கடந்த சில நாள்களாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசியல் களம். அதிமுக ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது பதிவான இந்த வழக்கில், தற்போது திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும்போது கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. இவ்விஷயத்தில் ஓர் அரசியல் கட்சியாக திமுகவின் எதிர்வினைகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அமலாக்கத் துறையின் அதி தீவிர நடவடிக்கை, மத்திய அரசால் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு இன்னோர் உதாரணமாகவும் ஆகியிருக்கிறது.
அமலாக்கத் துறையின் செயல்பாடுகள்: பொதுவாக, பணப் பரிமாற்ற மோசடி என்ற புகார் வந்துவிட்டாலே அங்கு அமலாக்கத் துறையும் வந்துவிடுகிறது. 2002இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டு, 2005இல் மன்மோகன் சிங் காலத்தில் நடைமுறைக்கு வந்த ‘பி.எம்.எல்.ஏ’ எனப்படும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act, 2002) அதற்கு வழிவகுக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் அமலாக்கத் துறையின் வழக்குகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. 2012-13இல் பி.எம்.எல்.ஏ. வழக்குகளின் எண்ணிக்கை 221. ஆனால், 2021-22இல் அந்த எண்ணிக்கை 1,180. அதேவேளையில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கை நீதிமன்றம் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவிவகித்தபோது, அவருக்கு நெருக்கமானவர்கள், அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் பெற்றபண மோசடிப் புகார்தான் இன்றைய கைது நடவடிக்கைக்கு மூல காரணம். 2014-15இல் தொடங்கிய இந்தப் பிரச்சினையில் 2021இல்தான் அமலாக்கத் துறை உள்ளே வந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களும் புகார்தாரர்களும் சமரசம் ஆனதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை, ஊழல் தடுப்பு அமைப்பு, பாதிக்கப்பட்ட சிலர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்தான், மத்திய குற்றப்பிரிவு இதுகுறித்து விசாரித்து இரண்டு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மே 16 அன்று உத்தரவிட்டது. இதுகுறித்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கும் அனுமதி அளித்தது.
அணிதிரளும் எதிர்க்கட்சிகள்: இந்த வழக்கில் அவசரகதியில் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கை பாய்ந்திருப்பதாகவும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி இதய வலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்திருப்பதாகவும் அமலாக்கத் துறை மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக, ஜூன் 23இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முக்கியமான ஆயுதமாகக் கைக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவருகின்றன.
இந்த ஆண்டில் மட்டும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கிறார். மதுபானக் கொள்முதல் கொள்கை தொடர்பான வழக்கில் சிக்கியிருக்கும் அவர், அமலாக்கத் துறையின் விசாரணைப் பிடியிலும் இருக்கிறார். இவ்வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். ரயில்வே நில மோசடி தொடர்பாக பிஹார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தற்போதைய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு ஆளாகாத எதிர்க்கட்சித் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு இது நீள்கிறது.
பாரபட்சமா? முறைகேடு புகார்கள் எழுவதால்தானே எதிர்க்கட்சித் தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆளாகிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழும். ஆனால், மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜகவில் இணைந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை இல்லாமல் போவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளிலும் தர்க்கம் இருக்கிறது.
கடந்த மார்ச்சில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.மடல் விருபக்சப்பாவின் மகன் வீட்டில் சோதனை நடத்தி ரூ. 6 கோடி பணத்தை லோக் ஆயுக்தா போலீஸார் கைப்பற்றினர். அங்கு ஏன் அமலாக்கத் துறை செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. செந்தில் பாலாஜி விவகாரத்தைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மீது பதியப்பட்ட ஊழல் வழக்குகளில் ஆதாரங்களைத் தருகிறோம், அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்குமா?” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். அரசியலில் தவிர்க்க முடியாத கேள்விகள் இவை.
புதிய பிரச்சினை அல்ல: கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலும் புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கப் பயன்படுத்துவதாகப் புகார்கள் இருக்கவே செய்தன. எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும் அதைக் கூறியிருக்கிறது. அதே போல் மாநில அரசுகளும் தங்கள் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்துவதாகப் புகார்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் மீது கூறப்பட்ட ஊழல் புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை என்ன நடவடிக்கை எடுத்தது? ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது எப்படி வழக்குப் பதிவுசெய்தது? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
தவிர, மாநிலங்களில் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிரான புகார்களில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்காத அரசியல் தலைவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் இனி விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை சிபிஐ பெற வேண்டும் என அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல முறை சிபிஐ விசாரணை கோரியவர்தான்.
மக்களின் எதிர்பார்ப்பு: எந்தக் காலத்திலும் புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாகவும் அரசியல் தலையீடு இல்லாமலும் செயல்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறுவதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சிபிஐ கூண்டுக்கிளியாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. காலத்துக்கு ஏற்ப அது தேவைதான். அமலாக்கத் துறைக்குப் பல சட்டத் திருத்தங்களின் மூலம் சிறப்பு அதிகாரங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த அதிகாரங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாய வேண்டும். ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், புலனாய்வு அமைப்புகள் எக்காலத்திலும் ஆட்சியாளர்களின் அரசியலில் சிக்காமல், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டுமே அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுவதாக ஒட்டுமொத்தமாகப் புகார் கூறிவிட முடியாது. மத்தியப் புலனாய்வு அமைப்புகளில் மத்திய அரசு தலையிடுவதாக 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில், அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளில், அமலாக்கத் துறை அரசியல்ரீதியாக விமர்சனங்களைப் பெறாமல் இருக்க வேண்டுமென்றால், பதியப்படும் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவது அவசியம். அது முடியாதபட்சத்தில் அந்த வழக்குகள் அர்த்தமற்றதாக ஆகிவிடும். புலனாய்வு அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அது வலு சேர்த்துவிடும்.