உறையூர்த் தெற்கு ராஜவீதியில் இருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில் தென்னாடு எங்கும் புகழ்வாய்ந்திருந்தது. காஞ்சியில் உள்ள மகேந்திர சக்கரவர்த்தியின் பேர் பெற்ற சித்திர மண்டபம் கூட, உறையூர்ச் சித்திர மண்டபத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள் பேசுவது சகஜமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவும் இளவரசர் விக்கிரமனும் வெண் புரவிகளின் மீது ஏறி இந்தச் சித்திர மண்டபத்தின் வாசலை அடைந்த அதே சமயத்தில், அங்கே படகோட்டி பொன்னனும் வந்து சேர்ந்தான்.
இந்த அகாலவேளையில் மகாராஜாவைப் பார்க்க முடியுமோ என்னவோ என்ற கவலையுடன் வந்த பொன்னன் திடீரென்று மகாராஜாவைப் பார்த்ததும் இன்னது சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். “மகாராஜா...” என்னும்போதே அவனுக்கு நா குழறியது. அந்தக் குழறிய குரலைக் கேட்டு மகாராஜாவும் இளவரசரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“பொன்னா! நீ எங்கே வந்தாய்?” என்றார் மகாராஜா. பொன்னனின் மௌனத்தைக் கண்டு ஒருவாறு அவன் வந்த காரணத்தை ஊகித்தவராக, குதிரை மீதிருந்து கீழிறங்கினார். இளவரசர் விக்கிரமனும் லாவகமாகக் குதிரை மீதிருந்து குதித்தார்.
“பொன்னா! இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள்!” என்றார் மகாராஜா. அருகே தீவர்த்தி வைத்துக் கொண்டு நின்ற ஏவலாளனிடம் இருந்து பொன்னன் தீவர்த்தியை வாங்கிக் கொண்டான். அந்த வேளையில் மகாராஜா எதற்காக சித்திர மண்டபத்துக்கு வந்திருக்கிறார் எதற்காகத் தன்னை தீவர்த்தியுடன் பின் தொடரச் சொல்கிறார் என்பது அவனுக்குப் புரியாவிட்டாலும், மகாராஜா தன்னைத் திரும்பிப் போகச் சொல்லாமல் தம்முடன் வரும்படி சொன்னதில் அளவிலாத குதூகலமுண்டாயிற்று. மகாராஜாவும் இளவரசரும் முன் செல்ல; பொன்னன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சித்திர மண்டபத்துக்குள் புகுந்தான்.
அந்தச் சித்திர மண்டபத்துக்குள் முதல் முதலாகப் பிரவேசிக்கிறவர்களுக்கு “நமக்குள்ள இரண்டு கண் போதாது; இரண்டாயிரம் கண் இருந்தால் இங்கேயுள்ள சித்திரங்களை ஒருவாறு பார்த்துத் திருப்தியடையலாம்” என்று தோன்றும். அந்த விஸ்தாரமான மண்டபத்தின் விசாலமான சுவர்களில் விதவிதமான வர்ணங்களில் பலவகைச் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. அந்த மண்டபத்தைத் தாங்கிய சிற்ப வேலைப்பாடுள்ள தூண்களிலும் சித்திரங்கள் காணப்பட்டன.
மேல் விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன. ஒரு சுவரில் ததீசி முனிவரிடம் இந்திரன் வச்சிராயுதத்தைப் பெறுவது, இந்திரன் விருத்திரா சுரனைச் சம்ஹரிப்பது, பிறகு இந்திரலோகம் வருவது, தேவர்களும் தேவமாதர்களும் இந்திரனை எதிர்கொண்டு வரவேற்பது. இந்திரனுடைய சபையில் தேவ மாதர்கள் நடனம் புரிவது போன்ற காட்சியைச் சித்திரித்திருக்கிறது.
இன்னொரு பக்கத்தில், திருப்பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும் வாஸுகியைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடையும் பிரம்மாண்டமான காட்சியைச் சித்திரித்திருந்தது.
அடுத்தாற்போல, பரமசிவனுடைய தவத்தைக் கலைப்பதற்குக் காமதேவன் மலர்க்கணை தொடுப்பது முதல் குமரப் பெருமான் ஜனனம் வரையிலும் உள்ள காட்சிகள் காணப்பட்டன. இந்த உருவங்கள் எல்லாம் கேவலம் உயிரற்ற சித்திரங்களாகத் தோன்றவில்லை. கால், கை, முகம் இவற்றின் சரியான அளவு எடுத்துச் சாமுத்திரிகா லட்சணத்துக்கு இணங்க எழுதப் பட்டிருக்கவும் இல்லை. ஆனாலும், அந்த உருவங்களின் ஒவ்வொரு அவயத்திலும், காணப்பட்ட நெளிவும் முகத்தில் பொலிந்த பாவமும், தத்ரூபமாக அந்தத் தேவர்களின் முன்னால் நாம் நிற்கிறோமென்னும் மயக்கத்தை உண்டாக்கின.
பிரதி மாதம் மூன்று தினங்கள் இந்தச் சித்திர மண்டபம் பிரஜைகள் எல்லோரும் பார்ப்பதற்கு என்று திறந்து வைக்கப்படுவது உண்டு. அவ்வாறு திறந்திருந்த நாட்களில் பொன்னன் இரண்டு மூன்று தடவை இந்தச் சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்தச் சித்திரங்கள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன. ஆனாலும் இன்று அவற்றை நின்று பார்க்க முடியாதபடி மகாராஜாவும் இளவரசரும் முன்னால் விரைந்து போய்க் கொண்டிருந்தபடியால், பொன்னனும் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்து சென்றான்.
- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்...