“அப்படியானால் அமெரிக்கா நம்மைத் தாக்குமா?” என்று மாஸ்கோவில் என்னுடைய பல் மருத்துவரின் மருத்துவ மனையில் என்னிடம் கேட்டார்கள். மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட அன்று நான் இங்கிருந்தேன். என்னுடைய பல் டாக்டர், மருத்துவமனை வரவேற்பாளர், அங்கு கணினியைப் பழுது பார்க்க வந்தவர் என்று எல்லோருமே, “நீங்கள் பத்திரிகையாளர், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், அடுத்து என்ன நடக்கும்?” என்று கவலை யோடு என்னைக் கேட்டனர்.
“விமானம் வீழ்த்தப்பட்டதற்கான தண்டனையை (உக்ரைன்) பிரிவினைவாதிகள் அனுபவிக்கப் போவதில்லை. கடைசியாக, அந்தப் பழி ரஷ்யா வின் தலைமேல்தான் வந்து விழப்போகிறது. பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் தந்திருப்பது கிரெம்ளின் என்பதால் விமானத்தை வீழ்த்தியதிலும் அவர்களுக்குத்தான் பங்கு இருக்கிறது என்று குற்றம்சாட்டப் போகிறார்கள்” என்று கான்ஸ்டான்டின் என்ற அரசியல் விமர்சகர் எழுதியிருந்தார்.
ஆதாயம் அமெரிக்காவுக்குத்தான்
இந்தச் சம்பவம் எப்படி நடந்திருக்கும், யார் சதி செய்திருப்பார்கள் என்றெல்லாம் தங்களுக்குள் விவாதிக்கும் மாஸ்கோ நகரவாசிகள், பல்வேறு சதித் திட்டங்களைப் பற்றித் தங்களுக்குள் ரகசியக் குரலில் அடிக்கடி பேசுகின்றனர்.
என்னுடைய பல் மருத்துவர் டிமிட்ரி, ராணு வத்தில் வேலைசெய்து ஓய்வுபெற்றவர். “இந்த விமானம் வீழ்த்தப்பட்டதால் அரசியல்ரீதியாக யாருக்கு ஆதாயம், அமெரிக்காவுக்குத்தான்” என்று தன்னுடைய சந்தேகத்தையும் சேர்த்துப் புதிய தகவலைத் தெரிவிக்கிறார்.
அடுத்து, நான் வீட்டுக்குச் சாமான் வாங்க வந்த கடையின் இளம் மேலாளர் விடாலி, இந்த விவகாரம்குறித்து சூடாகவே பேசினார். “தவ றான தகவல்களை உலகுக்கு அளிக்கின்றனர். ரஷ்யாவையோ, உக்ரைன் அரசு எதிர்ப்பாளர் களையோ குற்றவாளிக் கூண்டில் உடனே ஏற்றி விட வேண்டும் என்று துடிக்கின்றனர். உக்ரைன் எதிர்ப்பாளர்களின் உண்மையான நோக்கம் என்ன வென்று தெரியவில்லை. அவர்கள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியிருக்காவிட்டாலும் அவர்களுக்கு அனுதாபப்படத் தேவையில்லை” என்கிறார் விடாலி.
“பிரிவினைவாதிகள் என்றாலே அரசியல்ரீதியாக சுமைதான்; நல்ல ராஜதந்திரிகள் இதை முன்கூட்டியே தெரிந்து சொல்வார்கள்” என்கிறார் கான்ஸ்டான்டின்.
“உலகமே முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தை மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதும் அடைந்தேன். எல்லோருமே இறந்துவிட்டார்கள் என்பதைக் கேட்கவே துயரமாக இருந்தது. இதையே சாக்காக வைத்துப் புதிய போர் வந்தால், விமானத்தில் இறந்தவர்களைப் போல பல மடங்கு சாவார்களே” என்றும் வருத்தம் தெரிவித்தார் மரியா என்ற இளம் பெண்.
புதின் தலையிடுவது சரியல்ல
கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்ய அரசு ஆதரவு அளிப்பதைப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. கிரீமியாவைக் கைப்பற்றி ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டதுடன் இந்த விவ காரத்திலிருந்து ரஷ்யா விடுபட்டிருக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.
“ உக்ரைன் அரசை எதிர்க்கும் பிரிவினைவாதிகள் அன்றாடம் புதினுடன் பேசித்தான் உத்தரவு பெறு கின்றனர் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் எழுதுவது சிரிப்பை வரவழைக்கிறது” என்கிறார் கான்ஸ்டன்டைன்.
“உக்ரைன் விவகாரத்தில் புதின் தலையிடுவது சரியல்ல, அவருடைய ஆலோசகர்கள் அவருக்கு நல்ல யோசனை கூறத் தவறிவிட்டனர்” என்று விடாலி சாடுகின்றார்.
“ரஷ்யாவை புதின் இட்டுச்செல்லும் பாதை சரியல்ல, எதற்காக உக்ரைன் பிரிவினைவாதிகளை ஆதரிக்கிறார்? புதினுக்கு ஆதரவாக நான் எப் போதுமே வாக்களித்ததில்லை. நாட்டை அவர் நிர்வகிக்கும் விதம் சரியல்ல. இந்தச் சம்பவம் மிக பயங்கரமானது. நிச்சயம் இதை அவர் விரும்பியிருக்க மாட்டார்” என்கிறார் எகாதெரினா. இவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். “இந்த விவகாரத்தில் புதினை நேரடியாகச் சம்பந்தப்படுத்த சில வெளிநாட்டுச் சக்திகள் முயல்கின்றன. ரஷ்யா இப்போது வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், இன்னமும் சில குழப்பங்கள் நிலவுகின்றன. மக்கள் யாராவது ஒரு தலைவரை நம்பித்தான் ஆக வேண்டும். உக்ரைன் தலைமையை 100% நம்ப முடியாது” என்கிறார் மரியா.
தவறான அனுமானம்
மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது தவறான அனுமானத்தால் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள், அப்பாவிகள் இறந்தது குறித்து அனைவருமே வருத்தம் அடைகிறார்கள், ஆனால், இந்தச் சதியை ரஷ்யாவோ புதினோ செய்திருக்க மாட்டார்கள் என்பதில் நிச்சயமாக இருக்கிறார்கள். இந்தச் செய்தி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டதால், தொலைக்காட்சிகள் அவரவர் போக்கில் செய்திகளைத் திரித்தும் கூட்டியும் வெளியிட்டுவருகின்றன. உக்ரைன்குறித்தோ, போர்குறித்தோ கேள்விப்பட்டிராத குழந்தைகள்கூட இந்தச் சம்பவத்தில் இறந்தனவே என்று பலரும் ஆற்றாமையாகப் பேசுகின்றனர். யாருக்கு இடையில் சண்டை என்றாலும் அப்பாவிகள்தானே இறக்கின்றனர் என்றும் ஆதங்கப்படுகின்றனர்.
- தி கார்டியன், தமிழில்: சாரி