சிறப்புக் கட்டுரைகள்

இந்திரா காந்தி: தெரிந்த நபர், தெரியாத முகம்!

வாஸந்தி

நவம்பர் 19: இந்திரா காந்தி பிறந்த நாள்

அவரை இரும்பு மனுஷி என்று சொல்கிறார்கள். சர்வாதிகாரி என்றும் சொல்கிறார்கள். மூன்று முறை இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு வேறு சில பரிமாணங்களும் இருந்திருக்கின்றன. வரலாற்றின் ஏடுகளில் இதுவரை சொல்லப்படாத – இந்திய அரசியல் களத்தில் ‘சுற்றுச் சூழல் பாதுகாப்பு’ என்கிற பதமே உபயோகத்தில் இல்லாத காலகட்டத்தில், அழியும் காடுகளையும், வேட்டையாடப்படும் அபூர்வ விலங்கினங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்களையும் மீட்டு காப்பாற்ற அவர் பெருமுயற்சி எடுத்த முகம் - இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது, ஒரு புத்தகத்தின் மூலம்.

இயற்கை மீது அக்கறை

ஜெயராம் ரமேஷ் எழுதியிருக்கும் 423 பக்கப் புதிய புத்தகமான ‘இந்திரா காந்தி: எ லைஃப் இன் நேச்சர்’ (இந்திரா காந்தி: இயற்கையில் ஒரு வாழ்க்கை) நவீன இந்தியாவின் பிரதமர்களில் சுற்றுச்சூழலை எவ்வளவு அக்கறையோடு இந்திரா அணுகினார் என்பதை வியப்பூட்டும் வகையில் சொல்கிறது. எத்தனையோ அலுவல்களுக்கிடையே அனைத்து மாநிலங்களின் சுற்றுச் சூழல் பிரச்சினைகளையும் உடனடியாக அவர் கவனித்திருக்கிறார். மிக நீண்ட பட்டியல் அது. தமிழகத்தில் கிண்டி மான்கள் சரணாலயத்தை தேசிய பூங்கா ஆக்கியதில் தொடங்கி கேரளத்தில் அமைதிப் பள்ளத்தாக்கை மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் பாதுகாக்கும் வழிசெய்தது வரை. இந்தியப் புலிகள் இனம் மேலும் வேட்டையிடப்படாமல் இருக்க சட்டம் இயற்ற முனைந்திருக்கிறார். அணைகளும் வளர்ச்சித் திட்டங்களும் அவசியமானாலும் பழங்குடியினரையும் சுற்றுச்சூழலையும் அவை பாதித்தால் அது வளர்ச்சி இல்லை என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

இந்திராவின் பேச்சுகள், கடிதங்கள், ஆவணங்கள் துணையோடு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் கூடவே இந்திரா தொடர்பான கதையாடல்களில் பலவற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும் தகவல்கள் பலவும் இடம்பெற்றிருக்கின்றன.

கடிதக் கல்வி

இந்திரா பிரியதர்ஷினி 19 நவம்பர் 1917-ல் அலஹாபாதில், இந்திய விடுதலை இயக்கத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தாத்தாவும் தந்தையும் அரசியல் சித்தாந்தத்தில் வேறுபட்டாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். ஒரே குழந்தையாக இருந்த இந்திராவின் குழந்தைப் பருவம் கடினமானது. தாய் காசநோயில் கஷ்டப்பட்டார். தந்தை நேரு அடிக்கடி சிறைக்குச் சென்ற வண்ணம் இருந்தார். பள்ளிப்படிப்பு ஒரே சீராக இருக்கவில்லை. சுவிட்சர்லாந்திலும் பூனா, கொல்கத்தா, மற்றும் இங்கிலாந்திலும் அமைந்தது. ஆனால் இந்திரா அதிகமாகக் கற்றது அவருடைய தந்தையிடமிருந்து.

நேரு தன் மகளுக்கு 1922 – 1964 காலகட்டத்தில் 535 கடிதங்களைத் தன் மகளுக்கு எழுதியிருக்கிறார்! அவை மூன்று புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. முதல் புத்தகம் – ‘லெட்டர்ஸ் ஃப்ரம் எ ஃபாதர் டு ஹிஸ் டாட்டர்’ (ஒரு தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்) - அவள் பத்துவயதுகூட நிரம்பாத சிறு பெண்ணாக இருந்தபோது சிறையிலிருந்து எழுதப்பட்டவை. அவளுடைய பிஞ்சு மனத்தை ஆட்கொண்டிருக்கின்றன. “கடிதங்கள்... எனக்கு உலகைப் பற்றின புதிய பார்வையை அளித்தன. இயற்கையை ஒரு புத்தகம்போலக் கருத எனக்குச் சொல்லிக்கொடுத்தன. பாறைகளும் மரங்களும் தங்களுடைய கதைகளை மட்டும் சொல்லவில்லை, அவற்றுடன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும் உயிரினங்களைப் பற்றியும் கதைத்தன என்று அவருடைய கடிதங்கள் எனக்கு விவரித்தன” என்று குறிப்பிடுகிறார் இந்திரா.

சிறுமி இந்திரா தந்தைக்கு பதில் எழுதுவாள். கிட்டத்தட்ட சம வயதினருக்கு எழுதுவதுபோல. ஒரு முறை இந்திராவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இன்னொரு சிறையில் இருந்த தந்தைக்குச் சிறை வளாகத்தில் இருந்த ஒரு மரத்தைப் பற்றி எழுதுகிறார். “இங்கு மூன்று நிழல்தரும் மரங்கள் மட்டுமே இருந்தன. அதில் ஒன்று, மிக கம்பீரமாக நின்றிருந்த வேப்ப மரம் பெரிய சத்தத்துடன் ஒரு நாள் விழுந்தது. மரம் நின்றிருந்தபோது அது நிரந்தரமாக இருக்கும் என்று தோன்றும். அதனுடைய வேர்கள் எல்லாம் கரையான் அரித்து உளுத்துப்போய்விட்டன. அது படுத்துவிட்ட நிலையிலும் அதனுடைய கிளைகள் ராஜ கம்பீரத்துடன் இருந்தன. ஆனால் அது உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு அடுப்புக்கு விறகாக வெட்டி உபயோகிக்கப்பட்டது. ஞாபகம் இருக்கிறதா அந்தக் கவிதை? ‘எல்லாரும் பயந்த பயங்கர கரடி / இப்போது காலடிக்குக் கம்பளி!’ ”

இளைய மகன் சஞ்சை காந்தி விமான விபத்தில் [1983] இறந்தபோது அதைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அதே தோழிக்கு எழுதுகிறார். “நாம் இறந்தவருக்காக அழுவதில்லை; நமக்காக அழுகிறோம்!”

ஒரு தாயின் கவலை

1971 அவருக்கு வெற்றியைத் தந்த வருடம். மார்ச்சில் நடந்த தேர்தல் களம் அவருக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால், அவருக்கு தன்னுடைய ஆயுளைப் பற்றி திடீரென்று சந்தேகம் வந்ததுபோல இருந்தது. நெருங்கிய நண்பர் ஹக்ஸருக்கு அவர் எழுதிய கடிதம் ஆச்சரியமானது. “உங்களுக்குத் தெரியும், எனக்கு மூடநம்பிக்கை கிடையாது என்று. இருந்தாலும் சில நாட்களாக எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆகும் என்கிற எண்ணம் என்னை அலைக்கழிக்கிறது. குழந்தைகளைப் பற்றி உண்மையில் கவலைப்படுகிறேன். அவர்களுக்கு விட்டுச்செல்ல என்னிடம் சில [ அதிக மதிப்பில்லாத] பங்குகளைத் தவிர எதுவும் இல்லை.கொஞ்சம் நகை இருக்கிறது. அதை எதிர்கால மருமகள்களுக்கும் பிரித்து வைத்திருக்கிறேன். சில வீட்டுச் சாமான்கள் படங்கள், கார்பெட்டுகள் இருக்கின்றன. எல்லாமே சமமாகப் பிரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், ஒரு விஷயம். ராஜீவுக்கு வேலை இருக்கிறது. சஞ்சய் வேலை இல்லாதவன். தவிர மிக செலவு பிடித்த திட்டத்தை ஆரம்பித்திருக்கிறான். நான் அவனது வயதில் இருந்ததைப் போல இருக்கிறான் முரட்டுத்தனத்தில் - அவன் எவ்வளவு கஷ்டப்படப்போகிறானோ என்று நினைத்தாலே என் இதயம் வலிக்கிறது. பிரச்சினை என்னவென்றால் எங்கு வசிப்பார்கள்,எப்படி என்று தெரியவில்லை. பிள்ளைகள் இந்த உலகில் தனியாக இல்லை என்று உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் சாய்ந்துகொள்ள ஒரு தோள் இருக்கிறது என்று ...”

தனிமை தந்த வலி

டாரதி நார்மனுக்கு எழுதிய பல கடிதங்கள் மிக நெருக்கமானவை. நாட்டைப் பற்றின தனது அந்தரங்க கவலைகளை ஏமாற்றங்களை வெளிப்படுத்துகிறார். அரசியல் களத்தில் இருந்த நிறைய எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் சொல்கிறார். “இனிமேல் மேற்கொண்டு எதையும் செய்யமுடியாது என்று சோர்வு என்னை ஆட்கொள்கிறது. என்னைச் சுற்றி அத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. தீர்வு ஏதும் புலப்படவில்லை. அடுத்த அடி சரியானதா என்று சொல்ல உண்மையானவர் எவருமில்லை. எதுவும் தவறாகிப்போனால் அதில் சந்தோஷப்படத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். பேராசையிலும் அற்பத்திலும் அமிழ்ந்திருக்கும் ஆட்களைப் பார்க்கும்போது மிகுந்த சோர்வு ஏற்படுகிறது.”

ஒரு கடிதத்தில் எழுதுகிறார், “இன்றைய அரசியல் பணம் சம்பந்தப்பட்டதாக, வாய்ப்பு தரும் விஷயமாகப் போய்விட்டது. என்னிடம் பணமுமில்லை, அதிகாரமும் இல்லை என்பதால் இந்தக் கும்பலில் மிகவும் தனிமையை உணர்கிறேன்.”

விரைவிலேயே மக்கள் அவரை மன்னித்தார்கள். 1980-ல் நாடகத் திருப்பமாய் பெரும்பான்மைப் பலத்துடன் திரும்ப ஆட்சியைப் பிடித்தார் இந்திரா. ஆட்சியுடன் பிரச்சினைகளும் நிறைய வந்தன. பஞ்சாபிலும் அஸ்ஸாமிலும் வன்முறைகள் தொடங்கின. பஞ்சாபில் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் கடைசியில் பொற்கோயிலில் ராணுவும் நுழையவேண்டிய அவலம் ஏற்பட்டது. அதன் தாக்கம் இந்திராவின் மரணத்தில் கொண்டுபோய் விட்டது. அவசரக் காலச் சட்டமும் பொற்கோவில் ராணுவ நுழைவும் கரும்புள்ளிகளாயின. அவருடைய இயற்கை நேசத்தையும் கவிதை மனதையும் மறைக்கும் அளவுக்கு. ஆனால் நம் மனதில் அவைதான் இப்போது நிற்கின்றன!

- வாஸந்தி,

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,

தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

SCROLL FOR NEXT