சென்னை: சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
‘தி இந்து’ குழுமம் சார்பில் ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 14-வது ஆண்டு இலக்கியத் திருவிழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் 17-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள், ஆளுமைகள் கலந்துரையாடினர். சிறப்புரைகளும் நிகழ்த்தினர். இந்நிலையில், நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. இதில், ‘வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்து கதைகளை உருவாக்குவது’ குறித்த அமர்வில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜுடன் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் உரையாடினார். இந்த தமிழ் அமர்வு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘ஹார்ட் லேம்ப்' நூலுக்காக கடந்த 2025-ம் ஆண்டில் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக், எழுத்தாளரும் எம்.பி.யுமான சசி தரூர் ஆகியோர் தனித்தனி அமர்வுகளில் கலந்துரையாடினர்.
நேற்று காலை நடைபெற்ற ஒரு அமர்வில் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், கே.சி.விஜயகுமாருடன் செஸ் குறித்து கலந்துரையாடினார். மாலையில் நடைபெற்ற மற்றொரு அமர்வில் பெரியார் குறித்து பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியுடன் கவிதா முரளிதரன் கலந்துரையாடினார்.
பல்வேறு ஆளுமைகள் பங்கேற்ற ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழா நேற்று நிறைவடைந்தது.