கோவை: சாகித்ய அகாடமி விருதை இரு முறை பெற்றவரும், ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு (96) வயது மூப்பு காரணமாக கோவையில் இன்று (ஜூன் 30) காலமானார்.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனியில் சிவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் கவிஞர் புவியரசு. இவரது மனைவி ஜெகதாம்பாள் மற்றும் மகன் இறந்துவிட்ட நிலையில், 2 மகள்கள் உள்ளனர்.
உடுமலைப்பேட்டை அருகே லிங்கவநாயக்கன்புதூர் கிராமத்தில் பிறந்தவர் புவியரசு. பெற்றோர் வைத்த பெயர் ஜெகநாதன். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக புவியரசு என தனது பெயரை மாற்றிக்கொண்டார். கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து 120 புத்தகங்களை எழுதி உள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தவர், பேரூர் தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் படித்தார். பேரூர் தமிழ் கல்லூரி துவங்கப்பட்டதுடன் அதில் சேர்ந்து படித்த முதல் குழு மாணவர்களில் இவரும் ஒருவர். தமிழ் பேராசிரியர்களும், கவிஞர்களும் இணைந்து உருவாக்கிய வானம்பாடி இயக்கத்தில் மூத்த முன்னோடியாக இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவர். அந்த இயக்கத்தில் அப்துல் ரகுமான், மு.மேத்தா, சிற்பி பாலசுப்ரமணியம், சிதம்பரநாதன் உள்ளிட்ட பல கவிஞர்களும், அறிஞர்களும் அங்கம் வகித்திருந்தனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, எல்லைப் பிரச்சினைக்காக மா.போ.சிவஞானத்துடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலம், ரஷ்யன், மலையாளம், இந்தி, இந்தி ஆகிய மொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். திரைப்படத் துறையிலும் கால்பதித்த புவியரசு ‘மகாநதி’, ‘விருமாண்டி’, ‘ஹவுஸ்ஃபுல்’ முதலான படங்களில் வசனகர்த்தாகவும், நடிகராகவும் பங்கெடுத்தவர். நடிகர் கமலின் இலக்கிய நண்பர்களில் முக்கியமானவர்.
‘காற்று’ என்ற சிற்றிதழை நடத்திய இவர், நடிகர் கமல்ஹாசனின் ‘மையம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.
ஆயிரக்கணக்கான கலையரங்கங்கள், பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறைப்புரை ஆற்றியுள்ளார். “தேடாதே, தொலைந்து போய்விடுவாய், வழிகள் மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன” என்பது கவிஞர் புவியரசுவின் புகழ்பெற்ற வரிகளாகும்.
இவர் எழுதிய ‘கையொப்பம்’ என்ற சொந்த கவிதைத் தொகுப்புக்காகவும், வங்காள கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் ‘தி ரெவெல்யூஷனரி’ மொழிப்பெயர்ப்பான ‘புரட்சிக்காரன்’ மொழிபெயர்ப்பு நூலுக்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்.
தனது இறுதி காலத்தில் கோவையை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (ஜூலை 1) காலை 9 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது.
எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, தமிழ்நாடு கலைகளுக்கு பெரும் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ப.பா.ரமணி மற்றும் எழுத்தாளர்கள், கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் புகழஞ்சலி:
“கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவுகூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.