கர்நாடகத்தின் சட்ட மேலவைக்கு மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட விரும்பிய விஜூ கவுடா பாட்டீலின் ஆதரவாளர்களிடம் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி ரூ. 40 கோடி கேட்ட விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. குறுந்தகட்டில் பதிவுசெய்யப்பட்ட அவரது உரையாடலை, கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பி, டி.ஆர்.பி-ஐ அதிகரித் துக்கொண்டன. “இது கண்டிக்கத் தக்க செயல். அரசியல், தேர்தல் போன்ற ஜனநாயக முறைகளெல்லாம் அசிங்கப்பட்டுவிட்டன…” என்றெல்லாம் பிற கட்சிகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தாலும் குமாரசாமி அசைந்துகொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கமும் சற்றே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. “தேர்தலில் ஆதரவளிக்கப் பேரம் பேசுவது நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடப்பதுதான். தற்போதைய அரசியல் நிலவரத்தையே நான் எடுத்துக் கூறினேன். ஆனால், பணம் எதுவும் வாங்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தயார்” என்று கூறியிருக்கிறார் குமாரசாமி.
நாட்டில் மேலவை முறை நடைமுறையில் இருக்கும் ஆறு மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. மொத்தம் 75 பேர் அம்மாநில மேலவையில் உறுப்பினர்களாக உள்ளனர். காலியாக இருந்த 7 இடங்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதுதான் குமாரசாமி சர்ச்சைக்குரிய அந்த விஷயத்தைப் பேசியிருக்கிறார். அரசியல் பழிவாங்கல் காரணமாக இப்போது இந்த விஷயம் வெளிவந்திருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் தனக்கு மன உளைச்சலைத் தந்திருப்பதாக, விஜூ கவுடா பாட்டீல் கூறியிருக்கிறார்.
பொதுவாக, நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைக்கான தேர்தல்களிலும் யார் அதிகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படுகிறது என்ற பேச்சு உண்டு. அவ்வப்போது ‘தேர்தலில் போட்டியிடப் பணம் கேட்ட தலைவர்' என்ற ரீதியில் செய்திகள் வெளியாகும். “ ‘தகுதி' அடிப்படையில்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுகிறது. எங்கள் கட்சியில் பணநாயகம் அல்ல; ஜனநாயகமே முக்கியம் வாய்ந்தது” என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் விளக்கமளிப்பார்கள். விஷயம் அத்துடன் முடிந்துவிடும். எதிர்க் கட்சியினரின் மனநிலையைப் பொறுத்து அந்த விவகாரம் கொஞ்ச நாட்களுக்கு நீடிக்கும். “ஏன்… நாங்கள் மட்டுமா பணம் வாங்குகிறோம்? உங்கள் கட்சியிலும்தானே வாங்குகிறீர்கள்?” என்றெல்லாம் தார்மிகக் கோபத்தை மட்டும் தப்பித்தவறிகூட யாரும் காட்டிவிட மாட்டார்கள். அரசியல் எதிரிகள் பரஸ்பரம் காட்டிக்கொள்ளும் அந்தப் பெருந்தன்மைதான் பல ஆபத்துகளையும் தவிர்த்துவிடுகிறது என்பது வேறு விஷயம்!
ஆனால், இந்த முறை குற்றம்சாட்டப்பட்ட குமாரசாமி, “கட்சியின் 40 எம்.எல்.ஏ-க்களும் ஆளுக்கு ஒரு கோடி கேட்கின்றனர். இதுதான் நடப்பு. என்ன செய்வது?” என்று கூறியிருப்பது சிந்திக்க வைக்கிறது. இதுபோன்ற விவகாரங்கள், கடலின் மேற்பரப்பில் தெரியும் பாறையின் நுனியைப் போன்றதுதான். ஆழத்தில் சென்று பார்த்தால் தெரியும் அது பாறை அல்ல, மூழ்கியிருக்கும் எரிமலை என்று. மேலவைத் தேர்தலில் குமாரசாமி கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்ற சரவணா ஒரு நகைக்கடை அதிபர் என்று வெளியாகியுள்ள தகவல்கள் இந்த விஷயத்தின் பின்னணியில் இருப்பது என்ன என்பதை சூசகமாகக் கூறுகின்றன. விஷயம் பெரிய அளவில் சென்றுவிட்டதால், கர்நாடக அரசிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். மேலவைத் தேர்தலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற குரல், அரசியல் மட்டத்தில் எழுந்திருப்பது கவனிக்கத் தக்கது.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in