சிறப்புக் கட்டுரைகள்

சென்னைப் புத்தகக் காட்சி: செய்தவையும் செய்ய வேண்டியவையும்!

கோ.ஒளிவண்ணன்

சென்னைப் புத்தகக் காட்சி 47ஆம் ஆண்டில் கால்பதித்திருக்கிறது. அண்ணா சாலையில் ஒரு பள்ளிக்கூடத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய பதிப்பாளர்களால் தொடங்கப்பட்டு, இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அதேவேளையில் புத்தகக் காட்சி குறித்து பல தரப்பினரும் கேள்விகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்கின்றனர். புத்தகக் காட்சியை ஏன் நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வணிக வளாகத்தில் குளுகுளு அரங்கத்தில் நடத்தக் கூடாது என்பது பலர் மனதிலும் எழும் கேள்வி.

சென்னைப் புத்தகக் காட்சி இந்த முறை தொடக்கத்திலேயே மழை காரணமாகச் சில சங்கடங்களைச் சந்தித்தது. அரங்க அமைப்பில் இருந்த ஓட்டைகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் இருந்த சில சிக்கல்களையும் மழை பளிச் என வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

ஒருபக்கம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, இன்னொரு பக்கம் வெளிநாடு வாழ் தமிழர்கள் மாநாடு, இவற்றைத் தொடர்ந்து பன்னாட்டுப் புத்தகக் காட்சி. இவை எல்லாம் உலகத் தரத்தில் நடைபெற்றபோது, சென்னைப் புத்தகக் காட்சியும் அப்படித்தானே தன்னை உருமாற்றம் செய்துகொள்ளத் தொடங்க வேண்டும்? இன்று எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதுதானே! இந்தியாவில் நடக்கும் தலைசிறந்த புத்தகக் காட்சிகளில் ஒன்றாகச் சென்னைப் புத்தகக் காட்சி திகழ்ந்தாலும், பழைய காலத்துக் கட்டமைப்புகளுடன் நடத்தப்படும் புத்தகக் காட்சி என்பதிலிருந்து இன்னும் வெளிவர வேண்டியுள்ளது.

புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லை: குறைகள் பல சொன்னாலும், சென்னைப் புத்தகக் காட்சியில் பபாசி அமைப்பில் உறுப்பினராக உள்ள பதிப்பாளர் வெறும் 12,000 ரூபாய்க்கு 100 சதுர அடியில் 12இலிருந்து 15 நாள்களுக்குத் தன் புத்தகங்களை அடுக்கி வியாபாரம் செய்கிறார். இந்தியாவில் எந்தப் புத்தகக் காட்சியிலும் இவ்வளவு குறைந்த தொகைக்கு அரங்கு கிடைக்காது என்பது நிதர்சனம். விளம்பரதாரர்கள், அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவித்தொகை, இவற்றின் துணைகொண்டு குறைந்த விலையில் உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் நலனுக்காகச் சிறப்பு அங்கீகாரம் அளிப்பதும் லாபநோக்கமின்றி குறைந்த கட்டணத்தில் சேவை அளிப்பதும் அமைப்புகளில் வழமையான ஒன்று.இன்னும் சொல்லப்போனால், இதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டுதான் சங்கமே தொடங்கப் பட்டது.

உறுப்பினர் அல்லாதவருக்குக் கடை அமைக்க என்ன செலவாகிறதோ அது பெறப்படுகிறது. இங்குதான் பிரச்சினை. புதிய உறுப்பினர்களாக யாரும் எளிதாக இணைத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது பபாசி மீதான முக்கியக் குற்றச்சாட்டு. இதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, புதிதாகச் சேரும் உறுப்பினர்களுக்குப் புத்தகக் காட்சிகளில் இடம் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதே.

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் துணைத் தலைவராக இருந்தபோது அப்போது இருந்த தலைவரின் வழிகாட்டுதலின்படி ஒரு குழு அமைத்து 80க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபோதும், அதற்குரிய கட்டணத்தை அவர்கள் செலுத்திய பிறகும் ஏதோ காரணங்களால் உறுப்பினர்கள் ஆக்கப்படவில்லை. தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு அதில் 24 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புத்தகக் காட்சியை அரசே நடத்தலாம்: என்னென்ன காரணத்தினால் ஒருவரை உறுப்பினராகச் சேர்க்க முடியாது என்று சொல்லப்படுகிறதோ அதே காரணங்களை இப்போதுள்ள உறுப்பினர்களிடம் நடைமுறைப்படுத்தினால் பலருடைய இருப்பு கேள்விக்குரியதாகிவிடும் என்பது உண்மை. மேலும் தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் சிலர் தங்கள் வணிகத்தை நிறுத்திப் பலகாலம் ஆகிவிட்டது; இருந்தாலும் அவர்கள் பெயரில் யாரோ அரங்குகள் அமைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் உதவியோடு உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்த்து, விதிகளுக்குப் புறம்பாக உள்ள போலிகளையும் பினாமிகளையும் நீக்குவதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்.

சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி கடந்த ஆண்டு பபாசியுடன் இணைந்து நடத்தப்பட்டாலும் இந்த ஆண்டு அரசாங்கமே தனியாக நடத்தியது. பபாசி அத்தகைய பிரம்மாண்டத்துடன் நடத்த முடியாது. அப்படியே நடத்தினாலும் வசதி படைத்த பெரும் பதிப்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இதன் பொருட்டு ஏன் சென்னைப் புத்தகக் காட்சியையும் அரசாங்கமே ஏற்று நடத்தக் கூடாது என்றொரு கருத்து சமீப காலமாக வலுப்பெற்று வருகிறது.

பதிப்பாளர்களுக்குப் புத்தகப் பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவுத் திட்டம். அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிவதற்குள் அமைத்திட வேண்டும் என்று அரசாங்கம் முனைப்பாக இருந்தாலும், அவர்கள் முன்வைக்கும் திட்டத்துக்கும் பதிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடைவெளி இருப்பதால், இறுதி முடிவு எடுப்பதில் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. பல மெட்ரோ ரயில் நிலையங்கள் பிரம்மாண்ட வணிக வளாகங்களாக உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. அத்தகைய ஒன்றைச் சென்னையின் மையப் பகுதியில் தேர்ந்தெடுத்துப் பல தளங்களில் புத்தகக் கடைகள் அமைப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.

நூலக ஆணை: இரண்டாவது ஆண்டு சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி தமிழ்ப் படைப்பு உலகில் புதிய அத்தியாயத்தைப் படைக்க உள்ளது. உலக வாசகர்கள் என்கின்ற பெருங்கடலுக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடிய பிரம்மாண்டமான கப்பல் அது. அதன் முழுப் பரிணாமம் கடலில் பயணிக்க ஆரம்பிக்கும்போதுதான் தெரியும். அதுநகரத் தொடங்கிய பிறகு கரையில் இருப்பவர்களுக்குப் பயணிக்கத் தவறிவிட்டோம் என்கிற ஏமாற்றம் ஏற்படும். அதே நேரம், இந்த ஆண்டு பலதமிழ்ப் பதிப்பாளர்கள் ஆக்கபூர்வமாகக் கலந்துகொண்டதைக் காணும்போது உற்சாகம் பிறக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது நூலகங்களுக்கு அரசு புத்தகங்கள் வாங்கவில்லை என்கிற குறை பதிப்பாளர்களுக்கு உண்டு. இதில் அரசாங்கத்தைக் குறைசொல்வதைவிடப் பதிப்பாளர்களும் பபாசி அமைப்பும் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது. பல அரிய சிறந்த நூல்கள் வெளியில் காத்திருக்க, தகுதியில்லாத நூல்கள் நூலகத்துக்காக வாங்கப்பட்டிருப்பது வேதனை. வருங்காலத்தில் அத்தகைய தவறுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பொது நூலகத் துறை புதிய வழிமுறைகளை உருவாக்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. தனி மனிதரைவிட அமைப்பு உயர்ந்தது. எவ்வளவு உயர்ந்த அமைப்பாக இருந்தாலும் அதைவிட மேன்மையானது அது கொண்டுள்ள நோக்கம். இது பபாசிக்கும் பொருந்தும்.

SCROLL FOR NEXT