இலக்கியம்

கடவுளின் நாக்கு 23: ஒடோமி கதை

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு மனிதனும் தன்னை மட்டுமே கஷ்டங்கள் துரத்துவதாகவே எண்ணி, நினைத்து வருந்துகிறான். கஷ்டகாலத்தில் மனிதர்களுக்கு துணையாக இருப்பது ஆறுதலான வார்த்தைகள்தான். அதை எப்படி பயன்படுத்துவது என்றுதான் நாம் அறிவதில்லை.

ஒருநாள் என் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் இருந்து ஒரு காக்கை குஞ்சு கீழே விழுந்துவிட்டது. உடனே காகங்கள் கூட்டமாக ஒன்றுகூடி, அதைக் காப்பாற்ற எத்தனித்தன. குஞ்சு எழுந்து இயலாமல் தடுமாறியது. காகங்கள் ஒன்றுகூடி கரைந்து சத்தமிட்டன. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மனதை பிசைந்தது. ஏதோ ஒரு காகத்தின் குஞ்சு கஷ்டப்பட்டால் நமக்கென்ன என காகங்கள் சும்மா இருக்கவில்லை..

ஒருநாள் குழிக்குள் விழுந்துவிட்ட யானைக் குட்டியைக் காப்பாற்ற காட்டு யானைகள் ஒன்றுசேர்ந்து முயன்றதையும், காப்பாற்ற முடியாமல் போனபோது கண்ணீர்விட்டபடியே குழியைச் சுற்றிச் சுற்றி வந்ததையும் தொலைக்காட்சியில் ஒருநாள் பார்த்தேன்.

யானைகளுக்கு அடுத்தவர் கஷ்டத்துக்கு உதவி செய்யுங்கள் என்று யாரும் பாடம் நடத்தியதில்லை. மனிதர்களுக்குத்தான் எதையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஆயிரம் அறத்தைப் புகட்டினாலும் மனிதன் சுயநலத்தைவிட்டு எளிதில் வெளிவரவே மாட்டான்.

ஒரு காலத்தில் விவசாயிக்கு கை காலின்றி ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ‘லெப்போ’. அவன் புழுவைப் போல ஊர்ந்து கொண்டிருப்பது பெற்றோருக்கு வருத்தம் தந்தது. ‘லெப்போ’ தனது தந்தையிடம், தான் கடவுளைச் சந்தித்து மன்றாடப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டான். அவன் உருண்டபடியே போய்க் கொண்டிருந்தபோது, ஒரு விவசாயி ‘‘எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?’ ‘ எனக் கேட்டான்.

‘‘கடவுளைக் காணப் போய்க்கொண்டிருக்கிறேன்!’’ என்று ‘லெப்போ’ சொன்னபோது, ‘‘கடவுளை பார்த்தால் எனக்காக ஒரு கேள்வி கேள். நான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஏன் முன்னேற முடியவில்லை என்பதை அறிந்துகொண்டு வா’’ என்றான்.

இன்னொரு ஊரில் ஒரு நெசவாளி , ‘‘நானும் ஐந்து சகோதரர்களும் ஒன்றாக நெசவு நெய்கிறோம். சகோதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். நான் மட்டும் நோயாளியாக இருக்க என்ன காரணம் என கேள்வி கேட்டு வா…” என்றான்.

கடவுளைக் காண, இன்னொரு ஊரைக் கடந்து சென்றபோது லெப்போவிடன் ஒரு செல்வந்தப் பெண் ‘‘நீ கடவுளை பார்த்தால் எனக்கு எல்லா செல்வங்களும் இருந்தும் குழந்தை செல்வம் இல்லாமல் போனது ஏன், எனக் கேட்டு வா’’ என்றாள்

மூன்று கேள்விகளையும் மனதில் நிறுத்திக்கொண்டு, கடவுளைத் தேடி அலைந்தான் ‘லெப்போ’. வருஷங்கள் ஓடின. கடவுளைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்து போனான்.

முடிவில் ஒருநாள் சாலையில் கண் தெரியாத ஒரு கிழவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, தனது வாயிலேயே நீரை உறிஞ்சிக் கொண்டுவந்து, கிழவர் மீது தெளித்து எழுப்பினான் ‘லெப்போ’.

மயக்கம் தெளிந்த கிழவர், ‘‘நீ யார்?’’ எனக் கேட்டார்.

‘‘என் பெயர் ’லெப்போ’’. எனக்கு கை காலில்லை. அதை கேட்டு வாங்க கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!’’ என்றான்

அதைக் கேட்ட கிழவர், ‘‘எனக்கு கடவுளின் வீடு தெரியும். அதைச் சொல்ல வேண்டும் என்றால் உன் கண்களை ஈடாகத் தர வேண்டும்!’’ என்றார். ‘லெப்போ’ உடனே தன் கண்களைத் தோண்டி எடுத்து அந்தக் கிழவரிடம் நீட்டினான்.

மறுநிமிடம் கிழவரின் உருவம் மறைந்து, கடவுள் அவன் முன்னால் தோன்றினார். ‘லெப்போ’வுக்கு உடனே கைகால்கள் உருவாகின. சந்தோஷத்துடன் அவன் தன்னிடம் விவசாயியும், நெசவாளியும், பெண்ணும், கேட்ட கேள்விகளைக் கடவுளிடம் கேட்டான்.

கடவுள் பதில் சொன்னார்:

‘‘விவசாயி தனது நிலத்தில் விளைந்த தானியங்களைக் கூலியாட்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில்லை. அதனால் அவன் கஷ்டப்படுகிறான். நெசவாளியோ, தனது சகோதரர்களின் உழைப்பைத் திருடி பொருள் சேர்க்கிறான். ஆகவே, அவன் நோயாளியாக இருக்கிறான்!’ என்றார் கடவுள்.

‘‘சரி, அந்தப் பெண்ணுக்கு ஏன் குழந்தை இல்லை?’’ என்று கேட்டதற்கும் ‘‘அவளிடம் அன்பே இல்லை. பணப் பேயாக இருக்கிறாள். எப்போது தனது செல்வத்தை இல்லாதவர்களுக்கு பகிர்ந்து தருகிறாளோ, மற்ற குழந்தைகளைத் தன் குழந்தையைப் போல நினைக்கிறாளோ… அப்போது அவளுக்குக் குழந்தைப் பிறக்கும்!’’

கடவுளின் பதில்களைக் கேட்டு, ‘நமது செயல்களே நமது கஷ்டத்துக்கான மூலக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட ‘லெப்போ’ கடவுளிடம் கடைசியாக கேட்டான்: ‘‘மனிதனுக்கு கை கால்களை எதற்காக படைத்தீர்கள்?’’

’’ஓடோடிச் சென்று உதவி செய்ய கால்களையும், அள்ளி தரவும் அரவணைக்கவும் கைகளையும் படைத்தேன்!’’ என்றார் கடவுள். ’நமது கை கால்கள் நமக்குரியது மட்டுமில்லை; அடுத்தவர் துயர் துடைப்பதற்குமானது’ என்பதை புரிந்துகொண்டான் ‘லெப்போ’

இந்தக் கதை ‘ஒடோமி’ பழங்குடி மக்களால் சொல்லப்படுகிறது. கதையின் வயது ஆயிரம் வருஷத்துக்கு மேல் இருக்கும். என்றாலும், அது சொல்லும் உண்மை காலத்தைத் தாண்டி ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கிறது!

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

SCROLL FOR NEXT