சிறப்புக் கட்டுரைகள்

மீண்டும் இணைந்த கைகள்!

வெ.சந்திரமோகன்

அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்ற கூற்று மீண்டும் ஒருமுறை நிஜமாகியிருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளால் துவண்டுபோயிருந்த லாலு பிரசாத்தும் நிதீஷ் குமாரும், தங்கள் பகையை மறந்து ஒன்றாக இணைந் திருக்கின்றனர். ஆகஸ்ட் 21-ல் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவை இடைத் தேர்தலில், காங்கிரஸுடன் இணைந்து ராஷ்ட்ரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் களம் காண்கின்றன. இரு தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி, தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக வெளியாகியிருக்கும் செய்தி, அரசியல் மட்டத்தில் பல புருவங்களை உயர்த்தியுள்ளது.

24 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளாக இருந்த லாலுவும் நிதீஷும் ஒருகாலத்தில் ஜனதா கட்சியில் ஒன்றாக இருந்தவர்கள். இந்திரா காங்கிரஸுக்கு எதிராக, 1970-களில் நிகழ்ந்த கொந்தளிப்பான எதிர்ப்பு அரசியல் போராட்டத்தில் இருவரும் முனைப்புடன் பங்கெடுத்தனர். இருவரும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சீடர்கள். இருவரும் பிஹாரின் முதல்வர் பதவியில் இருந்தவர்கள்; ரயில்வே துறை அமைச்சராகவும் இருந்தவர்கள். இத்தனை ஒற்றுமைகள் இருந்தாலும் இருவரும் அரசியலில் பரம எதிரிகள். “இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் பல இருக்கலாம். அடிப்படையில் இருவரும் சோஷலிஸ்டுகள்” என்கிறார், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் வசிஷ்ட நாராயண் சிங்.

பெரும் பலத்துடன் இருக்கும் பொது எதிரியான பாஜக-தான் எதிர் துருவங்களில் நின்றுகொண்டிருந்த இரு தலைவர்களையும் ஒன்றாகச் சேர்த்திருக்கிறது என்றும் சொல்லலாம். 16-வது மக்களவைத் தேர்தலில், மோடி அலையால் சுருண்ட நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்குக் கிடைத்தது இரண்டு இடங்கள்தான். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு நான்கு இடங்கள்தான் கிடைத்தன. பாஜக-வுடனான உறவை முறித்துக்கொண்டதன் விளைவுதான், நிதீஷின் தோல்வி என்று பரவலாகப் பேச்சு எழுந்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து நிதீஷ் பதவி விலகியது பிஹார் அரசியலில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் உருவாகத் தொடங்கியதும் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்தான். மாநிலங்களவை இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு நிதீஷ் குமார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட லாலு, “மதவாத சக்திகளைத் தோற்கடிக்கும் நோக்கில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு தருவோம்” என்று அறிவித்தது, பிஹார் அரசியலில் புதிய மாற்றம் தொடங்கப்போவதை உணர்த்தியது.

இப்போது, இரு தலைவர்களிடையே துளிர்த்திருக்கும் உறவை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது பாஜக. அதேசமயம், இந்தக் கூட்டணியால் தங்கள் வெற்றியின் தொடர்ச்சி பாதிக்கப்படாது என்றும் கூறிவருகிறது. ஆனால், தங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்று வசிஷ்ட நாராயண் சிங் கூறுகிறார். “ஆட்சிக்கு வந்த பாஜக, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினை களால் மக்கள் செல்வாக்கை இழந்துவருகிறது. உத்தராகண்ட் இடைத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருப்பதே இதற்குச் சாட்சி” என்கிறார்.

அரசியல் களத்தில் இதுவரை எலியும் பூனையுமாக இருந்தவர்கள் திடீரென்று நட்பு பாராட்டுவது அரசியல் வெற்றியை எதிர்பார்த்துதான் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாசமிகு பழைய நண்பர்கள் வெற்றிக் கனியைச் சுவைப்பார்களா என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

- வெ. சந்திரமோகன், chandramohan.v@thehindutamil.co.in

SCROLL FOR NEXT