சிறப்புக் கட்டுரைகள்

புதிய பாடம்.. புதிய பாதை? - காது கொடுக்கிறது கல்வித் துறை!

இரா.எட்வின்

ள்ளிக் குழந்தைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வரையறுப்பதும், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கேற்ப பாடநூல்களைத் தயாரிப்பதும் வழக்கமானதுதான். அந்த வகையில், தற்போது நடைபெற்றுவரும் பாடநூல் தயாரிப்புப் பணியும் புதுமையானதெல்லாம் இல்லை. ஆனால், அதன் பின்னால் இருக்கக்கூடிய வருங்கால சமுதாயம் குறித்த கனவு கலந்த திட்டமிடலும் நேர்மையும் நேர்த்தியுமான செயல்பாடுகளும் நிச்சயம் புதிது.

வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை ஒரு பெருந்திரள் கருத்துக்கேட்புக் கூட்டம் இதற்காக நடத்தப்பட்டது. இது குறித்த ஏராளமான விவாதங்களும் நிகழ்ந்தன. நடந்த விவாதங்களின் தரம் மற்றும் சார்புநிலைகள்மீது விமர்சனங்களும் உண்டு. ஆனால், நடந்த விவாதங்களையும் கூறப்பட்ட ஆலோசனைகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகமும் பள்ளிக் கல்வித் துறையும் கூர்மையாகக் குறிப்பெடுத்துக்கொண்ட விதம் மிகவும் புதியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.

அனைத்து வகையான ஊடகங்களும் இதைக் கொண்டாடின. ஆனால், இந்தக் கூட்டமல்ல இதற்கான தொடக்கம். இதற்கும் முன்னரே கோடையில் அனைத்துத் துறை வல்லுநர்களையும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஆகியோர் சந்தித்தனர். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு அமர்வுகள் நடந்தன.

எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பல்துறை வல்லுநர்கள் என்று ஒவ்வொரு அமர்வுக்கும் ஆறு பேர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். அனைத்துக் கூட்டங்களுக்கும் மேற்சொன்ன அதிகாரி கள் அனைவரும் வந்திருந்து ஆலோசனைகளைக் கவனத்தோடு கேட்டறிந்தனர்.

நான் கலந்துகொண்ட அமர்வில் பிரபஞ்சன், பேராசிரியர் பிரபா கல்விமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எழுத்தாளர் இமயம் ஆகியோர் கலந்துகொண்டனர். புத்தகம் தயாரிப்பதற் கான பணியில் வழக்கத்தைவிடவும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்படியாகத் துவங்கியிருக்கும் பாடப் புத்தகத் தயாரிப்புப் பணியைப் பாராட்டும் அதேநேரத்தில், சில கோரிக்கைகளும் இருக்கின்றன.

நமது குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்கள் நம் மண்சார்ந்த கூறுகளோடு - நேட்டிவிட்டி- இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக திசைவேகம் பற்றி பாடம் வருகிற போது வழக்கமாக கடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் போல்ட் நூறு மீட்டர் தூரத்தை இத்தனை நிமிடத்தில் கடந்தார் என்று அவரது படத்தோடு பாடத்தை எழுதுவதற்குப் பதில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தடகளப் போட்டி யில் மாணவி ரம்யா நூறு மீட்டர் தூரத்தை இத்தனை நிமிடத்தில் கடந்தார் என்று அவரது படத்தோடு வைத்தால் பொருத்த மாக இருக்கும்.

அடுத்ததாக, நமது தொன்மைச் சிறப்புகளை மாணவச் சமூகத்துக்குக் கொண்டுசேர்க்கும் கருவிகளாக நமது பாடப் புத்தகங்கள் அமைய வேண்டும். வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் தொன்மைச் சிறப்புகளை மாணவர்களுக் குக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய தேவையும் இருக்கிறது. உதாரணத்துக்கு, அமெரிக்காவின் ‘ஃபோர்த் சேனல்’ உதவி யோடு கிரஹாம் ஆன்ஹூக் நாகப்பட்டினம், பூம்புகார், காரைக்கால் ஆகியப் பகுதிகளுக்கிடையில் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு கள் தமிழர் நாகரிகத்தின் வயதை மேலும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச்செல்கின்றன.

‘கல்’ என்றால் தோண்டு என்று பொருள். தோண்டுதல் என்பது தேவையில்லாதவற்றைத் தோண்டித் தூர எறிவது. அதேபோல மனிதனிடம் இருக்கக்கூடிய தேவையில்லாத அழுக்குகளைத் தோண்டி எறிந்து அவனைப் பண்பட்ட மனிதனாக மாற்றுவதால்தான் அது கல்வி. அதைச் செய்து முடிக்கிற கருவிகளாக பாடப் புத்தகங்கள் அமைய வேண்டும்.

- இரா.எட்வின்,

மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ‘எது கல்வி?’ உள்ளிட்ட

நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: eraaedwin@gmail.com

SCROLL FOR NEXT