ஒரு அமைப்புக்கு உள்ள எல்லாப் பலவீனங்களையும் கொண்டதுதான் சாகித்திய அகாடமியும். ஒரே ஒரு நாவலை மட்டுமே எழுதியவருக்கு விருது வழங்கியது முதல், வருடக் கணக்காக எழுதிச் சாதனை புரிந்தவரைக் கெளரவிக்காமல் விட்டதுவரை பல பிறழ்வுகளையும் நெருடல்களையும் கொண்டதுதான் சாகித்ய அகாடமி நிறுவனம். ஆனால் யதேச்சையாகவோ அல்லது உண்மையான பொறுப்புணர்ச்சியுடனோ 2015-ம் ஆண்டுக்கான விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1962-ல் வண்ணதாசனின் முதல் சிறுகதை, ‘புதுமை’ இதழில் வெளிவருகிறது. அன்று முதல் இந்த 2016 டிசம்பர் ‘அம்ருதா’ இதழில் வெளியான சிறுகதை வரை வண்ணதாசன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். சிறுகதைகள் மட்டுமின்றி கவிதைகளும் கட்டுரைகளும்கூட எழுதிவந்திருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் வண்ணதாசனை 1970லேயே அங்கீகரித்துவிட்டது. இலக்கிய ரசனை மிக்க வாசகர்கள், தங்களது அபிமானத்துக்குரிய படைப்பாளியாக அப்போதே அவரை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
இந்த வாசக அங்கீகாரத்தை அன்றிருந்த எந்த விமர்சகரின் கட்டுரையும் உருவாக்கித் தரவில்லை. அது தானாகவே உருவானது. அவரது சிறுகதைகளைப் படித்த வாசகர்கள் வாய்மொழியாக ஒருவருக்கொருவர் பேசிப் பகிர்ந்துகொண்டதன் பேரில் உருவானது. இந்த வாசக கவனத்துக்குப் பிறகுதான் க.நா.சுப்ரமணியம், வெங்கட் சுவாமிநாதன் போன்ற விமர்சகர்கள் வண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிட ஆரம்பித்தார்கள்.
அவருடைய பெயர் கல்யாணசுந்தரம். அவருடைய வீட்டாரும் நண்பர்களும் அவரைக் ‘கல்யாணி’ என்பார்கள். இந்தக் கல்யாணியைத்தான் அவர், கவிதைகளுக்காக ‘கல்யாண்ஜி’யாக்கிக்கொண்டார். நானும் அவரும் திருநெல்வேலி சாப்டர் பள்ளி ஈஸ்டர்ன் பிராஞ்சில் படித்தோம். ஆனால் அங்கே படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவரை எனக்குத் தெரியாது. என்னைவிட இரண்டு வகுப்புகள் முன்னதாக அவர் படித்துக் கொண்டிருந்தார். இது தற்செயலாக அமைந்தது.
‘கண்ணதாசன்’ இதழில் வெளிவந்த ‘கங்கா’, ‘தீபம்’ இதழில் வெளிவந்த ‘வேர்கள்’ முதலான கதைகளின் மூலம்தான் வண்ணதாசன் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமாயிற்று. 1970 ஜூன் வாக்கில்தான் அவருடன் நேரடியான தொடர்பு ஏற்பட்டது. அவருடைய வாசகனாகத்தான் நான் அவருக்கு அறிமுகமானேன். இந்த நாற்பத்தாறு ஆண்டுகளாக நான் அவரது வாசகனாகவும் குடும்ப நண்பனாகவும் இருந்துவருகிறேன்.
தன் சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றைப் போலவே வண்ணதாசனும் அதிர்ந்து பேசத் தெரியாதவர்; மென்மையானவர்; மிகுந்த அழகுணர்ச்சி மிக்கவர். அவருடைய பேச்சு, உடைகளின் தேர்வு எல்லாவற்றிலும் அவரது படைப்புகளைப் போலவே ஒரு நறுவிசுடன் கூடிய, மனதை உறுத்தாத மெல்லுணர்வும் அழகும் தளும்பி வடியும். அவரது படைப்புகளில் அவ்வளவாகக் காணப்படாத மெலிதான நகைச்சுவை உணர்வும் தனிப்பட்ட உரையாடலில் அவரிடம் உண்டு.
நளினமும் செறிவும் கொண்ட நடை
அவருடைய மொழிநடை அபாரமானது. மெனக்கெட்டு உருவாக்கிக்கொண்ட நடையல்ல அது. இன்று வண்ணதாசன் என்றும் கல்யாண்ஜி என்றும் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் அவருக்குக் கைகூடி வந்திருக்கிற நடை, நளினமும் செறிவும் மிக்கது. இந்தப் பாஷையின் ஊற்று எங்கிருக்கிறதென்று அவருடன் பழகியும், தொடர்ந்து அவரை வாசித்தும்வருகிற என்னால் யூகிக்க இயலவில்லை என்பதே உண்மை. ஆனால் ஒருகாலத்தில் அவர் எனக்கு எழுதிவந்த எண்ணற்ற கடிதங்களிலுள்ள நடையும் தொனியும் அடைந்துள்ள நீட்சியோ இதுவென்று தோன்றுகிறது.
அவரை ‘வர்ணனையாளர்’ என்று மொண்ணையாகக் கூறுகிறவர்கள் உண்டு. கதையிலோ உரைநடையிலோ வர்ணனையில்லாமல் எதுவுமே சாத்தியம் அல்ல. இலக்கியத்தின் அடிப்படையே வர்ணனை சார்ந்துதான் இயங்குகிறது. கவிதைகளாகட்டும் சிறுகதைகளாகட்டும், கடிதம் உள்பட அவர் எழுதியுள்ள முன்னுரைகளாகட்டும் அவருக்கே உரிய தனித்துவமான, முன்னுதாரணம் கூற முடியாத மொழிநடையை அவர் இந்தப் பாஷைக்குத் தனது கொடையாகத் தந்துள்ளார். மெளனி, லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமனுக்குப் பிறகு இவ்வளவு அடர்த்தியும், நளினமும் மிக்க மொழிநடையை எந்த இலக்கிய கர்த்தாவும் கொண்டிருக்கவில்லை. மேற்கூறிய மூவரிடமும்கூட வண்ணதாசன் அளவுக்குச் செறிவு இல்லை என்பேன்.
அவரது ஆரம்ப காலச் சிறுகதைகளான ‘கங்கா’, ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’, ‘ஒரு உல்லாசப் பயணம்’, ‘பாடாத பாட்டெல்லாம்’ முதலான சிறுகதை களிலிருந்து இம்மாத ‘அம்ருதா’ இதழில் வெளி வந்துள்ள சிறுகதைவரை வண்ணதாசன் மேற்கொண் டுள்ள படைப்பாக்கத்தின் பயணம் வியக்கவைப்பது. தனது எழுத்து முறையை அவர் தொடர்ந்து விருத்தி செய்துவந்திருக்கிறார். கவித்துவமிக்க அவரது மனவெளியிலிருந்து உரைநடையைக்கூடக் கவிதையாக வெளிப்படுத்துகிறார்.
வண்ணதாசனின் படைப்புலகில் உலவும் மனிதர்கள் எளியவர்கள். அவர் விவரிக்கிற ஆறுகள், பறவைகள், தாவரங்கள், பூக்கள், தெருக்கள், சின்னஞ்சிறு உயிரிகள் எல்லாம் அவர் கதாபாத்திரங்களைப் போல் உயிர்ப்பானவை. எல்லாவற்றையும் அவர் கவனப்படுத்துகிறார். இந்த மண்ணின் சகல அம்சங்களிலும் அக்கறை கொண்டுள்ளார்.
கல்யாண்ஜியின் கவிதைகளிலும், வண்ண தாசனின் சிறுகதைகளிலும் சலிப்பையோ எரிச்சலையோ காண முடியவில்லை. இந்த உலகத்தை அவர் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். அவரது லெளகீக வாழ்வே இப்படித்தான் இருக்கிறது. வாழ்வை அதன் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்வதற்கு ஒரு மனப் பக்குவம் வேண்டும். இது அவரிடம் உள்ளதைப் போலவே அவரது படைப்புகளிலும் உள்ளது.
வண்ணதாசன், 1946-ல் திருநெல்வேலியில் பிறந்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். 1970-களில் எழுதத் தொடங்கினார். இவரது தந்தையான இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரனும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார். ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’, ‘தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’, ‘சமவெளி’ போன்றவை அவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகள். ‘சின்னு முதல் சின்னுவரை’ என்ற குறுநாவலும் எழுதியுள்ளார். ‘ஒரு சிறு இசை’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரது புத்தகங்களில் பெரும்பாலானவை சந்தியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளன.
ஓவியம்: கவிஞர் றஷ்மி
- வண்ணநிலவன் மூத்த எழுத்தாளர், ‘கடல் புரத்தில்’ ‘கம்பா நதி’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.