எஸ்.வி.ஆர். என்று அழைக்கப்படும் மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை டிசம்பர்-2014 முதல் டிசம்பர்-2015 வரை எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பு இது. கலை, இலக்கியம், வரலாறு குறித்த ஆழமான சிந்தனைகளை இந்தக் கட்டுரைகளில் பதிவுசெய்துள்ளார் எஸ்.வி.ஆர். மார்க்ஸிய-பெரியாரியப் பார்வையோடு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் உலக, இந்திய, தமிழக ஆளுமைகள் பலரைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குறித்த நினைவஞ்சலிக் கட்டுரையில், அவரின் ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பையும் எஸ்.வி.ஆர். விவரிக்கிறார். ‘போருக்கு எதிரான குரல்கள்’ கட்டுரையில் நாவலாசிரியர், கவிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் எனப் பன்முகத்திறன் மிக்க குயெந்தர் க்ராஸ், லத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்த எடுவர்டோ காலியானோ என இருவரின் மறைவையும் நினைவுகூர்வதோடு, போருக்கு எதிராக உலக மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியத்தையும் எஸ்.வி.ஆர். வலியுறுத்தியுள்ளார். லத்தீன் அமெரிக்கப் புரட்சிப் பாடகர் விக்டர் ஹாரா பற்றியும், மலம் அள்ளும் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடும் பெஜவாடா வில்ஸனைப் பற்றிய கட்டுரையும் நம்மை உத்வேகம் பெற வைக்கின்றன.
2015 நவம்பரில் சென்னையில் பெருமழை கொட்டுவதற்கு முந்தைய நாட்களில், சென்னையில் இருக்க நேரிட்ட சூழலை எழுதும் எஸ்.வி.ஆர், ‘செப்டம்பரிலும் அக்டோபரிலும் அவ்வப்போது சிறிது நீர்காட்டிச் சென்ற மழைப் பொழிவுகளைச் சட்டென்று இழுத்துக்கொள்ளத் தன் நாக்கைத் தவளை போல் எப்போதும் நீட்டிக்கொண்டிருந்தது மண் - மீண்டும் வராதா என்னும் ஏக்கத்தை நம்மிடம் விட்டுவிட்டு’ என்கிறார். எஸ்.வி.ஆரின் விவரிப்புமொழிக்கு ஒரு உதாரணம் இது.
கூண்டுப் பறவைகள்
பறந்தன பாடின…
எஸ்.வி.ராஜதுரை
விலை: ரூ. 260.
வெளியீடு: என்.சி.பி.எச்., சென்னை-600098
044-26241288