ஆ
ங்கில மொழியைக் கற்பிப்பது குறித்து மு.அனந்த கிருஷ்ணன் குழு முன்வைத்துள்ள வரைவு தமிழ்நாட்டு ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கிலத் திறன் மோசமாக இருப்பதாகக் கவலைப்படுகிறது. இதற்கு ஆங்கில இலக்கண விதிகளைக் கற்றுக்கொடுப்பதுதான் காரணம் என்கிறது.
‘‘ஒரு மொழியின் இலக்கண விதிகள் தெரிவதாலேயே அம்மொழியை நன்கு பயன்படுத்தும் திறன் கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மொழியைக் கேட்டும் வாசித்தும் தெரிந்துகொள்வதற்கு அல்லது அதனை நாமே எழுதியும் பேசியும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும்போது நாம் அம்மொழியை உணர்கிறோம். இவ்வழியில் பேசும் மொழியின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அம்மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்கிறோம், அம்மொழியை அகவயப்படுத்துகிறோம்’’ என்று வரைவு கூறுகிறது.
அந்த வரைவு குறிப்பிடும் ‘அகவயப்படுத்துதல்’ என்ற சொல்லை, ஒருவர் இன்னொரு சமூகம் பேசும் மொழியைத் தனதாக்கிக்கொள்ளுதல் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வகையில், ஆங்கிலத்தைத் தமிழ் மாணவர் தனதாக்கிக்கொள்வதற்கு இலக்கண விதிகளைக் கற்க வேண்டியதில்லை என்கின்றனர் வரைவுக் குழுவினர். மாறாக, அந்த மொழியைக் கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், எழுதவும் பேசவும் வேண்டும் என்கின்றனர்.
மொழியைக் கேட்பது என்றால் என்ன? மாணவரைச் சுற்றிலும் அம்மொழி பேசுவோர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1% குழந்தைகளுக்கு வேண்டுமானால் வீட்டிலும் பள்ளியிலும் ஓரளவு நல்ல ஆங்கிலம் கேட்டு வளரும் சூழல் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், 99% குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் தமிழ் ஒன்றை மட்டுமே கேட்கின்றனர். இந்த வரைவு கூறுவதன்படி, மாணவர்களுக்கான ஆங்கிலச் சூழல் பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் இல்லை. ஆனால், அது அச்சூழலைப் பள்ளியில் மட்டுமேனும் ஏற்படுத்த ஆசைப்படுகிறது. மொழிக் கல்விப் பயிற்றுவிப்பதில் தலைகீழ் முயற்சிபோல இது தோன்றுகிறது.
தாய்மொழியைப் பயில்வதில் குழந்தைகளின் முதல் கல்விக்கூடமே அவர்கள் வாழும் சமுதாயம்தான். அவ்வகையில்தான் நம் தமிழ்க் குழந்தைகளும் முதலில் பெற்றோரிடம், சமுதாயத்திடம் ‘பேச்சுத் தமிழ்’ கற்றுக்கொண்டு, பிறகு இலக்கணப்படி ‘எழுதும் தமிழ்’ கற்கத் தொடங்குகிறார்கள். இதுவே இயற்கை வழி மொழிக் கற்றல். இது தாய் மொழி பயில்வதில் மட்டுமே சாத்தியம்.
அயல்மொழி பயில்வதைப் பொறுத்தவரை, நிலைமை தலைகீழானது. முதலில் பள்ளிக்கூடத்தில் முதல் ஐந்து வகுப்புகளுக்கேனும் எழுத்திலும் பேச்சி லும் இலக்கணத்திலும் தாய்மொழியில் தேர்ச்சி பெறும் குழந்தைகள், அந்த மொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் அயல் மொழியை எழுதக் கற்கிறார்கள். பிறகு, தொடர்ச்சியாகப் பேசக் கற்கிறார்கள். இப்படித்தான் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முதல் ஐந்து வகுப்பு வரை தாய்மொழியில் தேர்ச்சி பெற்றுவிட்டு, ஆறிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அயல்மொழியைக் கற்கத் தொடங்குகின்றனர்.
இது தமிழ்நாட்டுக் கல்வித் துறைக்கு ஒன்றும் புதிதன்று. 1960-களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்பு 5 வரை தமிழில் தேர்ச்சிபெற்று, பின்னர், தமிழ் இலக்கணத்தின் துணையுடன் ஆங்கிலத்தை முதலில் எழுதவும், பிறகு பேசவும் கற்றனர். ஆகவே, தாய்மொழி தமிழ் எனும்போது முதலில் பேச வரும், பிறகுதான் எழுத வரும். அயல்மொழி ஆங்கிலம் எனும்போது முதலில் எழுத வரும், பிறகுதான் பேச வரும். இந்த வழியில் ஆங்கிலம் பயின்றவர்கள்தான் அப்துல்கலாம் உள்ளிட்ட நம் தமிழர்கள். சர்ச்சில் எழுத்திலேயே இலக்கணப் பிழை கண்ட ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியும் இப்படி ஆங்கிலம் கற்றவர்தான்.
அசர் 2016 அறிக்கையின்படி, அரசு, தனியார் பள்ளிகளின் 8-ம் வகுப்பு மாணவர்களில் 12% பேரே ஆங்கிலச் சிற்றெழுத்துக்களை அடையாளம் கண்டு படிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்களின் ஆங்கிலத் திறன் போதாமையே காரணம் என வரைவு கூறுகிறது. ஆகவே, இந்த நிலையையெல்லாம் வரைவு பாடத்திட்டக் குழுவினர் கருத்தில்கொள்ள வேண்டும்!
நலங்கிள்ளி, ‘நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்’ என்னும் ஆங்கில மொழிப் பயிற்சி நூல் எழுதியவர்.
தொடர்புக்கு: enalankilli@gmail.com