பாலியல் வல்லுறவு சம்பவங்களில் தண்டனை வழங்கப்படுவது 20 சதவீதத்துக்கும் குறைவு!
தமிழகத்தில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் செய்தி கவலை அளிக்கிறது. கடந்த மாதம் பொள்ளாச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 11 வயது மற்றும் 10 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு, இரண்டு பேர் கொண்ட வன்கொடுமைக் கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அந்தச் சிறுமிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் தமிழகத்துக்குப் புதிதல்ல. 2012-ன் இறுதியில் தூத்துக்குடி, நாசரேத் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
2011-ல் 677, 2012-ல் 737, 2013-ல் 923 என்று பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்தபடியேதான் இருக்கின்றன. பாதிக்கப்பட்டோர் இத்தகைய கொடூர வன்முறைக்கு எதிராக நீதியைத் தேடிக்கொண்டே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தேங்கிக்கிடக்கும் வழக்குகள்
பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் தண்டனை வழங்கப்படுவது 20 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது ஒரு பக்கம் என்றால், மறுபுறம் நீதிமன்றங் களில் இதுதொடர்பான வழக்குகள் ஆயிரக் கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் 2,462 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நீதிமன்ற நிலுவையில் இருந்தன. இவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 21. ஆறு ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் 255. ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளின் எண் ணிக்கை 1,258. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதிக்குச் சமம் என்று சொல்வார்கள். பெண்கள்மீது இழைக்கப்படும் குற்றங்களில் மிகவும் கொடூரமான குற்றங்களான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில்கூட நீதிவிசாரணை ஆமை வேகத்தில்தான் இருக்கிறது என்பதைத்தான் மேற்கண்ட தரவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
பாலியல் வல்லுறவு மட்டுமல்ல பலாத்காரம், தாக்குதல், கொலை, கடத்தல், சித்திரவதை போன்ற பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கும் உரிய நீதி கிடைப்பதில்லை.
இதையெல்லாம் உணர்ந்துதான், பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த மூன்று மாதங்களில் விசாரணைசெய்து நீதி வழங்க வேண்டுமென்று ஜே.எஸ். வர்மா கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஆனால், டெல்லி சம்பவத்தில்கூட 8 மாதம் கடந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் குறைந்தபட்சம் 2013 ஜூன் மாதம் முடிய நடந்த, பெண்கள் மீதான அனைத்துக் குற்றங்களுக்கும் எதிராகத் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
தப்பித்துக்கொள்ளும் குற்றவாளிகள்
பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படும் பெண்களுக் கான மருத்துவச் சிகிச்சை, மனநல ஆலோசனை, மறுவாழ்வு நடவடிக்கைகள், மறுவாழ்வுத் திட்டங்கள் போன்ற செயல்திட்டங்கள் முழுமையான அளவில் கொண்டுசெல்லப்படவில்லை. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படும் பெண்களில் 70 சதவீதத்
தினருக்கும் அதிகமானவர்களுக்கு 10 நாட்கள் கடந்துதான் மருத்துவப் பரிசோதனையே நடத்தப்படுகிறது. பெரும்பாலான மருத்துவ அறிக்கைகளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல், அவர்களுக்கு எதிராகவே எழுதப்படுகின்றன. அவற்றைக் கொண்டு குற்றவாளிகள் ஜாமீன் பெறுவது மட்டுமல்ல, வழக்கைத் திசைதிருப்பவும் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல் துறை மேற்கொள்ளும் தொடர் விசாரணை, அவர்களின் அநாகரிகமான கேள்விகள், சரியான ஆலோசனைகள் வழங்காத போக்கு, தகுந்த சிகிச்சை அளிக்கப்படாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால், பாதிக்கப்பட்டோர் நம்பிக்கை இழக்கின்றனர்.
தமிழகத்தில் இதுபோன்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, சுயதொழில் போன்ற வாழ்க்கை மேம் பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதிகபட்சமாக, வழக்குப் பதிவுசெய்தல், குற்ற வாளிகளைக் கைதுசெய்தல், கலந்தாய்வு, மாவட்டத்திலிருந்து கொஞ்சம் நிவாரணம், சில நாட்கள் மருத்துவச் சிகிச்சை போன்ற நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. இவை பெரும்
பாலும் கண்துடைப்பு நடவடிக்கைகளே. இதையெல் லாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘குற்றவியல் தடுப்புத் திருத்தச் சட்டம்-2013’ கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது அவலத்திலும் அவலம். எனவே, இந்தச் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
காவல் துறை, மருத்துவத் துறை, நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறை போன்றவை இணைந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கென்று குற்றவியல் நீதிவிசாரணை ஆணை யம் அமைக்கப்பட வேண்டும். பெண்களின் குரல் அதிகார மட்டத்துக்குக் கேட்குமா?
- எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: vikathi@yahoo.co.in