங்கிவிடும். அவர் வீட்டுக்கு ஒரு புறத்தில் மூங்கில் மரங்கள் நெருங்கி வளர்ந்துள்ளன. வீட்டுக்கு எதிரில் புளிய மரம். நாங்கள் தொடர்ந்து பேசினோம், டிரீஸ் எனக்காகத் தேநீர் தயாரித்தார். செந்நிற மார்புடைய சிறிய பறவை மரத்திலிருந்து கத்திக்கொண்டிருந்தது.

இந்தி நாளிதழ் ஒன்றில் கட்டுரைத் தொடர் ஒன்று எழுத ஆசைப்படுவதாகக் கூறினார். ஏற்கெனவே ஆங்கிலத்தில் நிறைய எழுதியிருக்கிறார். அவர் எழுதியவை ‘சென்ஸ் அண்ட் சாலிடாரிடிட்டி’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘அனைவருக்குமான ஜோல்னா பை பொருளாதாரம்’ என்று அதற்குத் துணைத் தலைப்பிட்டிருக்கிறார். உணவுப் பாதுகாப்பு, சுகாதார நலன், குழந்தைகளின் உரிமைகள், அணு ஆயுதப் போரின் ஆபத்து என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. விவசாயிகள், பழங்குடிகள், தொழிலாளர்கள், இடம்பெயர்ந்தவர்களின் துயரங்களைப் புரிந்துகொண்டு ஆழமாக விவாதித்திருக்கிறார். உரைநடை எளிதாக இருக்கிறது. ஆய்வுகள் பாரபட்சமின்றி இருக்கின்றன. ஜனநாயகம், வளர்ச்சி ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் அனைவரும் உடனே வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

இருவரும் கிட்டத்தட்ட சம வயதினர், ஒரே மாதிரியான வேலையைச் செய்கிறோம். புத்தகங்கள், கட்டுரைகளை எழுதுவதைச் சொன்னேன். 2002 முதல் எங்கள் இருவருக்கும் ஒரே அடையாளம்தான். அவருடைய சமகாலத்தவராக வாழ்வதில் பெருமை; அதைவிடப் பெருமை அவருடைய சகாவாக இருப்பது. எல்லாவற்றிலும் பெருமை நானும் அவரும் இந்தியர்கள் என்பது!

தமிழில்: சாரி

SCROLL FOR NEXT