சிறப்புக் கட்டுரைகள்

உள்ளிருந்து எழும் குரல்கள்: 2 | 2 தற்கொலைக்குச் சமமான நடவடிக்கை

அருண் ஷோரி

பொருளாதார வளர்ச்சி வீதம் சரிவதற்கும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் மறைவதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் காரணம். பணமதிப்பு நீக்கம் என்பது தற்கொலைக்குச் சமமானது; பணமதிப்பு நீக்கம் துணிச்சலான செயல் என்றால் தற்கொலையையும் அப்படித்தான் கருத வேண்டும்.

பணமதிப்பு நீக்கம் என்பது அரசே ஊக்குவித்த மிகப் பெரிய, கறுப்பை வெள்ளையாக்கும் மோசடி பணமாற்றுத் திட்டமாகும். தடை செய்யப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகளில் 99% வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால் வீடுகளிலும் வேறு இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணம் முழுக்க அரசு அளித்த அவகாசத்துக்குள் வங்கிகளுக்குள் திரும்பி வந்து வெள்ளைப் பணமாகிவிட்டது. வரிவிதிப்பில் சிக்காத இந்தப் பணம் எங்கும் யாராலும் அழிக்கப்படவில்லை.

நாட்டை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான பொருளாதார முடிவுகள் ‘இரண்டரை நபர்களால்’ மூடிய அறைக்குள் எடுக்கப்படுகின்றன. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் அரைகுறை வழக்கறிஞர் கொண்ட குழுதான் - விளைவுகளைப் பற்றி ஆராயாமல் - முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

பொருளாதாரம் சரிகிறது, வேலைவாய்ப்புகள் அரிதாகிவருகின்றன, நாட்டின் தொழில் – வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகள் தெரிந்தும் பாஜகவில் உள்ள பெரும்பாலானவர்கள் பேசுவதற்கு அஞ்சி அல்லது பேசமுடியாமல் தடுக்கப்பட்டதால் மவுனம் சாதிக்கின்றனர். இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சொல்வதுடன் உடன்படுகிறேன்.

அரசை விமர்சிப்பவர்களை, பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து விரக்தி அடைந்தவர்கள் என்று முத்திரை குத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு வார்த்தை, கட்சிக்குள் விரக்தியோடு இருப்பவர்களின் பட்டியலை நீங்களே வெளியிட்டுவிடுங்களேன், யார் உண்மையைச் சொல்கிறார்கள், யார் விரக்தியில் பேசுகிறார்கள் என்று மக்களுக்கும் புரிந்துவிடும்.

அருண் ஷோரி

பத்திரிகையாளர், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்.

SCROLL FOR NEXT