இந்தியக் கிறிஸ்துவத்தில் சாதி எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதை இந்நூல் ஆராய்கிறது. வட தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் சாதியின் பெயரால் கிறிஸ்துவத்துக்குள்ளேயும் எவ்வாறெல்லாம் ஒடுக்குமுறைகள் ஏவப்படுகின்றன என்பதை அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பங்கு குருமார்கள் போன்றவர்களின் மூலமாகவே இந்நூல் ஆவணப்படுத்தியிருக்கிறது.
அருள் தந்தை மாற்கு ஸ்டீபன், அருள் தந்தை யேசு மரியான் போன்றவர்களின் நேர்த்தியான நேர்காணல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. முன்பைவிடச் சில பகுதிகளில் சாதியின் கொடுங்கரங்கள் வலுப்பெற்றிருப்பதற்கான காரணங்களும் நூலில் அலசப்பட்டிருக்கின்றன. அதேபோல சில இடங்களில் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, நகரங்களுக்கு இடம்பெயர்தலால் சாதியின் பிடியிலிருந்து மக்கள் வெளிவந்திருப்பதை அறியும்போது நம்பிக்கை துளிர்க்கிறது.
கிறிஸ்தவத்தில் ஜாதி
நிவேதிதா லூயிஸ்
ஹெர் ஸ்டோரிஸ், விலை: ரூ.750
சிறப்பு: காந்தி பற்றி உலக அறிஞர்கள் - மகாத்மா காந்தியைப் பற்றி இந்திய - உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர்களின் கருத்துகளைச் சேகரித்து, காந்தியின் 70 ஆவது பிறந்தநாளின்போது, 1939 அக்டோபரில் ஒரு நூலை வெளியிட்டார் இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மரியா மாண்டிசோரி, ரவீந்திரநாத் தாகூர், டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட 63 பேரின் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலை வெ.சாமிநாத சர்மா தமிழாக்கம் செய்துள்ளார். 1941இல் இரங்கூன் புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம் இந்நூலை முதல் பதிப்பாக வெளியிட்டது.
மகாத்மா காந்தி
தொகுப்பு: சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
தமிழில்:
வெ.சாமிநாத சர்மா
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.500
இந்து தமிழ் திசை வெளியீடு: கதை சொல்லுதல், ஓவியம் தீட்டுதல், இசைத்தல், நடனமாடுதல், உயரிய தொழில்நுட்பங்களை அறிதல், நடிப்புத் திறமையை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை இளம் வயதினர் கற்பது அவர்களுடைய ஆளுமை மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்கின்றனர் நிபுணர்கள். பெற்றோரும் இதனை ஏற்கத் தொடங்கிவிட்டனர். இவ்வளவு கலைத் திறன்களின் கூட்டுக் கலவைதான் சினிமா.
இதனை உணர்ந்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யில் எழுதப்பட்ட தொடரே, ‘ஆசிரியருக்கு அன்புடன்’. ஆசிரியர்-மாணவர் உறவில் அவசியத் தேவையான ஆத்மார்த்தமான புரிதலை மையப்படுத்தி உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களை இதில் அறிமுகம் செய்திருக்கிறார் கலகல வகுப்பறை சிவா.
ஆசிரியருக்கு அன்புடன்
கலகல வகுப்பறை சிவா விலை: ரூ.160
அண்டை இலக்கியம்: விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள்: ஞானபீட விருது பெற்ற இந்தி எழுத்தாளர் அமர்காந்த், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை மையமாக வைத்து ‘Inhi Hathiyaaron Se’ நாவலை எழுதினார். தான் வசித்த உத்தரப் பிரதேசத்தில் உள்ள பலியா என்கிற கிராமத்தில் பொ.ஆ. (கி.பி.) 1942 தொடங்கி இந்திய விடுதலை வரைக்கும் நடைபெற்ற நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் அமர்காந்த் இந்நாவலில் பதிவுசெய்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலைத் தமிழில் ‘இந்த ஆயுதங்களால்தான்’ என்கிற தலைப்பில் கிருஷாங்கினி மொழிபெயர்த்துள்ளார். கிராமத்து மாந்தர்கள் நிரம்பியுள்ள இந்நாவலில் காந்தியம், ஒத்துழையாமை, சத்தியாகிரகம், அகிம்சை போன்றவையே விடுதலைப் போராட்டத்துக்கான ஆயுதங்களாக உணர்த்தப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்களால்தான்
அமர்காந்த்
தமிழில்: கிருஷாங்கினி
சாகித்ய அகாடமி
விலை: ரூ.1,330
முத்துகள் 5
இந்த ஆயுதங்களால்தான்
அமர்காந்த்
தமிழில்: கிருஷாங்கினி
சாகித்ய அகாடமி
விலை: ரூ.1,330
ரூமியின் ருபாயியாத்
தமிழில்: ரமீஸ் பிலாலி
சீர்மை வெளியீடு, விலை: ரூ.420
இலக்கியம்வழி வரலாற்றாக்கமும் அடையாளப்படுத்தமும்
இரா.அறவேந்தன்
மணற்கேணி, விலை: ரூ.180
கடல் நாகங்கள் பொன்னி (கவிதைகள்)
இன்பா
சால்ட், விலை: ரூ.275
குடியரசுத் தலைவர்
ஆளுநர் அதிகாரங்கள்:
இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்
சிகரம் ச.செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.270
இருபதாம்
நூற்றாண்டில் கேரளம்
முனைவர் அ.பிச்சை
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.240
பெரியாருக்கான ராஜபாட்டையை அமைத்தவர்! - வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கேரள-தமிழ்நாடு அரசுகள் கொண்டாடி வருகின்றன. இந்தப் போராட்டத்தில் முன்களத் தலைவர்களில் ஒருவராகப் பங்கெடுத்த பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்கிற அடையாளம் கிடைத்தது.
வைக்கம் போராட்டக் களத்துக்கு காங்கிரஸிலிருந்து பெரியாரைத் தேர்வு செய்து அனுப்பியவர் ராஜாஜி. சமூக நீதிக்கான புரட்சிப் பாதையில் பெரியார் ஒரு பெரும் புரட்சியாளராக உருப்பெற அவருக்கு ராஜாஜி அமைத்துக் கொடுத்த தொடக்கக் கால ராஜபாட்டை குறித்து இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை.
காங்கிரஸ் இயக்கத்தில் பெரியாரைச் சேர வைத்தது, கோவை மண்டலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பில் தொடங்கி, தமிழ் மாகாணத் தலைவர் பொறுப்பு வரை, காங்கிரஸில் பெரியாரின் வேகமான வளர்ச்சியின் பின்னணியில் ஆத்ம நண்பராக இருந்து பெரியாரை முன்னிறுத்தினார் ராஜாஜி.
இதைப் பெரியாரே விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ஒருகட்டத்தில், காங்கிரஸில் பெரியார் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தோற்கடித்தவரும் ராஜாஜிதான். பெரியாரை முழு வீச்சில் தூக்கிப் பிடித்த ராஜாஜியின் பங்களிப்பை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது, ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக வெளியீடான ‘ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்’ நூல்.