சிறப்புக் கட்டுரைகள்

தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை போடலாமா?

து.அரிபரந்தாமன்

மிழகம் முழுவதும் அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,50,000 தொழிலாளர்களும் 04.01.2018 அன்று திடீர் வேலைநிறுத்தம் செய்யக் காரணம் என்ன? இத்தொழிலாளர்களின் ஊதியம் தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 12(3)-ன் கீழ் சமரச அதிகாரி முன்னிலையில் கையெழுத்தாகும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானம் ஆகிறது. இந்த ஒப்பந்தம் அனைத்துத் தொழிலாளர்களையும் கட்டுப்படுத்தும். இறுதியாகப் போட்ட ஒப்பந்தம் 31.08.2016 அன்று முடிவுக்குவந்தது. அதற்குப் பின், அனைத்து தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு சம்பந்தமாக கோரிக்கைகளை வைத்தன.

கோடிக்கணக்கில் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) போன்றவற்றுக்காகச் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்தப்படவில்லை. இத்தொகை, சுமார் ரூ. 6,000 கோடிக்கும் மேல். இதனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் அளிக்கப்படவில்லை. இவ்விதம் அளிக்கப்படாத தொகை பல ஆயிரம் கோடி ரூபாய். இது உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கை. உயர் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான வழக்கில் ஓய்வூதியப் பலன்களைத் தவணை முறையில் கொடுக்கச் சொன்னாலும், அந்த உத்தரவுப் படிகூடக் கொடுக்கப்படுவதில்லை.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் கனரக வாகனமான பேருந்தை ஓட்டுபவர்கள். அரசின் கீழ் பணிபுரியும் இலகுரக வாகனமான மகிழுந்தை (கார்) ஓட்டும் ஓட்டுநர்களுக்கான ஊதியத்தைவிட இவர்களது ஊதியத்தில் பெரிய வேறுபாடு கிடையாது. ஆனால், பணியின் தன்மையும் தினசரி நெருக்கடியும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்குக் கூடுதலானது.

கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் அரசும் போக்குவரத்துக் கழகங்களும் தொழிற்சங்கங்களுடன் பேசி புதிய ஊதிய ஒப்பந்தம் காண பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை. எனவே, 15.05.2017-ல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். உடனே, மதுரை உயர் நீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கில் தொழிற்சங்கங்களைக் கேட்காமலே தடை உத்தரவு வழங்கியது. இதற்கிடையில், 16.05.2017 அன்று அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் அரசு மூன்று மாதத்துக்குள் தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட தொகையை உரிய நிறுவனங்களிடம் செலுத்தப்படும் என்று ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 2017-க்குள் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் சேரவேண்டிய தொகை அனைத்தையும் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டது. உடனடியாக இதன்பொருட்டு ரூ. 500 கோடி கொடுக்கவும் ஒப்புக்கொண்டது. பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தம் காணவும் ஒப்புக்கொண்டது. இதன் விளைவாக வேலை நிறுத்தம் முடிவுக்குவந்தது.

ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தப்படி அரசு செயல்படவில்லை என்பதால், 09.09.2017 அன்று இரண்டு வாரங்கள் கழித்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாகத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு கொடுத்தன. சமரச அதிகாரி 19.09.2017-ல் இரு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஒட்டி போக்குவரத்து மந்திரியும் 27.09.2017 அன்று பேச்சுவார்த்தை நடத்தி, புதிய ஒப்பந்தம் வரும்வரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ. 1,200 கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார். எனவே, வேலை நிறுத்தம் ஏதும் நடைபெறவில்லை.

இதற்குப் பின்னர், பல சுற்றுப் பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுக்கும் அரசு அமைத்த உபகுழுவுக்கும் இடையில் நடைபெற்றது. அதில் தொழிற்சங்கங்கள், அரசு ஓட்டுநருக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தியது. இறுதியில், அதற்கு மாற்றாக மூன்றால் பெருக்கி வரும் (Multiplier) தொகையை அளிக்குமாறு கேட்டது. நிர்வாகம் 2.44 ஆல் பெருக்கி வரும் தொகை அளிக்க ஒப்புக்கொண்டது. தொழிற்சங்கங்கள் மூன்றுக்குப் பதிலாக 2.87-க்கு இறங்கி வந்து இறுதியில் 2.57 ஆல் பெருக்கிவரும் தொகையை அளித்தால் ஒப்புக்கொள்வதாக கூறின. சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட மற்றும் ஓய்வூதியப் பலன்கள் பொருட்டு தரப்பட வேண்டிய தொகைகளை அளிக்க வேண்டும் என்றன.

இந்நிலையில், 03.01.2018 அன்று பல்லவன் இல்லத்துக்குத் தொழிலாளர் இலாக்காவின் சமரச அதிகாரி, அரசால் அழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் 2.44 பெருக்கல் தொகை சம்பந்தமான ஒப்பந்தம் அதிமுக தொழிற்சங்கத்துடன் கையெழுத்தானது. மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டன. இதுவே, 04.01.2018 முதல் திடீரென வேலை நிறுத்தம் நடைபெறக் காரணம். சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமாக அனைத்துத் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் கட்டுப்படுத்தும் விதத்தில், அரசின் சமரச அதிகாரியின் முன் மேற்சொன்னபடி அரசு ஒரு மோசடியான ஒப்பந்தம் போட்டதே வேலை நிறுத்தத்துக்குக் காரணம். இதற்கு அரசே முழுப் பொறுப்பு. இந்த ஒப்பந்தத்தை நீதிமன்றம் ரத்துசெய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இடைக்காலமாகத் தடை விதிக்க வேண்டும்.

இப்போதெல்லாம், சமீப காலமாக எந்தத் தொழிலாளர்கள்/ ஊழியர்கள் போராடினாலும் உடனே எவரோ ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றைப் போடுவதும், வேலைநிறுத்தத்துக்குத் தடை கோருவதும், உயர் நீதிமன்றம் உடனடியாக தொழிற்சங்கங்களைக் கேட்காமலே வேலைநிறுத்தத்துக்குத் தடை உத்தரவு அளிப்பதும் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுவதும் நிகழ்கிறது.

பணி நிலைமை தொடர்பாகப் பொது நல வழக்கு போட முடியாது என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. புதிய தமிழகத்தின் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவுப் பணி இடங்களை நிரப்பாமல், உதவிப் பேராசிரியர்களுக்கான இடங்களை நிரப்பக் கூடாது என்று பொதுநல வழக்கு போட்டார். அதை விசாரித்த நீதிபதி முகோபாத்தியாயா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, பொதுநல வழக்கைத் தள்ளுபடிசெய்தது. பணி நிலைமை தொடர்பாகப் பொதுநல வழக்கு போட முடியாது என்று தீர்ப்பளித்தது. எனவே, வேலைநிறுத்தம் போன்ற நேரங்களில் அதை எதிர்கொள்ள பொதுநல வழக்கு என்ற உத்தியைக் கையாள்வதும், உயர் நீதிமன்றம் தொழிற்சங்கங்களைக் கேட்காமல், அதிரடியாகத் தடை உத்தரவு அளிப்பதும் சரியாகாது.

தொழிலாளர்கள் நலிந்த பிரிவினர் என்றும், வேலைநிறுத்தத்தின் மூலம் நிர்வாகத்தை நிர்ப்பந்திக்க அவர்கள் வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்றும் குஜராத் ஸ்டீல் டியூப் வழக்கில் 1980-ல் மறைந்த நீதிபதி கிருஷ்ண ஐயர் வழங்கிய தீர்ப்பு, தொழிலாளர்களின் கூட்டுபேர உரிமையை அங்கீகரிக்கும் தீர்ப்பு. வேலைநிறுத்தம் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதை மட்டுமே அத்தீர்ப்பில் நிபந்தனையாகக் கூறுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் பாகம் நான்கின் வழிகாட்டு நெறிகளையும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19-தையும் நீதிபதி கிருஷ்ண ஐயர் தனது தீர்ப்புக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் அவர், இதுவே சமூக நீதியை வலுப்படுத்தும் என்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது, சிம்சன் நிறுவனத்திலிருந்து பொருட்களை எடுத்துச் செல்வதைத் தொழிலாளர்கள் தடுக்கிறார்கள் என்றும் அதற்குத் தடை வழங்கி பொருட்களை எடுத்து போக அனுமதித்து உத்தரவிடுமாறு, ‘ராம விலாஸ் சர்வீஸ் எதிர் சிம்சன் கம்பெனி தொழிலாளர் சங்கம்’ என்ற வழக்கில் (1979-ல்) நிர்வாகத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிபதி நயினார் சுந்தரம் நிர்வாக வழக்கைத் தள்ளுபடி செய்தார். தொழிலாளர்கள் கூட்டுபேர சக்தியை முறியடிப்பதற்காக நீதிமன்றத்தின் துணையை நிர்வாகம் நாட முடியாது என்று தீர்ப்பளித்தார்.

2007-ல் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டது. அதில் தொழிலாளர்கள் சட்ட விரோத வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அதைத் தடைசெய்யுமாறும் கோரியது. அந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்னர் விசாரணைக்கு வந்தது. ‘நிர்வாகம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மீது சட்டப்படி என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாமே ஒழிய, வேலைநிறுத்தத்தையும் கூட்டுபேர உரிமையையும் முறியடிப்பதற்கு நீதிமன்றத்தின் துணையை நாட முடியாது’ என்றார். மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காண்பித்து வழக்கைத் தள்ளுபடிசெய்தார்.

தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தடைசெய்யக் கோரி, நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கு நான் நீதிபதியாக இருந்தபோது என் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காண்பித்து, வேலைநிறுத்தத்துக்குத் தடை கொடுக்க மறுத்தேன். நிர்வாகம் மேல்முறையீடு செய்து, இரு நீதிபதிகள் அமர்வில் அடுத்த நாளே தடை உத்தரவு பெற்றது. ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். வழக்கு போட்ட நிர்வாகம் ஒருகட்டத்தில் தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் போட்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இம்மாதிரி தடை உத்தரவுகளை நடைமுறையில் அமல்படுத்தவும் முடியாது. ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் தொழிலாளர்களை நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்று சிறையில் தள்ளிவிட முடியாது.

தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்படும் பிரச்சினைகளில் நிர்வாகம் எந்த சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளலாம். அப்போது அந்த நடவடிக்கை சரியானதா என்பதைப் பரிசீலிக்கும் இடம் நீதிமன்றம் மட்டுமே. எனவே, நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தை நாடினால், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ததற்காக வேலை நீக்கம் செய்தார். வழக்கு நீதிமன்றம் சென்றது. பின்னர், அனைவரையும் வேலைநிறுத்தம் மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்ட நாட்களுக்குச் சம்பளம் அளித்து வேலையும் அளித்தார். இது வரலாறு.

ஆனால், 05.01.2018 அன்று உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் ஆன இரு நீதிபதிகள் அமர்வு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்குத் தொழிற்சங்கங்களைக் கேட்காமலே தடை விதித்தது. 07.01.2018 அன்று தொழிற்சங்கங்கள் அந்த அமர்வின் முன் மேற்சொன்ன சில வாதங்களை எடுத்துச் சொன்னபோது, அந்த அமர்வு தொழிலாளர்களிடம் பிடித்த பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால், பேருந்து இயக்கத்தைத் தனியாரிடம் கொடுத்துவிடலாமே என்று கருத்து தெரிவித்ததாகவும் தொடர்ந்து ஊடகங்களில் வெளியானது.

போக்குவரத்தை தேசியமயம் ஆக்கியதில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. அதனால், மக்கள் பெருமளவு பயனடைகின்றனர். லாபத்தைப் பார்க்காமல் கிராமப்புறங்களுக்குக்கூட அரசு பேருந்தை இயக்குகிறது. மாணவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, முதியோருக்கு சிறப்புச் சலுகை அளிக்கிறது. 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போதும், 2016-ல் வார்தா புயல் தாக்கியபோதும் அரசுப் பேருந்துகளே இயங்கி உதவிசெய்தன. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் நெறிகளிலும் பொதுத் துறையைக் காப்பதும் பலப்படுத்துவதும் அரசின் கடமை என்று கூறுகிறது. எனவே, நீதிமன்றம் தனியாரிடம் அரசுப் பேருந்து இயக்கத்தை ஒப்படைக்கச் சொல்வது அரசமைப்புச் சட்ட கோட்பாட்டுக்கு விரோதமானது. மக்களின் நலன்கருதி மக்களுக்காக இயக்கப்படும் அரசின் பேருந்து சேவையில் இழப்புக்கு ஈடுசெய்வது அரசின் கடமை.

எனவே உயர் நீதிமன்றம், பொதுநல வழக்கு என்ற போர்வையில் போடப்படும் வழக்குகளில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களைத் தடைசெய்யக் கூடாது. ஏனெனில், அதுவே பல தீர்ப்புகளில் கூறப்பட்ட கருத்து.

- து.அரிபரந்தாமன்,

நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம். சென்னை.

SCROLL FOR NEXT