இந்தியாவின் முக்கிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் பார்த்தா சாட்டர்ஜி. காலனியம், அதிகாரம், தேசியம், ஜனநாயகம் உள்ளிட்ட துறைகள் சார்ந்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அவர், இந்திய தேசியத்தின் வரலாற்றை புதிய முறையில் இந்த நூலில் விவரிக்கிறார். ஆய்வுலகில் இயங்கிவந்தாலும், பொதுவாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூல், தமிழில் மொழிபெயர்க்கப்படும் அவருடைய முதல் நூலாகும்.
தேசியத்தின் உண்மைகளும் பொய்களும் சார்வாகர் கூறியபடி
பார்த்தா சாட்டர்ஜி
தமிழில்: ராஜன் குறை
ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.499
கட்டுரையாளர் அழகிரிசாமி! - சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைமைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவரது கட்டுரைகளின் முழுத் தொகுப்பு இது. பல நூறு பக்கங்களுக்கான கட்டுரைகளை எழுதியிருந்தாலும், அழகிரிசாமி சிறுகதையாசிரியராகவே பொதுத்தளத்தில் அறியப்படுகிறார்.
கட்டுரை வகைமையில் அழகிரிசாமியின் பங்களிப்பு, சிறுகதையில் அவரது சாதனைக்குச் சற்றும் குறைவானது அல்ல என்பதை அறிவிக்கும் விதமாக, அவரது கட்டுரைகளின் முழுத் தொகுப்பு முதல் முறையாக வெளியாகியிருக்கிறது. நவீனத் தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகள் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. கலை இலக்கிய ஆளுமைகள், பண்பாடு, இலக்கியம்-ஆய்வு, நாடகம்-நாட்டுப்புறவியல், மலயா உள்ளிட்ட தலைப்புகளில் அமைந்த அழகிரிசாமியின் ஆழமும் அகலமும் நிறைந்த 65 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் 32 கட்டுரைகள் இத்தொகுப்பின் மூலம் முதல் முதலாக நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. பழந்தமிழ் தொடர்பான கட்டுரைகள் இடம்பெறும் இரண்டாம் தொகுதியில், 122 கட்டுரைகள் உள்ளன. நவீனத் தமிழ், பழந்தமிழ் இரண்டிலும் அழகிரிசாமி ஆழம்பெற்று விளங்கியதை மெய்ப்பிக்கும் இக்கட்டுரைகள், கலை இலக்கியத்தில் இயங்க எத்தனிக்கும் எவருக்கும் இன்றியமையாதவையாக இன்றும் திகழ்கின்றன.
கு.அழகிரிசாமி கட்டுரைகள்
முழுத் தொகுப்பு
(தொகுதி 1 – நவீனத் தமிழ்; தொகுதி 2 – பழந்தமிழ்)
பதிப்பாசிரியர்: பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.1,950
சமகாலத்தை எதிர்கொள்ளல்... பின்காலனியக் கதையாடல் என்பது சுதேசியத் தேடலின் ஒரு செயல்திட்டம். 1947இல் நாம் பெற்றது புவியியல்ரீதியிலான விடுதலை மட்டுமே. இன்றைய கலாச்சாரக் காலனியம், பொருளியல் காலனியம், அறிவுக் காலனியம் முதலானவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இந்த நவகாலனியம் புதுப்புது வடிவங்களில் நம்மை மீண்டும் காலனியாக்கிவருகிறது. இதன் மீது எல்லா நிலைகளிலும் எதிர்வினையாற்றுதல் அவசியமாகிறது.
இந்தப் பின்னணியில், உலகளாவிய நிலையில் சிந்திக்கவும் உள்ளூர்தன்மையில் செயல்படவும் தீவிரமான விவாதங்களைப் பக்தவத்சல பாரதி இந்நூலில் முன்னெடுக்கிறார். நவகாலனியத்தின் புதிய அறைகூவல்களை எதிர்கொண்டு, நம் மரபை மீட்டெடுக்கும் திசை நோக்கிய அறிவுத் தடத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது இந்நூல்.
மானிடவியல் பேசுவோம்: ஒரு பின்காலனியக் கதையாடல்
பக்தவத்சல பாரதி
அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ.210
திராவிட வீராங்கனைகளின் அறிமுகம்: பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளை எழுத்திலும் பேச்சிலும் முழங்கிய, பெரியார் முன்னெடுத்த போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்ற வீராங்கனைகளைப் பற்றிய நூல் இது. திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி ‘முரசொலி’ நாளிதழில் திராவிட இயக்கப் பெண் போராளிகள் குறித்த கட்டுரைத் தொடரை எழுதிவருகிறார்.
அவற்றில் பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள், மனைவி நாகம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட 20 போராளிகள் குறித்த கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெண் போராளிகள் குறித்த அறியப்படாத தகவல்களுடன் சுவாரசியமான நடையில் எழுதியிருக்கிறார் அருள்மொழி.
திராவிடப் போராளிகள்
வழக்கறிஞர் அருள்மொழி
முத்தமிழறிஞர் பதிப்பகம்
விலை: ரூ.250
தமிழர் திருநாள் சிறப்பிதழ்: 2024 ஜனவரி மாத ‘காக்கைச் சிறகினிலே’, தமிழர் திருநாள் சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, அ.கா.பெருமாள், ந.முருகேசபாண்டியன், கு.கணேசன் உள்பட 39 பேர் இச்சிறப்பிதழுக்குப் பங்களித்திருக்கிறார்கள்; தமிழ், பண்பாடு, வரலாறு, மருத்துவம் உள்ளிட்ட பல பொருள்களில், ஆழமான கட்டுரைகளைத் தாங்கி, தவறவிடக் கூடாத ஒன்றாக இந்த இதழ் வெளியாகியிருக்கிறது.
இந்து தமிழ் திசை வெளியீடு: எவ்வளவு உணவு வகைகள் இருந்தாலும் பாரம்பரிய உணவு வகைகளே மக்களின் நிரந்தரத் தேர்வாக இருக்கின்றன. தங்கள் பகுதியின் அடையாளங்களாக நிலைத்துவிட்ட உணவின் மீது மக்களுக்கு ஈர்ப்பு எப்போதும் குறைந்ததில்லை என்பதை இந்நூலில் விளக்குகிறார் அ.முத்துக்கிருஷ்ணன்.
மாவட்டங்கள் தோறும் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களிடம் உணவு முறைகளைக் குறித்துக் கேட்டு இந்நூலில் தொகுத்திருக்கிறார். மதுரையில் தொடங்குகிற பயணம் நடுநாடு, கொங்குநாடு, நாஞ்சில்நாடு, வட தமிழகம் என மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு ஊரின் உணவு வரலாற்றோடு அந்த ஊரின் வரலாற்றையும் விவரித்திருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
கொலபசி | அ.முத்துக்கிருஷ்ணன் | விலை: ரூ.250 | அரங்கு எண்: 540, 541
முத்துகள் 5
மெய்ப்பொருள்
காண்பது அறிவு
ஓவியா
புதிய குரல் வெளியீடு
விலை: ரூ.80
பி.எஸ்.வினோத்ராஜின் கூழாங்கல்
திரைப்பட அனுபவங்கள்
அரவிந்த் சிவா
நாடற்றோர் பதிப்பகம்
விலை: ரூ.150
EVM: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
ஓர் உண்மைக் கதை
அலோக் ஷுக்லா, தமிழில்: குகன்
வீ கேன் புக்ஸ்
விலை: ரூ.350
கழுதை வண்டி
ஆயிஷா இரா.நடராசன்
ஃபுக்ஸ் ஃபார் சில்ரன் /
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.100
சட்டமன்றத்தில்
பி.கே.மூக்கையாத்தேவர்
(குரலற்றவர்களின் குரல்)
தொகுப்பாசிரியர்: கு.இராமகிருஷ்ணன்
கருத்து = பட்டறை வெளியீடு
விலை: ரூ.600