அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் தமிழ் மக்களிடையே மௌனமாக ஒரு வீச்சை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. புத்தகம் வெளியாகி முதல் பதிப்பு முழுவதும் முன்பதிவிலேயே தீர்ந்துவிட்ட நிலையில், இரண்டாவது பதிப்பின் பெரும்பான்மைப் புத்தகங்களையும் ‘இந்து தமிழ்’ இணையத்தின் வழியாகப் பதிவுசெய்தே வாங்கிக்கொண்டிருக்கின்றனர் வாசகர்கள்.
புத்தகங்களைப் பெற்றதும் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்கள் வழியாக வாசகர்கள் வெளிப்படுத்தும் விதம் நெகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அண்ணாவின் புத்தகத்தை அரவணைத்தபடியான புகைப்படத்தோடு அவரைப் போற்றும் வாசகங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். வளைகாப்பு சீர் வரிசைகளில் ஒன்றாக ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்தையும் அளித்த ஒரு வாசகரின் நெகிழ்ச்சிப் பதிவு பேஸ்புக்கில் நூற்றுக்கணக்கானோரின் லைக்குகளை அள்ளியது.
இதனிடையே புத்தகங்களைப் படித்து முடித்தவர்கள் தங்கள் ஊர் அளவில் நூல் அறிமுகக் கூட்டங்களை நடத்துவதும், அந்தக் கூட்டங்களில் ஐம்பது பிரதிகள், நூறு பிரதிகள் என்ற அளவில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை மொத்தமாக வாங்கி விநியோகிப்பதுமான முயற்சிகளை எடுத்துவருகின்றனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று நிகழ்ச்சிகள் இந்த வகையில் நடக்கின்றன.
ஜூலை 15 அன்று சென்னை, பம்மலில் நடைபெற்ற கூட்டத்தில் திரளான வாசகர்கள் பங்கேற்றனர். ஜூலை 17 இன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை தெற்குக் கடைவீதியில் உள்ள சைவ சபையில் நடைபெறும் கூட்டத்தில் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் சிறப்புரையாற்றுகிறார்.
ஜூலை 20 சனிக்கிழமை அன்று திருப்பத்தூரில் ஒரு அறிமுகக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராஜபாளையத்தில் கடந்த வாரத்தில் இதேபோல நடத்தப்பட்ட, நூலின் துணைத் தொகுப்பாசிரியர் கே.கே.மகேஷ், நூல் திறனாய்வாளர் பூ.கொ.சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற கூட்டத்திலும் திரளான வாசகர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டங்களை நடத்தும் அமைப்புகள் யாவும் கட்சிசாரா பொது அமைப்புகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
ஊர்கள்தோறும் இப்படியான வாசிப்பு இயக்கங்கள் நடப்பதை ஊக்குவிக்கும் வகையில் ‘தமிழ் திசை’ பதிப்பகமும் நூறு பிரதிகள், ஐம்பது பிரதிகள் என்று மொத்த எண்ணிக்கையில் நூல்களை வாங்குவோருக்குச் சிறப்புத் தள்ளுபடியை வழங்குகிறது. புத்தகங்கள் வேண்டுவோர் இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம்: 74012 96562, 74013 29402.