புத்தக வாசிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்புவெறுப்பு, தனிப்பட்ட செயல்பாடுகளைச் சார்ந்ததுதான். எனினும் எந்தவொரு நல்ல செயல்பாட்டையும் குழுவாகவும் சமூகமாகவும் இணைந்து செய்யும்போது அதற்குக் கிடைக்கும் பலன் மிகப் பெரியது. ஆகவே, புத்தக வாசிப்பின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மாற்றத்தைப் பள்ளி, கல்லூரிகளிலிருந்தே தொடங்கலாம். மாணவர்கள் தங்கள் வகுப்பு அளவிலோ, பள்ளி அளவிலோ ஒரு வாசிப்பு மன்றத்தை உருவாக்க ஆசிரியர்கள் உதவலாம். குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாம். இதற்கு முன்னுதாரணமாக திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திகழ்கிறார்கள்.
புத்தகங்களைத் தாங்கள் வாசிப்பது மட்டுமல்லாமல் தங்கள் கிராமத்தினருக்கும் அந்த மாணவர்கள் எடுத்துச் செல் கிறார்கள். மேலராதாநல்லூரில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்கத் தூண்டுகிறார்கள் மாணவர்கள். அந்தப் புத்தகங்களை அவர்கள் படித்துவிட்டால் மற்றொரு வீட்டிலிருந்து புத்தகத்தை அவர்களுக்கு மாற்றிக்கொடுக் கிறார்கள். இந்த மாணவர்களுக்கு உறுதுணையாக அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களைக் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இம்மாணவர்களைப் படிக்க வைத்துள்ளனர் ஆசிரியர்கள்!
இவையெல்லாம் பாடத்திட்டத்திலோ கல்வித் திட்டத்திலோ இல்லாத விஷயங்கள்தான். ஆனால், பாடத்திட்டங்களும் கல்வித் திட்டங்களும் மட்டுமே மேதைகளை உருவாக்குவதில்லையல்லவா! இது போன்ற அதிசயங்களின் பின்னணியில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் உள்ள, புதுமை எண்ணங்கள் கொண்ட ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி அமைந்தால் எவ்வளவு மாற்றங்கள் நிகழும்!
ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரிகளிலும் புத்தக வாசிப்புக்கென மன்றங்களை ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து உருவாக்க வேண்டும். பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தக வாசிப்பென்பது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் எவ்வளவு இன்றியமையாதது என்பதைப் பெற்றோர்களுக்கு உணர்த்தி, அவர்களையும் புத்தக மன்றங்களில் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் புத்தக மன்ற நிகழ்வுகளுக்கு அவ்வப்போது அழைத்துவந்து மாணவர்களிடையே கலந்துரையாடச் செய்ய வேண்டும். தங்கள் புத்தக வாசிப்பு குறித்துப் பேசும்படியும் எழுதும்படியும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இது சீராகத் தொடரும் பட்சத்தில் மனப்பாடக் கல்விக்கு மாணவர்கள் விடை கொடுத்துவிட்டு, புரிந்துகொண்டு படித்ததைத் தங்கள் மொழியில் எழுதத் தொடங்குவார்கள். மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஏற்படும் மாற்றம் கல்வித் திட்டத்திலும் பிரதிபலித்து, புரட்சிகரமான மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்!