சென்னை: மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளுக்கு விட்டல்ராவ் மற்றும் அம்ஷன் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவனின் தந்தை மறைந்த மா.அரங்கநாதன், சிறுகதை, கவிதை, கலாச்சாரம், கலைகள் என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள தனித்துவ படைப்பாளி.
மா.அரங்கநாதனின் நினைவைப் போற்றும் வகையில் கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்.16 அன்று முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் கதை, கவிதை, நாவல், கவின்கலை, ஆராய்ச்சி நூல்கள், மொழிபெயர்ப்பு என தமிழுக்கும், இலக்கியத்துக்கும் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் இருவருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
விருதுடன் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது எழுத்தாளர், ஓவியர், புகைப்படக் கலைஞர் மற்றும் தொழிற்சங்கவாதியான கி.விட்டல்ராவ் மற்றும் ஆவணப்பட தேசிய விருதாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
சென்னை அண்ணாசாலை ராணி சீதை அரங்கில் ஏப்.16 அன்று நடைபெறும் விழாவில் இவர்களுக்கான விருதை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்கி கவுரவிக்க உள்ளார்.