கருத்துப் பேழை

முழு அடைப்பின்போது அரசு செய்ய வேண்டியவை!

செய்திப்பிரிவு

கரோனா பரவலையடுத்து இந்தியாவுக்கு இரட்டை நெருக்கடி ஏற்பட்டுவருகிறது. ஒன்று, சுகாதார நெருக்கடி. இன்னொன்று, பொருளாதார நெருக்கடி. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாகக் கூடிக்கொண்டுவருகிறது. இன்னொருபுறம், பொருளாதார நெருக்கடி முழு வேகத்துடன் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. கோடிக்கணக்கானவர்கள் வேலையை இழந்துவிட்டனர். இது உழைக்கும் வர்க்கத்தை, அதிலும் ஏழைகளை மிகவும் குறிவைத்துத் தாக்குகிறது.

மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்வோர், வீதிகளில் கூவி விற்போர், ஒப்பந்தத் தொழிலாளர்கள், அமைப்புரீதியாகத் திரட்டப்படாத தொழில் பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் இந்தப் பொருளாதார சுனாமியால் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிரத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்துத் தொழில் பிரிவுகளிலும் வேலைகள் நிறுத்தப்பட்டுவிட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலம் நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். அவர்களில் பலருக்கு செய்த வேலைக்கு ஊதியம்கூட நிலுவை வைக்கப்பட்டுவிட்டது.

அவநம்பிக்கைக் காலம்

மஹாராஷ்டிரத்தில் ஏற்பட்டுவிட்ட பொருளாதாரத் தேக்கநிலை வேகமாகப் பிற மாநிலங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. கோதுமை அறுவடைக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உணவுக்கு இதையே நம்பியிருக்கின்றனர். இந்த நேரத்தில், போக்குவரத்து தடைபடுவதும் அறுவடைக்குப் போக முடியாமல் தடுக்கப்படுவதும் அவர்களுக்கு நிவாரணத்தைத் தந்துவிடாது. இவையெல்லாம் அடுத்து வரப்போகும் நெருக்கடிகளுக்கு முன்னோட்டங்கள்தான்.

இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு விரைவான நடவடிக்கைகளே தேவை. நோய் பரவாமல் தடுக்க மக்களுடைய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாக இருக்கலாம். ஆனால், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றால் அரசு அவர்களுக்கு உதவிகளைச் செய்தாக வேண்டும். பணக்கார நாடுகளுக்கும், இந்தியா போன்ற நாடுகளுக்கும் இதில் வித்தியாசம் இருக்கிறது. பணக்கார நாடுகளில் மக்கள்தொகை குறைவு, செல்வ வளம் மிகுதி. அவர்களால் மக்களுக்கு உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை இலவசமாகவே தந்து பாதுகாக்க முடியும். கனடாவிலும் இத்தாலியிலும் சாதாரண குடும்பங்கள்கூட சில மாதங்களுக்கு வேலைக்குப் போகாமல் அரசு தரும் உதவிகளைக் கொண்டு வாழ முடியும். இந்தியாவில் அது சாத்தியமே இல்லை.

திட்டங்களை ஒன்றுதிரட்டுங்கள்

அரசு எதைச் செய்வதாக இருந்தாலும் விரைந்து செய்ய வேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள சமூக நலத் திட்டங்களை முழு அளவுக்கு இதில் பயன்படுத்த வேண்டும். முதியோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்குத் தரப்படும் ஓய்வூதியங்கள் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும். பொது விநியோக அமைப்புகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மூலமாக ஊட்டச்சத்து தரும் திட்டங்களும் முழுமையாகத் தொடர வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்திலிருந்து முன்பணம் வழங்கலாம். பொது விநியோக முறையில் அரிசி அளவுகளை உயர்த்தலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊதிய நிலுவையை உடனடியாக அளிக்கலாம். சில மாநிலங்கள் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி திட்டப் பயனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை அளிக்கின்றன. இந்த உதவிகள் மாபெரும் அளவில் இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு பெருந்தொகையை விடுவிக்க வேண்டும்.

மக்களின் அவதிகள்

அத்தியாவசிய சேவைகளை முடக்குவதால் மக்களுடைய துயரங்கள் பல மடங்காகிவிடும். சில மாநிலங்களில் தடுப்பூசிகள் போடுவதைக்கூட நிறுத்திவிட்டனர். இதில் சில நடவடிக்கைகளை நிறுத்துவது அரசுக்கு அவசியமாகக்கூட இருக்கலாம். ஆனால், இவற்றில் பல நடவடிக்கைகள் பல மடங்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தவல்லவை என்பதை மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு தடை நடவடிக்கையையும் எடுக்கும்போது இதனால் சுகாதாரத்துக்கு ஏற்படும் நன்மைகள், பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் இரண்டையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே இருப்பது என்ற முடிவை எடுக்கும்போது தனிநபர்களுக்கு இரண்டு நோக்கங்கள் இருக்க வேண்டும். முதலாவது, தன்னைப் பாதுகாத்துக்கொள்வது. இரண்டாவது, சமூகத்தைப் பாதுகாப்பது. முதல் நோக்கத்தில், நோய்க்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சம் இருக்கிறது. இரண்டாவதில், வைரஸ் பரவாமல் தடுக்கும் சமூக அக்கறை இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் நம்முடைய பாதுகாப்புக்காகவே என்று சிலர் கருதுகின்றனர். கரோனாவுக்காக நாம் ஏன் இத்தனை பெரிய தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்? நம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டும் அல்ல; இந்தக் கொள்ளைநோயை எல்லோருமாகச் சேர்ந்து தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆக்கபூர்வச் சிந்தனையைக் காட்டுங்கள்

புதிய திட்டங்களை, புதிய வழிமுறைகளைக் கொண்டுவரலாம். மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருட்கள், சேவைகளைப் பட்டியலிடலாம். அவற்றை யார், எப்படி வழங்குவது என்று திட்டமிடலாம். கரோனா வைரஸ் தடுப்பு வழிகளைக்கூட இப்படிப் பட்டியலிட்டு அரசு அலுவலகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தலாம். அங்கன்வாடிகளைப் பொதுச் சுகாதார சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கரோனா வைரஸ் பரவக் கூடாது என்ற பதைபதைப்பில் மக்களுடைய நலனுக்கான நிர்வாகத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது. சில மாநில அரசுகளால் பொது விநியோக முறையை நிர்வகிப்பதும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவருக்கும் வழங்குவதும்கூட பெரிய பாரமாகிவிடும் என்று தோன்றுகிறது. இது கரோனாவைவிட மோசமான நெருக்கடியில் மக்களை ஆழ்த்திவிடும். இந்தியாவின் பலவீனமான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை மேலும் வலிமையிழக்கச் செய்ய இது நேரமல்ல.

© ‘தி இந்து’, தமிழில்: சாரி

SCROLL FOR NEXT