சி
தம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் சாலையில் சென்றால், வலப்புறமாக நந்தனார் மேல்நிலைப் பள்ளியை இப்போதும் பார்க்கலாம். எல்லா ஊர்களிலும் உள்ள பள்ளிகளைப் போல இதுவும் ஒன்றல்ல. இப்பள்ளி தொடங்கப்பட்டு, இந்த ஆண்டோடு நூறு ஆண்டுகள் (2017-2018) நிறைவடைகின்றன. இதன் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின்னால் நவீன தமிழகத்தின் சீர்திருத்த வரலாறு இருக்கிறது. இன்றைக்கும் கல்வியில் பின்தங்கியிருக்கிற இந்த வட்டாரத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன் தலித் ஒருவரால் தொடங்கப்பட்டு, தலித் அல்லாத குழந்தைகளுக்கும் கல்வி அளித்த மரபை இப்பள்ளி கொண்டிருக்கிறது.
சுவாமி சகஜானந்தர் (1890-1959) என்ற துறவி இப்பள்ளியைத் தொடங்கினார். கல்வி வாயிலாகவே ஒடுக்கப்பட்டோர் மேம்பாடு நடக்க முடியும் என்று கருதி, நந்தனார் என்ற தொன்மத்தின் பெயரால் இம்முயற்சியில் அவர் இறங்கினார். துறவியாகவும் புலவராகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் விளங்கிய சகஜானந்தர், உள்ளூர் சீர்திருத்த மரபில் வள்ளலார், வைகுண்டர் போன்று கருதப்பட வேண்டியவர் ஆவார். இதனாலேயே பாரதியாரும் அவரைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். வ.உ.சிதம்பரனாரின் ‘அகமே புறம்’, ‘மெய்யறம்’ நூல்களுக்கு சகஜானந்தர் சிறப்புப் பாயிரம் பாடினார்.
இளமையிலேயே துறவடைந்து, வட சென்னை வட்டாரத்தில் புழங்கிய ஆன்மிக மடங்களோடு தொடர்புகொண்ட சகஜானந்தர், தன் குருவோடு சிதம்பரத்துக்கு வந்தபோது, அவரின் யோசனைப்படி அங்கேயே தங்கி நந்தனார் பெயரில் ஒரு மடத்தை ஏற்படுத்தியதோடு, அவரின் இப்பயணம் தொடங்குகிறது. மடம், துறவு என்கிற ஆன்மிகப் பின்னணியிலிருந்து வந்த சகஜானந்தர், ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க மரபான வழியில் அல்லாது, நவீனமான கல்விமுறை யைக் கையெடுத்தார் என்பது ஒரு சுவாரஸ்யமே. மரபையும் நவீனத்தையும் முரண்பாடுகள் இல்லாத விதத்தில் இவருடைய செயல்பாடுகள் இணைத்துக்கொண்டன. நந்தனைப் பற்றி அரசன், அடிமை என்ற இருவேறு கதைகள் இருந்த நிலையில், பண்ணை அடிமையாயிருந்து, மிகு பக்தியால் மீண்ட சைவ நந்தனார் கதையே இங்கு செல்வாக்கு பெற்றதாக மாறியது. விதிக்கப்பட்ட தடைகளைத் தாண்டியும் இடைவிடாது பக்தி செலுத்தியதால், இறைகதி அடைந்த நந்தனாரைப் போல நந்தனாரின் வாரிசுகளான இன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான இழிவிலிருந்து மீள கல்வியை முயற்சிசெய்து பெற வேண்டும் என்று அவர் இதைப் புரிந்திருந்தார்.
நவீன வாய்ப்புகள் உருவாகிவந்த அக்காலத்தில் ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்கான முயற்சிகள் வெவ்வேறு நபர்கள் சார்ந்து, புரிதல் சார்ந்து வெளிப்பட்டிருக்கின்றன. இன்றைக்கிருந்து பார்க்கும்போது அவற்றில் நாம் கருத்துரீதியாக உடன்படவோ மாறுபடவோ செய்யலாம். ஆனால், பல புதிய சூழ்நிலைகளை முதன்முதலாகச் சந்திக்க நேர்ந்த முன்னோடிகள் தத்தம் புரிதலுக்கேற்பச் செயல்படுகிறவர்களாகவும் அதற்கான நல்விளைவுகள் என்பதைத் தாண்டி, வேறு எதையும் யோசிக்கத் தெரியாதவர்களாகவும் இருந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
சகஜானந்தர் ஆன்மிக எல்லையிலிருந்தும் தம் சாதியினர் மட்டுமல்லாது, பிற குழுவினரின் தொடர்பிலிருந்தும் உருவாகிவந்தவர். வாய்ப்பிருந்த இடங்களிலிருந்து உதவிகளைப் பெற்றார். ஒடுக்கப்பட்டோர் மேம்பாடடைய உதவுவது என்பதை ஆன்மிக நம்பிக்கையாக மாற்றுவதிலும், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொள்வதிலும் அவர் கவனம் கொண்டார். சமூக மேம்பாட்டு நடைமுறையில் அது ஒருவித அணுகுமுறை. அதற்கான அடையாளமாகவே நந்தனார் கதையாடலைக் கொண்டார். 1916-ல் நந்தனார் மடமும் நந்தனார் கல்விக் கழகமும் அவரால் உருவாக்கப்பட்டன. அக்கழகத்தின் சார்பாக 20.05.1917 அன்று நந்தனார் பள்ளியை ஆரம்பித்தார். வகுப்புகள் தொடங்கின. தொடங்கும்போது மண் கட்டிடமும் கூரையும் மட்டுமே இருந்தன. இதற்குப் பின்னால் சகஜானந்தர் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினார். கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று குழந்தைகளை அழைத்துவந்து பள்ளியில் சேர்த்தார். அடுத்ததாக உள்ளூர் பணக்காரர்களிடமும் இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பிழைக்கச் சென்றிருந்த ஒடுக்கப்பட்ட மக்களிடமும் நிதி சேகரித்தார். இதன் காரணமாக பாடசாலை கட்ட 1918-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
சகஜானந்தர் பணியின் முக்கியத்துவத்தை அவர் காலத்தின் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். மிஷனரி பள்ளிகள், பஞ்சமர் பள்ளிகள், தலித் முன்னோடிகள் தொடங்கியிருந்த சில பள்ளிகள் என்று மிகச் சிறிய அளவிலேயே ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி வாய்ப்புகள் இருந்தன. 1916-ல் தொடங்கப்பட்ட தொழிலாளர் நலத் துறை, இம்மக்களுக்கான கல்வி தொடர்பாக யோசிக்கத் தொடங்கியிருந்த தருணம். அதுவும் சென்னை போன்ற நகரங்களை ஒட்டியதாகவே இருந்தது. இந்நிலையில்தான், சகஜானந்தரின் பணி கிராமங்களைச் சார்ந்து எளிய மக்களிடம் தொடங்கியது.
தொடர் முயற்சி காரணமாக 1927-ல் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இதற்கிடையே அவர் ஆதிதிராவிடர் மகாகனகசபை சார்பாக சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1926 முதல் 1932 வரை நீடித்தார். சட்ட மன்ற உரைகள், மாநாட்டு உரைகள், அவர் நடத்திய ‘ஜோதி’ இதழில் எழுதிய எழுத்துகள் போன்றவற்றின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக மட்டுமல்லாது, பிற சிவில் உரிமைகளுக்காகவும் அவர் விழிப்புணர்வோடு நடத்திவந்த தலையீடுகளை விரிவாகப் பார்க்க முடிகிறது. சகஜானந்தரின் மதிப்பு கட்சி தாண்டியும் உயர்ந்தது. விளைவுகளில் ஒன்றாக 1927-ல் காந்தி நந்தனார் மடத்துக்கே வந்தார். “எத்துணை கதரியக்கத்தாலும் தீண்டாமை ஒழியாது” என்றும் “சுயராஜ்ய நிதிக்குப் பயணப்படுவதுபோல் தீண்டாமை ஒழிப்புக்காகவே நிதி திரட்டும் பயணமும் தேவை” என்றும் அவருக்கான வரவேற்புரையில் சகஜானந்தர் கேட்டுக்கொண்டார். எதிர்பார்ப்பை நிறைவு செய்வதுபோலவே காந்தியால் பின்னர் ‘அரிஜன சேவா சங்கம்’ தொடங்கப்பட்டதோடு; சுற்றுப் பயணமும் நடந்தது.
இப்பயணத்தில் விரும்பிக் கேட்டு மடத்துக்கு இரண்டாவது முறையாக (1934) காந்தி வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பல தலித்துகள் காங்கிரஸில் இருந்திருந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினையில் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தனர். கட்சிக்குள் அத்தகு வெளியை காந்தி ஏற்படுத்தியிருந்தார். காந்தியின் ஆன்மிகம் சமூக நிர்மாணத்தோடு தொடர்புடையதாக இருந்ததால், கட்சியிலிருந்த தலித்துகள் சமூக நிர்மாணத்தின் சேவையைக் கையெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அம்பேத்கரையும் பேசுவார்கள். காந்திய இயக்கப் பணியிலும் இருப்பார்கள். அதனால்தான் சகஜானந்தர் காங்கிரஸில் இருந்துகொண்டே காங்கிரஸை விமர்சிக்கவும் தேவை சார்ந்து அம்பேத்கரை ஆதரித்துப் பேசவும்செய்தார்.
இப்போது நந்தனார் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்து, தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறையால் நடத்தப்படுகிறது. கட்டிடங்கள் கூடியிருக்கின்றன. இதன் காலத்தையும் வளர்ந்திருக்க வேண்டிய விதத்தையும் ஒப்பிடுகிறபோது, வளர்ச்சி போதுமானதாய் இல்லை. வெவ்வேறு வாய்ப்புகளோடு பெரும் கல்வி நிறுவனமாக வளர்ந்திருக்குமானால், ஒடுக்கப்பட்டோருக்கான முன்னோடி நிறுவனமாக இது மாறியிருக்கும். ஆனால், பல்வேறு பள்ளிகளில் ஒன்றாகத் தேங்கி நின்றுவிட்டது. எதையெல்லாம் சகஜானந்தர் செய்தார் என்று சொல்வதில் மட்டுமல்ல; நாம் எதையெல்லாம் செய்யத் தவறினோம் என்று உரசிப் பார்ப்பதிலும்தான் இருக்கிறது வரலாறு!
- ஸ்டாலின் ராஜாங்கம்,
‘எழுதாக்கிளவி: வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: stalinrajangam@gmail.com
ஜனவரி 27 சகஜானந்தர் பிறந்த தினம்