‘வந்திருக்கும் விருந்தினருக்கு
இலையினிலே உணவிருக்கும்
வரப்போகும் விருந்தினருக்கு
அடுப்பினிலே உலையிருக்கும்’
ஜோடனைக்கோ புகழ்ச்சிக்கோ எழுதப்பட்ட வரிகள் அல்ல இவை. 2, சிவன்கோவில் தெற்குத் தெரு, சிவகங்கை என்ற விலாசத்தில் வாழ்ந்த கவிஞர் மீராவின் இல்லத்தின் யதார்த்தம். இதனை இன்றைய எழுத்துக் கலைஞர்கள் பலரும் அறிவார்கள்.
சிவகங்கை ஏன்ற சிறு நகரத்தில் அன்றைய காலகட்டத்தில் அவர் பதிப்புத் துறைக்கு செய்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
கி.ராஜநாராயணன், கந்தர்வன், பா.செயப்பிரகாசம், இன்குலாப், நாஞ்சில் நாடன், கோணங்கி, பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலான படைப்பாளிகள் பலரைத் தேடிக் கண்டறிந்து அவர்களின் படைப்புகளைத் தனது ‘அன்னம்’ பதிப்பகத்தின் மூலமாக எளிமையாகவும் நேர்த்தியாகவும் வெளிக்கொணர்ந்தவர் கவிஞர் மீரா. இளம் படைப்பாளிகள் பலரையும் அடையாளம் கண்டுகொண்டு அவர்களின் புத்தகங்களை வெளியிட்டது மீராவின் மிக முக்கியமான பங்களிப்பு.
இவை தவிர, அங்கதக் கவிதைகளின் முன்னோடி, சிவகங்கை மன்னர் கல்லூரியின் பிடித்தமான பேராசிரியர், பகை அறியாத மனிதர், மனிதர்களை குறைநிறைகளோடு வாங்கிக்கொள்ளும் பண்பு கொண்டவர் என்று அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அவருடைய அச்சுக்கூடம் கலையம்சம் மிக்கது. 5 X 3 என்ற அளவில் முகப்பில் பாரதியின் சித்திரம். உள்ளே நுழைந்ததும் தமிழாசிரியர், பெரியவர் வரதராசன் மெய்ப்புத் திருத்தம் செய்துகொண்டிருப்பார். இடைகழியில் அச்சுக்கோக்கும் பணியில் பெண்கள். அந்த இடத்துக்கே பொருந்திப்போகிற மாதிரி பணியாளர்கள். முகப்பறையில் அவர் பதிப்பித்த நூல்கள் வரிசை மாறாமல் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மீரா சன்னமான குரலில் வேலை வாங்கிக்கொண்டிருப்பார். வாசலில் முதிர்ந்த அரசமரம். இப்படி ஒரு சூழலுள்ள அச்சகத்தை இனி பார்க்க முடியாது. அச்சகம் மட்டுமல்ல, அன்னம் பதிப்பகத்தின் மூலமாக அவர் பதிப்பித்த படைப்பிலக்கிய நூல்களைப் பார்க்கும்போது மீரா என்ற தேர்ந்த ரசனையாளரையும் பார்க்க முடிகிறது. அழகியலையும் கலையையும் சார்ந்து இயங்கும் படைப்பாளிகளை இனங்கண்டுகொண்ட கண்கள் அவருடையவை.
மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ கவிதைத் தொகுப்பின் பாதிப்பில் துணுக்குத் தோரணங்களாக நூற்றுக்கணக்கான கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிஞராக அவர் செய்த பங்களிப்பைக் காட்டிலும் பதிப்பாளராகக் கவிதையுலகுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி அன்னம் வெளியிட்ட நவகவிதை வரிசை தமிழில் அப்போது எழுதத் தொடங்கியிருந்த முக்கியமான கவிஞர்களை அடையாளம் காட்டியது. கல்யாண்ஜி, நா.விச்வநாதன், ந.ஜயபாஸ்கரன் என்று அவ்வளவாக அறியப்படாதிருந்த புதுக்கவிஞர்களின்மீது பெரும் கவனம் குவிந்தது.
இலக்கிய நூல்களுக்கு இன்றைக்கு உருவாகியிருக்கும் குறைந்தபட்ச விற்பனைச் சந்தையும்கூட அன்னம் தொடங்கப்பட்ட காலத்தில் இல்லை. பதிப்பகம் தொடங்கிய தமிழ்ப் பேராசிரியர்கள் ஒருசிலர் அதை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பாடநூல்களாக்கிவிடும் சாமர்த்தியத்தைக் கற்றுவைத்திருந்தார்கள். ஒருசிலர் முனைவர் பட்ட ஆய்வேடுகளையும்கூட ஈவிரக்கமின்றி அச்சிட்டு நூலக ஆணைகளைப் பெற்றார்கள்.
மீராவும் நூலக ஆணைகளை நம்பித்தான் புத்தகம் போட்டார் என்றாலும், அவர் அந்த எல்லைக்குள் செய்த முயற்சிகளுக்கு தமிழ் இலக்கிய உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. முதலாவதாக, அவர் இளங் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் இலக்கியச் சூழலுக்கு நவீன இலக்கியக் கோட்பாட்டு நூல்களின் வாயிலாக வளம்சேர்த்தார். பாரதியைக் கொண்டாடினார். மீரா தொகுத்தளித்த ‘பாரதியம்’ அவரைப் பற்றிய புத்தகங்களில் முக்கியமானது.
கி.ராவை நட்சத்திர எழுத்தாளராக மாற்றியதில் மீராவுக்கும் பங்குண்டு. கி.ரா.வின் புத்தகங்களை அன்னமே தொடர்ந்து வெளியிட்டது. இன்றும்கூட புத்தகக் காட்சிகளில் அன்னம் கடைகளில் கி.ரா.வின் புத்தகங்களைத்தேடி பெரும் வாசகர் கூட்டம் மொய்ப்பது ஒரு பதிப்பாளராக மீராவுக்கு கிடைத்த வெற்றியின் அடையாளம்.
கட்டமைப்பில் அன்னம் பதிப்பகம் ஒரு குடிசைத் தொழில் போன்ற தோற்றத்தில் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அது ஒரு பதிப்பு இயக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. மார்க்ஸிய இயக்கத் தொடர்புகளோடு எழுத ஆரம்பித்த இளம் எழுத்தாளர்களுக்கு பெரும் வாசக வரவேற்பைப் பெற்றுத்தந்தது அன்னம் பதிப்பகம்தான்.
பதிப்பித்த நூல்களுக்கான சன்மானத்தைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தவர் மீரா. இன்றும்கூட பெரும்பாலான பதிப்பாளர்களால் அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை.
மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக பாரதி கவிதா மண்டலம் அமைக்க வேண்டும் என்று மீரா ஆசைப்பட்டார். சிறுபிள்ளையாக பர்மாவில் வாழ்ந்த காலத்தைப் புதினமாக்கவும் மீரா ஆசைப்பட்டார். இப்படிப் பல ஆசைகளையும் சுமந்த இதயம் அவருடையது. ஆனால், இவை யாவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத ஆசைகள் என்பதுதான் முக்கியமான விஷயம்.
-வியாகுலன், கவிஞர்,
தொடர்புக்கு: ananya.arul@gmail.com
(செப்டம்பர் - 1 கவிஞர் மீராவின் நினைவு நாள்)