சிறப்புக் கட்டுரைகள்

சவால்களை ஏற்கிறதா தமிழ் நாவல் உலகம்?

சு.வேணுகோபால்

மிழில் நாவல் இலக்கியம் தோன்றி 150 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். உலக நாவல் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகள் நடந்தேறியிருக்கின்றன. என்றாலும், தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமஸோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ ஆகியவைதான் நாவல் உலகில் இன்றளவும் உச்சமாக நிற்கின்றன. நவீன நாவல் காவியங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர்கள் முன் நாம் சிறு கல்போலக் கிடக்கிறோம்.

தமிழில் முன்னவர்களின் சாதனைகளை மெனக்கெடா மல் தனது கலை மனத்தால் ‘மோகமுள்’ நாவல் வழி முறியடித்தவர் தி.ஜானகிராமன். எதிர்பாராத துருவத்திலிருந்து ப.சிங்காரம் தனது ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் மூலம் பெருஞ்சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சாதனை யின் மரபை சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய இளைஞர்கள் நாவல்களைத் தந்துள்ளனர். ஆனால், இவர்களில் யாரும் அவர்களின் கண்முன் நிகழ்ந்திருக்கின்ற எளிய சாதனைகளைக் கூடத் தாண்ட முடியவில்லை. அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள்தான் இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ சாதிய மேலாண்மையால் ஒடுக்கப்பட்ட இளைஞனின் உலகை ‘பரபரப்பு’ உத்தியை நிராகரித்துவிட்டு நிதானமாக முன்வைக்கிறது. அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’, நக்கீரனின் ‘காடோடி’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ் - கதைப் புத்தகம்’, மீரான் மைதீனின் ‘அஜ்னபி’ கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’, பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ ஆகிய நாவல்கள் பொருட்படுத்தத்தக்கவை. அதிகம் பேசப்படாத உலகை இவர்கள் ஓரளவு சிறப்பாகவே தங்களது ஆக்கங்களில் கொடுத்தனர். நாவல் மரபில் மூத்தோர் உண்டாக்கிய காலடித்தடங்களை இவர்கள் நுகர்ந்துவந்ததாலே இந்த எளிய விளைச்சல்கள் கிட்டின. தமிழ் நாவலில் நிகழ்த்தியுள்ள எழுத்தாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும், கனவும் பற்றிய காரியங்களை அறியாமல் எழுதிவந்த இளம் எழுத்தாளர்களின் படைப்பு கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

அதேசமயம், புதியவர்கள் என்று பார்க்கும்போது அரவிந்த் கருணாகரனின் ‘சீர்மை’யைச் சொல்லலாம். குறுநாவல் என்றாலும் முக்கியமானது. கென்வில்லர், தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டவர். அவரது மனைவி புற்றுநோயால் துன்பப்படுகிறவர். கென்வில்லர் பல்வேறு தத்துவங்களின் பொதுத்தன்மையை ஒரு சாரமாக மாற்றிவிட முடியுமா என்ற தேடலில் இருப்பவர். காகிதத்தில் கொண்டு வர முடியாத ஒருமையை அவரது மனைவி தனது ஓவியத்தில் வரைந்துவிடுகிறார். இந்த இரு நிஜ மனிதர்களின் மன வோட்டங்களைத் தன் கற்பனையின் துணைகொண்டு உண்மையை நாடிச் செல்கிறது.

குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ எதிராளியின் ராணுவ முகாமை அழிக்க ஒற்றறியச் சென்று திரும்பும் இரு இளைஞர்களைப் பற்றிய கதை. பல்வேறு தடங்கல்கள், சவால்களைத் துச்சமெனக் கடக்கிற நிகழ்விலே அவர்களது காதல் நினைவுகள், தளபதிகள் பற்றிய செயல்பாடு கள் எல்லாம் உருண்டு வர திரும்புகின்றனர். அந்த கேம்ப் தகர்க்கப்படுகிறது. ஒற்றறியும் செயலில் அவர்களின் மன உலகம் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.

இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கிய பின் ஈழத் தமிழர் எதிர்கொண்ட இன்னல்களைச் சொல்கிறது தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’. இன்றைய சமூக நடைமுறைகளில் எதிலும் ஒட்ட முடியாது திரியும் மனிதனின் அந்நியத்தன்மையைச் சொல்லும் குணா கந்தசாமியின் ‘உலகில் ஒருவன்’ வடசென்னையின் தனித்த வாழ்வைச் சொல்லும் கரன் கார்க்கியின் ‘கறுப்பர் நகரம்’, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டும் திட்டத்தில் நரிகளை வேட்டையாடி அழித்த ஆங்கிலேய வேடிக்கை மனிதர்களைச் சொல்லும் விநாயக முருகனின் ‘வலம்’ போன்றவற்றை நல்ல முயற்சிகளாகச் சொல்லலாம். இவற்றிலிருந்து தனித்துச் சொல்லப்பட வேண்டிய ஒரே நாவல், சயந்தனின் ‘ஆதிரை’. நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட படைப்பு. முப்பதாண்டுகால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ‘ஆதிரை’. இப்படி, இலக்கிய உணர்வுதான் நல்ல படைப்பை நம்மிடமிருந்து உருவாக்குமேயொழிய வெற்று ஆசைகளால் இது இயல்வதில்லை!

- சு. வேணுகோபால், எழுத்தாளர், ‘வெண்ணிலை’, ‘ஆட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: su.venugopal1967@gmail.com

SCROLL FOR NEXT