இலக்கியம்

கவிதை என்னும் நம்பிக்கை

வெளி ரங்கராஜன்

இந்த காலை ஒரு மகத்தான சோம்பலுடன் எழுகிறது.

அதைக் கொண்டாட நாம் மது விடுதிக்குள் நுழைகிறோம் -என்றபடி கவிதையை ஒரு விடுதலையாகவும், கொண்டாட்டமாகவும் காணுகிறார் கவிஞர் பயணி. பூச்சுக்களோ, பாவனைகளோ அற்று வாழ்வின் யதார்த்தத்தை நேரடியாக உரையாடுகிறார். பாசாங்கற்ற அந்த நேரடித்தன்மையில் வெளிப்படும் பொறிகள் கவிதைக்கான கணங்களை வழங்குகின்றன.

இன்று வாழ்க்கை குரூரங்கள் நிரம்பியதாக இருக்கிறது. உறவு நிலைகள் சீர்குலைந்துள்ளன. அரசு மற்றும் அமைப்புகளின் அதிகாரங்களால் தனிமனிதன் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறான். கவிஞனும் இந்தத் தளத்தில்தான் வாழ்க்கையை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வாழ்வினூடாக இந்த இருப்பில் எஞ்சியிருப்பது அவனுடைய உடல் மட்டுமே. நம்பிக்கைகள் பொய்த்த நிலையில் பெண்ணே அவனுக்கு ஒரே பாதுகாப்பாக இருக்கிறாள். இந்நிலையில் எழுத்தை இக்கடினத்திலிருந்து மீளும் நம்பிக்கையாகப் பார்க்கும் கவிஞரிடமிருந்து இவ்வார்த்தைகள் ஒலிக்கின்றன.

நாமனைவரும் அலைந்துகொண்டே இருக்கிறோம்

நம்மீது சாபத்தின் சாம்பல்நிறம் படிந்திருக்கிறது

இன்றைய அடையாள நெருக்கடி மற்றும் நிச்சயமின்மையை வாழ்வின் நியதியாகப் பார்த்து சரளமான சொல்லாடல்களால் பகிர்ந்துகொள்ளும் இக்கவிஞர் ஆத்மாநாம், ஸ்ரீநேசன் போன்ற கவிஞர்களால் உத்வேகம் பெற்றவர்.

மீள மேலும் மூன்று வழிகள்,

பயணி

விலை: ரூ.70/- , புது எழுத்து வெளியீடு, 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம்-12 தொலைபேசி: 9042158667

SCROLL FOR NEXT