விருதுகள் சீஸனான இந்த டிசம்பரில் விஷ்ணுபுரம் விருது, சாகித்ய அகாடமி விருது போன்றவற்றுடன் மேலும் சில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஆனந்தாஸ் பீம ராஜா இலக்கிய விருது’ லட்சுமி மணிவண்ணனின் ‘ஓம் சக்தி ஓம் பராசக்தி’ கட்டுரை நூலுக்கும் ராமாநுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ கட்டுரை நூலுக்கும் கிடைத்திருக்கிறது. வாசகசாலை என்ற அமைப்பின் விருதுகள் தஞ்சாவூர் கவிராயர் (கட்டுரை), குணா கவியழகன் (நாவல்), கே.ஜே. அசோக்குமார் (சிறுகதை), கதிர்பாரதி (கவிதை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருதாளர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!
தமிழில் அக்ஷய முகுலின் நூல்
கடந்த ஆண்டு வெளியாகிப் பரபரப் பாகப் பேசப்பட்ட ‘Gita Press and The Making of Hindu India’ புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்று விடியல் பதிப் பகத்தால் மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படுகிறது. நூலாசிரியரும் பத்திரிகையாளருமான அக்ஷய முகுல் இந்த நூல் வெளியீட்டில் கலந்துகொள்கிறார். இந்த நூல் வெளியீட்டில் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், விஜயசங்கர் ராமச்சந்திரன் ஆகியோரும் ஆய்வாளர் வ. கீதாவும் கலந்துகொள் கிறார்கள்.
விசாகப்பட்டினம் ஷாஜி காரு!
இலக்கியப் பரிச்சயம் உள்ள திரைப்பட இயக்குநர்களால் எழுத் தாளர்களெல்லாம் நடிகரா கும் போக்கை சமீப காலத் தில் கண்டுவருகிறோம். மு. ராமசாமி, விக்ர மாதித்யன், வேல. ராம மூர்த்தி, ஒரு சீனில் சாரு நிவேதிதா போன்றோரைத் தொடர்ந்து இசை எழுத்தாளர் ஷாஜியும் திரைப்படங்களில் அறிமுகமானார். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மான் கராத்தே’ போன்ற படங்களின் மூலம் நடிகராக அரிதாரம் பூசியிருந்தார். தமிழ் எழுத்தாளர் கோலிவுட் நடிகராக ஆனார் என்ற பரிணாமத்தைத் தாண்டியும் இப்போது டோலிவுட் நடிகராகவும் ஆகியிருக்கிறார். ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவரே தெரிவித்த தகவல் இது. விரைவில் ‘விசாகப்பட்டினம் வேங்கட ரெட்டிகாரு’ ரீதியிலான வசனத்தில் ஷாஜியைப் பார்க்கலாம்!
அடிப்படை முதல் அருஞ்சொல் வரை
ஃபேஸ்புக்கில் தமிழுக்கான ஒரு போராளி போல் செயல்பட்டுவருபவர் கவிஞர் மகுடேசுவரன். தமிழ் தொடர்பாக அவர் இதுவரை ஆற்றிய பணிகளின் தொகுப்புபோல் இப்போது ஒரு முக்கியமான வேலையொன்றில் ஈடுபட்டிருக்கிறார். ‘அடிப்படை முதல் அருஞ்சொல் வரை’ விளக்கம் கூறும் புத்தகம் அச்சில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்!
சிறுகதை: ஒரு சுருக்கமான ஆய்வு!
கலை இலக்கியத்துக்கென்று குறிப்பிடத்தகுந்த இடத்தை ஒதுக்கும் ‘தி கார்டியன்’ இதழின் சமீபத்திய முக்கியமான பங்களிப்பு உலகச் சிறுகதைகளின் வரலாற்றைப் பற்றி வெளியிட்ட பதிவுகள்! எட்கர் ஆலன் போ, மாப்பசான், யூவான் ரூல்ஃபோ, சாமுவேல் பெக்கட், இதாலோ கால்வினோ என்று நீளும் பட்டியலில் சமகால எழுத்தாளர்கள் ராபர்ட்டோ பொலானோ உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விரிவாக எழுதியிருக்கிறார் ‘தி கார்டியன்’ எழுத்தாளர் க்ரிஸ் பவர். இதை முன்னோடியாகக் கொண்டு தமிழிலும் செய்துபார்க்கலாம்!