சிறப்புக் கட்டுரைகள்

சவுதி இளவரசருக்குக் காத்திருக்கும் சவால்களும் சச்சரவுகளும்!

தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

வுதி அரேபியாவில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்நாட்டின் மிக முக்கியமான அரசியல் உண்மையிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். அங்கு கடந்த 40 ஆண்டுகளில் அரசியல் சக்தியை வடிவமைத்தது, இஸ்லாமிஸமோ அடிப்படைவாதமோ தாராளவாதமோ முதலாளித்துவமோ ஐஎஸ் இஸமோ அல்ல.

சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னருக்கு 81 வயது. 90 வயதில் இறந்த மன்னருக்கு அடுத்து மன்னர் ஆனவர் இவர். அந்த மன்னருக்கு முன்னாள் இருந்த மன்னரும் 84-வது வயதில் மரணமடைந்தவர்தான். அதற்காக, அவர்களில் யாரும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதல்ல. உலகமே தொழில்நுட்பம், கல்வி, உலகமயமாக்கல் ஆகியவற்றில் அதிவேக மாற்றங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தபோது, சவுதியின் அடுத்தடுத்த மன்னர்கள் மணிக்கு 10 மைல் வேகத்தில் நாட்டை முன்னேற்றுவது போதும் என்று நினைத்தனர் என்பதுதான் விஷயம். மிக மெதுவான அந்த முன்னேற்றமானது, அதிக எண்ணெய் விலையை வைத்துச் சரிகட்டப்பட்டது.

இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் படித்துவருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் பெண்கள் உட்பட சுமார் 35,000 பேர் பட்டப்படிப்புடன், அர்த்தமுள்ள வேலையை எதிர்பார்த்து நாடு திரும்பு கிறார்கள். எண்ணெய் துறைக்கும் வெளியே மேலும் அதிக வேலைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. சவுதி அரேபியாவின் வருவாயும் முன்பைப்போல் இல்லை. அந்நாட்டு அரசும் சேமிப்பில் இருக்கும் தொகையை வைத்துச் சமாளித்து ஸ்திரத்தன்மையைப் பெற்றுவிட முடியாது.

அதுதான், மன்னர் சல்மானின் மகனும் 32 வயதே ஆன பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மா னின் சமீபத்திய துணிச்சலான, அதேசமயம் அவசரகதியிலான நடவடிக்கைகளின் பின்னணி. எம்.பி.எஸ். என்று அழைக்கப்படும் அவரை இரண்டு முறை நான் பேட்டி கண்டிருக்கிறேன். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இளைஞர் அவர்.

உண்மையில், அவரைப் பற்றி இரண்டு விஷயங்களை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்: வஹாபிய ஆதரவாளர் என்பதை விட, மெக்கென்ஸி (அமெரிக்க மேலாண்மை ஆலோசனை நிறுவனம்) பாணி ஆசாமி. குரான் ஆர்வலர் என்பதை விட அதிநவீன தொழில்நுட்பங்களில் ஆர்வமுடையவர்.

ஆனால், எனக்கு உறுதியாகத் தெரியாத விஷயம் இதுதான்: அதிவேகச் சீர்திருத்தத்துக்கான அவரது உத்வேகம் மறைந்து, எல்லா அதிகாரங்களையும் தனதாக்கிக்கொள்வதற்கான சர்வாதிகார முனைப்பு எங்கிருந்து வந்தது? சவுதி இளவரசர்கள் சிலரையும், சில ஊடகங்களின் உரிமையாளர்களையும், கோடீஸ் வர தொழிலதிபர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் எம்.பி.எஸ். கைதுசெய்ததை அடுத்து, “கடும் நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருப்பவர்களில் சிலர், பல ஆண்டுகளாக அந்நாட்டைச் சுரண்டிவருபவர்கள்” என்று ட்விட்டரில் எழுதினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதைப் படித்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஊழல் குற்றச்சாட்டின்பேரில் சவுதி இளவரசர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனும் செய்தியைக் கேள்விப்படுவது என்பது, பொய் சொன்னதற்காகத் தனது ஏழு அமைச்சர்களை ட்ரம்ப் பதவிநீக்கம் செய்தார் எனும் செய்தியைப் படிப்பது போன்றது. ட்ரம்ப் ஒரு விஷயத் தைத் தவறவிட்டுவிட்டார். கடந்த ஆண்டு விடுமுறை யைக் கழிக்க பிரான்ஸுக்குச் சென்றிருந்த எம்.பி.எஸ்., அங்கு துறைமுகத்தில் ஒரு சொகுசுக் கப்பலைப் பார்த்து பரவசமாகி, அதன் ரஷ்ய உரிமையாளரிடமிருந்து ரூ.35,000 கோடிக்கு அவசர அவசரமாக வாங்கினார். அந்தப் பணம் என்ன அவரது சேமிப்பு உண்டியலிலிருந்து வந்ததா? அரசின் நிதியிலிருந்து வந்ததா?

துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக, ஏழு பெரிய குடும்பங்களிடையே அதிகாரம் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற, ஒருமித்த கருத்துகள் மூலம் முடிவெடுக்கப்படுகின்ற நாடு எனும் நிலையிலிருந்து ஒற்றைக் குடும்பத்தால் ஆளப்படும் ஒரு நாடாக சவுதி அரேபியாவையே மாற்றிவருகிறார். இனி அந்நாடு ‘சவுதி அரேபியா’வாக இருக்காது. ‘சல்மான் அரேபியா’வாக மாறிவருகிறது. எம்.பி.எஸ். சமீபத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கைகள் மூலம், முக்கியமான அரச குடும்பங்களைச் சேர்ந்த இளவரசர்களை, அதாவது அரச குடும்பங்களில் அவரது இயல்பான எதிரிகளை முடக்கியிருக்கிறார். அத்துடன், எம்.பி.சி., ஏ.ஆர்.டி., ரோடானா என்று கொஞ்சம் சுதந்திரமாகச் செயல்படும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்களையும் கைதுசெய்திருக்கிறார்.

அதேசமயம், ஆட்சியின் சட்டபூர்வத் தன்மையின் அடிப்படையையே மாற்றுகிறார்; ‘1979 யுக’த்தை முடிவுக் குக் கொண்டுவருகிறார். 1979-ல், தீவிரமான அடிப்படைவாத மதபோதகர் ஒருவர், அல்-சவுதி குடும்பம் இஸ்லாம் மதத்தில் அத்தனை ஈடுபாடு கொண்டதல்ல என்று சொல்லி இஸ்லாமின் புனிதத் தலமான மெக்காவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மதரீதியான தனது ஈடுபாட்டைக் காட்டிக்கொள்ள, தூய்மைவாத வஹாபி சன்னி இஸ்லாம் மத நம்பிக்கையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. லண்டன் தொடங்கி இந்தோனேஷியா வரை மசூதிகளையும் பள்ளிகளையும் உருவாக்கியது.

அரபு / முஸ்லிம் உலக நாடுகளுக்கே அது ஒரு பேரழிவாக உருவானது. அல்-கொய்தா, ஐஎஸ் போன்ற ஆபத்தான அமைப்புகள் உருவாகக் காரணமானது. அரபு நாடுகளில் கல்வியும் பெண்களின் முன்னேற்றமும் தேக்க நிலையை அடையக் காரணமானது.

தற்போது, முற்போக்கான சவுதி இஸ்லாமுக்கு வழிவகுக்கப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார் எம்.பி.எஸ். மதரீதியான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பது போன்றவற்றைச் செய்யத் தொடங்கியிருக்கிறார். இது மிக முக்கியமானது. தனது அரசை இறைபக்தியை வைத்து அல்ல, செயல்பாடுகளின் அடிப்படையில் மக்கள் பார்க்க வேண்டும்; குரான் அடிப்படையில் அல்லாமல் - வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் ஆகியவற்றில் தனது அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று துணிச்சலாகச் செயல்படுகிறார்.

ஆனால், ஒற்றுமைக்கு வழிவகுக்கும் விஷயமாக வஹாபிஸத்துக்குப் பதிலாக, மதச்சார்பற்ற சவுதி தேசியவாதத்தை அவர் முன்னிறுத்துகிறார். ஈரான், ஷியா பிரிவினருக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு இது. இது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஈரானை எதிர்கொள்வதற்காக, சன்னி பிரிவைச் சேர்ந்த லெபனான் பிரதமர் சாத் அல்-ஹரிரியைப் பதவி விலகச் செய்த எம்.பி.எஸ்., லெபனானில் ஆட்சி நிர்வாகம் நடக்க முடியாத நிலையை உருவாக்கியிருப்பதாக ஈரான் மீதும், ஷியா ஆதரவாளர்கள் மீதும் குற்றம்சாட்டினார். ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக யேமனையும் விமர்சித்தார் எல்லோரிடமும் ஒரு ஸ்திரமான சமநிலையை உருவாக்கியிருந்த லெபனான் தற்போது நிலைகுலைந்திருக்கிறது.

இந்த ஆள் ஒரு மெதுவான மரணத்திலிருந்து சவுதி அரேபியாவைக் காப்பாற்றியிருக்கிறார். சவுதி அரச குடும்பத்தை மதகுருக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்திருப்பது நல்ல விஷயம். ஆனால் தனது அரசியல், பொருளாதார முடிவுகளில் மாற்றுக் கருத்துகளை அவர் அனுமதிக்க மறுக்கிறார்” என்று எம்.பி.எஸ். பற்றி மூத்த சவுதி பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

ஈரானை எதிர்கொள்வதில் மேலும் உக்கிரமாகச் செயல்பட வேண்டும் என்று அவரைத் தூண்டிவிடும் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், (ட்ரம்பின் மருமகனும் அவரது ஆலோசகருமான) ஜாரெத் குஷ்னெர், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹு எல்லோரும் ஒரே சமயத்தில் சவுதி அரேபியாவுக்குள்ளும் வெளியிலும் போர் உருவாகும் நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஒரே சமயத்தில் சவுதி அரேபியாவும் மொத்த பிராந்தியமும் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உருவாகும். முன்பே சொன்னதுபோல், எனக்குக் கவலையாக இருக்கிறது!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

SCROLL FOR NEXT